×

அசாம் பா.ஜ கூட்டணியில் தொகுதி உடன்பாடு காங். அணியில் இழுபறி

அசாம் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ மற்றும் காங்கிரஸ் தனித்தனியாக கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. மொத்தம் உள்ள 126 தொகுதிகளில் தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இதில் பா.ஜ கூட்டணியில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், காங்கிரஸ் அணியில் இழுபறி நீடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பா.ஜ கூட்டணியில் மொத்தம் உள்ள 126 இடங்களில் பா.ஜ மட்டும் 86 முதல் 90 இடங்கள் போட்டியிடும் என்று தெரிகிறது.

மற்ற தொகுதிகள் பாஜ தலைமையிலான கூட்டணியில் உள்ள அசாம் கன பரிஷத், ஐக்கிய மக்கள் கட்சி லிபரல் மற்றும் போடோலாந்து மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் என்று தெரிகிறது. பா.ஜ கூட்டணியில் ரபா ஹாசோங் ஜௌதா சங்க்ராம் சமிதி மற்றும் ஜனசக்தி கட்சி போன்ற சிறிய கட்சிகளும் உள்ளன. அந்த கட்சிகளுக்கும் தொகுதி ஒதுக்கப்படுமா என்பது இனிமேல் தான் தெரிய வரும். குறிப்பாக மாநிலங்களவை தேர்தல் முடிந்த பிறகு கூட்டணிகளுக்கான தொகுதி பங்கீடு பற்றிய முழுவிவரம் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் காங்கிரஸ் கூட்டணியில் உடன்பாடு இன்னும் எட்டப்படவில்லை. காங்கிரஸ் செல்வாக்கு சரிந்து வருவதாக கூறி கூட்டணி கட்சிகள் அதிக தொகுதி கேட்பதால் இழுபறி ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் 95 முதல் 100 இடங்களுக்குள் போட்டியிட ஆர்வமாக உள்ளது. கூட்டணியில் உள்ள அசாம் ஜாதிய பரிஷத் மற்றும் ராய்ஜோர் தளம் ஆகியவை தலா 15 இடங்களைக் கோரியுள்ளன. இடதுசாரிக் கட்சிகள் ஏற்கனவே பல தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. இது கூட்டணி பேச்சுவார்த்தையில் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. அசாம் ஜாதிய பரிஷத் 15 தொகுதிகள் கேட்டாலும், 13 இடங்களுக்கு ஒப்புக்கொண்டதாக அதன் தலைவர் லுரின்ஜோதி கோகோய் கூறினார்.

இதில் பத்து இடங்கள் ஏற்கனவே இறுதி செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள மூன்று இடங்கள் குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன, வேட்பாளர்களின் பெயர்களும் விரைவில் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Tags : Assam Pa ,Ja ,Assam Legislature ,Congress ,
× RELATED தேர்தல் தேதி அறிவித்தபின் தொகுதி பங்கீடு பேச்சு: நயினார் விரக்தி