×

கடைகள் அமைப்பதை உரிமையாக கோர முடியாது மெரினாவில் கடை ஒதுக்கீடு விவகாரம் மாபியா கும்பல் உள்ளதாக சந்தேகம்: உயர் நீதிமன்றம் பரபரப்பு கருத்து

 

மாதவரம்: மெரினாவில் கடைகள் அமைக்க உரிமையாக கேட்க முடியாது என்று தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தில் மாபியா கும்பல் பின்னணியில் உள்ளதாக சந்தேகம் தெரிவித்துள்ளது. மெரினா கடற்கரையில் கடைகளை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மெரினாவில் உணவு பொருட்கள், பொம்மை கடைகள், பேன்சி கடைகள் என 300 கடைகள் மட்டும் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மெரினாவில் ஏற்கனவே கடைகள் வைத்திருந்த 600க்கும் மேற்பட்ட கடை உரிமையாளர்கள், தங்களையும் இந்த வழக்கில் இணைக்க கோரி மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள், கடற்கரைக்கு அருகில் உள்ள வியாபார மண்டலங்களில் மட்டுமே கடைகள் ஒதுக்க வேண்டும். மெரினாவை வியாபார தலமாக மாற்ற அனுமதிக்க முடியாது. கேரளாவின் கோவளம், ஒடிசாவின் புரி, மும்பை மெரைன் டிரைவ் போன்ற கடற்கரைகள் சுத்தமாக பராமரிக்கப்படுகிறது. நீதிமன்றம் தலையிடுவதற்கு முன்பு மெரினா கடற்கரை, கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. கடை உரிமையாளர்களிடம் மாமூல் வசூலித்து விட்டு வழக்கில் தற்போது இணைக்க கோரி மனுத் தாக்கல் செய்ததன் பின்னணியில் மாபியா கும்பல் உள்ளதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

கடைகளை முறைப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தால், அழகான மெரினா கடற்கரையை எதிர்கால சந்ததியினருக்கு விட்டுச் செல்ல முடியாது. கடற்கரையில் கடைகள் அமைப்பதை உரிமையாக கேட்க முடியாது. சென்னை மாநகராட்சி மற்றும் பல்வேறு துறைகள் மூலமும், நாங்களும் நேரில் ஆய்வு செய்ததன் அடிப்படையிலும் 300 கடைகள் மட்டும் அமைக்க உத்தரவிட்டோம். வழக்கில் இணைக்க கோரும் இடையீட்டு மனுக்ககள் மீது பின்னர் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

Tags : Madhavaram ,Chennai High Court ,Marina ,Marina beach ,
× RELATED சென்னையில் 34 இன்ஸ்பெக்டர்கள்...