×

பாலக்காடு தொகுதியில் காமெடி நடிகரை களம் இறக்கும் காங்கிரஸ்

கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாலக்காடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான ஷாபி பறம்பில் வெற்றி பெற்றார். இவர் 3 வருடங்கள் எம்எல்ஏவாக இருந்தார். இந்நிலையில் கடந்த இரு வருடங்களுக்கு முன் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இவரை வடகரை தொகுதியில் காங்கிரஸ் நிறுத்தியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையான இந்தத் தொகுதியில் ஷாபி பறம்பில் 1.14 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்பி ஆனார். இதைத்தொடர்ந்து அவர் பாலக்காடு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால் இந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவராக இருந்த ராகுல் மாங்கூட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்நிலையில் இவர் பலாத்கார வழக்குகளில் சிக்கியதை தொடர்ந்து இம்முறை ராகுல் மாங்கூட்டத்திலுக்கு வாய்ப்பு கொடுக்க காங்கிரஸ் மறுத்துள்ளது. இதனால் பாலக்காடு தொகுதியை தக்க வைக்க யாரை நிறுத்துவது என்பது குறித்து காங்கிரஸ் தலைமை தீவிரமாக ஆலோசித்து வந்தது. இதில் முன்னாள் எம்பியும், எம்எல்ஏவுமான கே. முரளீதரனை நிறுத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் வட்டியூர்க்காவு தொகுதியில் மீண்டும் போட்டியிட இவர் விரும்பியதால் பாலக்காடு தொகுதியில் மக்களுக்குத் தெரிந்த ஒரு புதுமுகத்தை நிறுத்த தீர்மானிக்கப்பட்டது. இதன்படி இந்தத் தொகுதியில் மலையாள காமெடி நடிகரான ரமேஷ் பிஷாரடியை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அவரும் சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது.

Tags : Congress ,Palakkad constituency ,Shafi Parambil ,Palakkad ,northern ,
× RELATED தேர்தல் தேதி அறிவித்தபின் தொகுதி பங்கீடு பேச்சு: நயினார் விரக்தி