×

கூடுவாஞ்சேரியில் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்: அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

 

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரியில் நடந்த சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த பொது மேலாளரின் உடல் உறுப்புகளை அவரது குடும்பத்தினர் தானம் செய்தனர். அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் ெசய்யப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட 27வது வார்டு, கே.கே.நகர், 3வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சவுந்தரராஜன் (57). இவர், வண்டலூர் உயிரியல் பூங்கா எதிரே உள்ள தனியாருக்கு சொந்தமான தண்ணீர் கேன் கம்பெனியில் தர கட்டுப்பாட்டு வாரிய பொது மேலாளராக பணியாற்றி வந்தார்.

இவருக்கு அருணா தேவி (52) என்ற மனைவி, சஸ்க்ஷ்விதா (25) என்ற மகள், சஸ்வந்த் (17) என்ற மகன் உள்ளனர். இதில், கூடுவாஞ்சேரி அடுத்த வல்லாஞ்சேரியில் உள்ள தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் படித்து வரும் தனது மகன் சஸ்வந்த்தை பார்ப்பதற்காக கடந்த 28ம் தேதி சவுந்தரராஜன் தனது பைக்கில் கூடுவாஞ்சேரியில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது, வல்லாஞ்சேரி அருகே செல்லும்போது அவருக்கு முன்னால் சென்ற பைக் இடது பக்கம் திரும்பியது. அப்போது, எதிரே பெண் ஒருவர் ஓட்டி வந்த ஸ்கூட்டியில் முன்னால் பைக்கில் சென்றவர் மோதி வலது பக்கத்தில் சாலையில் விழுந்தார். இதனால், கட்டுப்பாடு இழந்த சவுந்தரராஜன் சாலையில் விழுந்த பைக் மீது மோதி தூக்கி வீசப்பட்டார். விபத்தில், படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சவுந்தரராஜனை அப்பகுதி மக்கள் மீட்டு பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில், கூடுவாஞ்சேரியில் உள்ள தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அவர் நேற்று முன்தினம் இரவு மூளைச்சாவு அடைந்தார். இதனையடுத்து, அவரது குடும்பத்தினர் சவுந்தரராஜனின் 2 கிட்னி, 2 கண்கள் மற்றும் கல்லீரல் ஆகியவற்றை தானம் செய்தனர்.

இதனையடுத்து, சவுந்தரராஜன் உடல் அவரது வீட்டிற்கு நேற்று காலை கொண்டுவரப்பட்டது. தகவல் அறிந்ததும், நந்திவரம்-கூடுவாஞ்சேரி திமுக நகர மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி, 27வது வார்டு கவுன்சிலர் கலைச்செல்வன் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் நேரில் சென்று சவுந்தரராஜனின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். மேலும், மூளைச்சாவு அடைந்த சவுந்தரராஜனின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Tags : Brainwreck ,Matravancheri Road ,Matravancheri ,Chengalpattu District ,27th Ward ,Nandiwaram-Uttaravancheri Municipality ,K. K. Nagar ,
× RELATED சென்னையில் 34 இன்ஸ்பெக்டர்கள்...