வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை கொலை செய்வதற்கு ஈரானின் படைப்பிரிவுகள் முயற்சி செய்ததாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட்டர் ஹெக்சேத் குற்றம் சாட்டி உள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதல்களில் ஈரானில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இதையடுத்து மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், அமெரிக்க அதிபர் ட்ரம்பை கொலை செய்வதற்கு ஈரானின் ஒரு பிரிவு மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் அந்த பிரிவின் தலைவர் அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டதாகவும் அமைச்சர் பீட்டர் ஹெக்சேத் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தையின் போது ஈரான் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை என்றும் சதித் திட்டங்களை தீட்டுவதற்கும், தாக்குதலை நடத்துவதற்காகவும் காலத்தை கடத்தியதாக அவர் குற்றம் சாட்டினார். அமெரிக்காவின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து, அதிபர் ட்ரம்ப் துணிச்சலான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார். ஈரானின் அணுசக்தி மற்றும் ராணுவக் கட்டமைப்புகள் சிதைக்கப்பட்டுள்ளதாகவும் 2ம் உலக போருக்கு பிறகு, முதன்முறையாக ஒரு அமெரிக்க நீர்மூழ்கி கப்பல், ஈரானிய போர்க்கப்பலை மூழ்கடித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
