×

அரூரிலிருந்து மினி பேருந்து சேவை

அரூர், மார்ச் 4: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் கலசப்பாடிக்கு அரூரிலிருந்து மினி பேருந்து சேவையை மாவட்ட கலெக்டர் சதீஸ், ஆ.மணி எம்.பி., ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவில் கலசப்பாடி மலை கிராமம் உள்ளது. இக்கிராமம் அரூரில் இருந்து 26 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இதில் 16 கி.மீ தூரம் மலைப்பகுதியை உள்ளடக்கியது. இந்த பாதையில் செங்குத்தான மலைகளும், அபாயகரமான வளைவுகளையும் கொண்டுள்ளது. கலசப்பாடி மலை கிராமத்திற்கு நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து சாலை வசதியும், பொது போக்குவரத்து வசதி இல்லாமல் இருந்தது. இதனால் 1500 குடும்பங்கள் வசிக்கக்கூடிய கலசப்பாடி மலைவாழ் கிராம மக்கள், தங்களது விளைநிலங்களில் விளையக்கூடிய பொருட்களை சந்தைப்படுத்துவதற்கும் மற்றும் தினசரி வேலைகளுக்கு அரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு சென்று வருவதற்கும், உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு செல்வதற்கும் மிகவும் சிரமப்பட்டனர்.

மேலும், கலசப்பாடி கிராமத்தில் வசிக்கும் பெண்கள் அரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்தனர். தற்போது, தமிழக முதல்வர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கலசப்பாடி மலை கிராமத்திற்கு தார் சாலை அமைக்கப்பட்டது. இதனை கடந்த வாரம் அமைச்சர் பன்னீர்செல்வம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். தொடர்ந்து, அரூரிலிருந்து கலசப்பாடிக்கு நேற்று மினி பேருந்து சேவையை மாவட்ட கலெக்டர் சதீஸ், ஆ.மணி எம்.பி., மற்றும் அரூர் எம்எல்ஏ சம்பத்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர். தொடர்ந்து பொதுமக்களுடன் பேருந்தில் ஏறி கலசப்பாடி மலை கிராமத்திற்கு சென்றடைந்தனர். வழி நெடுகிலும் உள்ள மக்கள் தங்கள் கிராமத்திற்கு பேருந்து வருவதை மகிழ்ச்சியாக வரவேற்றனர்.

நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் ரூபன் சங்கர்ராஜ், மோட்டார் வாகன ஆய்வாளர் தரணீதர் உள்ளிட்ட தொடர்புடைய அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நகராட்சி துணைத் தலைவர் சூர்யா தனபால், ஒன்றிய செயலாளர்கள் சந்தோஷ்குமார், சந்திரமோகன், செங்கண்ணன், சௌந்தரராசு, முத்துக்குமார், சரவணன், நகர செயலாளர் முல்லைரவி, கம்பைநல்லூர் பேரூராட்சி தலைவர் வடமலைமுருகன், ஐடிவிங் தமிழழகன், பொறியாளர் சென்னைகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Arur ,Kalasappadi ,Pappireddipatti ,Dharmapuri district ,District Collector ,Sathees ,A. Mani MP ,Pappireddipatti taluka ,
× RELATED மாசி மகத்தை முன்னிட்டு மெரினா...