×

காவல் துறை சார்பில் ரூ.15 கோடி செலவில் 22 திறன்மிகு வகுப்பறைகள் ரூ.75.80 கோடியில் புதிய கட்டிடங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் விஷ்ணுகாஞ்சியில் ரூ.1 கோடியே 62 லட்சத்து 23 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள காவல் நிலையம் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் ரூ.1 கோடியே 2 லட்சத்து 68 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள செங்குன்றம் போக்குவரத்து காவல் நிலையம் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இதேபோல், சென்னை மாவட்டம் கொண்டித்தோப்பில் ரூ.3 கோடியே 31 லட்சத்து 81 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள காவலர்களின் குழந்தைகளை கல்வி மற்றும் விளையாட்டில் வழிநடத்த உடற்பயிற்சிக்கூடம், நூலகம் மற்றும் கல்வி மையம், சென்னை ராஜா அண்ணாமலைபுரம், மருதம் வளாகத்தில் ரூ.1 கோடியே 11 லட்சத்து 97 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள பாதுகாப்பு பிரிவு குற்றப்புலனாய்வு துறையின் புதிய கட்டுப்பாட்டு அறை கட்டிடம் ஆகியவற்றையும் முதல்வர் திறந்து வைத்தார்.

சென்னை தண்டையார்பேட்டை உள்ளிட்ட இடங்களில் தலா ரூ.1 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள காவலர் அங்காடிகள், திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் ரூ.1 கோடியே 11 லட்சத்து 25 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள செங்குன்றம் காவல் உதவி ஆணையர் முகாம் அலுவலகம் மற்றும் குடியிருப்புகளை முதல்வர் திறந்து வைத்தார். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் கட்டப்பட்டு சென்னை – சோழிங்கநல்லூர், அம்பத்தூர் மற்றும் மகாகவி பாரதியார் நகர் ஆகிய இடங்களிலுள்ள 2,138 அடுக்குமாடி குடியிருப்புகளை காவல்துறையினரின் பயன்பாட்டிற்காக வழங்கிடும் அடையாளமாக 5 காவலர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாடகை குடியிருப்பிற்கான ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தலைமை செயலாளர் முருகானந்தம், உள்துறை செயலாளர் தீரஜ் குமார், காவல்துறை தலைமை இயக்குநர் (பொறுப்பு) ஜி.வெங்கடராமன், காவல்துறை தலைமை இயக்குநர் பயிற்சி சந்தீப் ராய் ராத்தோர், தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் வினித் தேவ் வான்கேடே, சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் ஆகியோர் கலந்து கொண்டனர். ரூ.16.20 கோடியில்..: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் ரூ.16.20 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அலுவலகங்கள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

* 5 ஆண்டில் 3,597 குடியிருப்புகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் இந்த 5 ஆண்டுகளில் காவல்துறையின் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் ரூ.622.16 கோடி செலவில் 3,597 காவலர் குடியிருப்புகள், ரூ.79.16 கோடி செலவில் 58 காவல் நிலைய கட்டிடங்கள், ரூ.219.76 கோடி செலவில் 37 காவல்துறை இதர கட்டிடங்கள் மற்றும் ‘உங்கள் சொந்த இல்லம்’ திட்டத்தின் கீழ் ரூ.55.19 கோடி செலவில் 253 குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டுள்ளன.

Tags : POLICE DEPARTMENT ,M.V. ,K. Stalin ,Chennai ,Kanchipuram district Vishnuganchi ,Chozhavar district ,
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...