×

பிரதமர் கூட்டம் முடிந்து சென்றதும் டிடிவி தினகரன் – மாஜி அமைச்சர் ஆதரவாளர்கள் கடும் மோதல்: ஒருவரின் மண்டை உடைந்தது

மதுரை: மதுரை மண்டேலா நகரில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் பிரசார பொதுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது. இதில் பங்கேற்று பேசிவிட்டு பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார். பின்னர், அதிமுக, அமமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பல்வேறு வாகனங்களில் நேற்றிரவு வெளியேறினர். சிந்தாமணி சந்திப்பு அருகே டிடிவி.தினகரன் தனது ஆதரவாளர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மற்றும் அவரது ஆதரவாளர்கள், டிடிவி.தினகரனுக்கு முன்பாக கார்களில் சென்றனர். டிடிவி.தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்களின் வாகனங்கள் தொடர்ந்து ஹார்ன் அடித்து வழி விடுமாறு கேட்டனர்.

ஆனால், ராஜேந்திரபாலாஜி தரப்பில் வழி விட மறுத்து தொடர்ந்து ரோட்டை மறித்துச் சென்றதாக தெரிகிறது. இதனால் டிடிவி.தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் முன்னேறி செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் கார்களை நிறுத்தி இறங்கிய ராஜேந்திர பாலாஜி ஆதரவாளர்களுக்கும், டிடிவி.தினகரன் ஆதரவாளர்களுக்கும் திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரது மண்டை உடைந்தது. இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், விரைந்து வந்து டிடிவி.தினகரன் வாகனத்திற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்து, இருவரது ஆதரவாளர்களையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை கூட்டத்தில் பிரதமர் பேசுவதற்கு முன்பாக ‘படிக்காதவன்’ படத்தின் “ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக பாடு பண்பாடு’’ என்ற பாடலை ஒலிபரப்பினார்கள். ஆனால், கூட்டம் முடிந்ததும் அதிமுகவினரும் அமமுகவினரும் அடித்துக் கொண்டு, மண்டையை உடைத்துக் கொண்டது அவர்களிடையே இன்னும் ஒட்டுறவு ஏற்படவில்லை என்பதையே காட்டுகிறது.

Tags : DTV ,Dinakaran ,Majhi ,Minister ,Madurai ,National Democratic Alliance of ,Parties ,NDP ,Madurai Mandela ,PM ,Modi ,Atamuka ,Amuga ,
× RELATED திமுக – காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது: செல்வப்பெருந்தகை பேட்டி