கட்சி பிரதிநிதிகளுடன் கலெக்டர் ஆலோசனை

கிருஷ்ணகிரி,பிப்.10: கிருஷ்ணகிரியில் வரைவு துணை வாக்குச்சாவடி பட்டியல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், வரைவு துணை வாக்குச்சாவடி பட்டியல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் 1.1.2021ம் தேதியினை அடிப்படையாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத்திருத்தம் தொடர்பான பணிகள் மேற் கொள்ளப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த ஜனவரி மாதம் 20ம் தேதி வெளியிடப்பட்டது. கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு எதிர் வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் 1000 வாக்காளர்களுக்கு அதிகமான வாக்குச்சாவடிகளை இனம்கண்டு துணை வாக்குச்சாவடிகள் பிரிக்க இந்திய தேர்தல் ஆணையத்தால் வழிகாட்டுதல் வழங்கப்பட்டது.

அதனை ஏற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முன்னதாக 6 சட்டமன்ற தொகுதிகளில் 1863 வாக்குச்சாவடிகள் செயல்பட்டு வந்தது.1000க்கு மேற்பட்ட வாக்காளர்கள் கொண்ட 562 வாக்குச் சாவடிகள் புதியதாக இனம் காணப்பட்டு, தற்போது 2425 வாக்குச்சாவடிகளாக இறுதி செய்யப்பட்டுள்ளது.மேற்கண்ட இறுதி செய்யப்பட்ட துணை வாக்குச்சாவடி பட்டியலானது அனைத்து அரசியல் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் ஏதேனும் மாற்றங்கள் இருப்பின் அதன் விவரத்தினை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சதீஸ், ஓசூர் மாநராட்சி ஆணையாளர் செந்தில்முருகன், வருவாய் கோட்டாட்சியர்கள் கிருஷ்ணகிரி கற்பகவள்ளி, ஓசூர் குணசேகரன், தேர்தல் தாசில்தார்  ஜெய்சங்கர் மற்றும் தாசில்தார்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளான திமுகவை சேர்ந்த முன்னாள் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ரவிச்சந்திரன்,மேற்கு மாவட்ட பொருளாளர் ஜெயராமன், அதிமுக காத்தவராயன், தேசியவாத காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் சந்திரமோகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: