×

ஊட்டி ரேடியோ வானியல் ஆய்வு மையத்தில் நடந்த தேசிய அறிவியல் தின கண்காட்சியை கண்டு வியந்த மாணவ, மாணவிகள்

ஊட்டி : ஊட்டி அருகேயுள்ள முத்தோரை ரேடியோ வானியல் ஆய்வு மையத்தில் நடந்த அறிவியல் தின விழாவில் இடம் பெற்ற வானியல் ஆராய்ச்சி தொடர்பான கண்காட்சியை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கண்டு வியப்படைந்தனர்.

ஊட்டி அருகேயுள்ள முத்தோரை பகுதியில் ரேடியா வானியல் ஆராய்ச்சி மையம் உள்ளது. இங்கு உள்ள ராட்சத தொலை நோக்கி மூலம் பல்வேறு வானியல் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது பிரபஞ்சம் குறித்த ஆய்வுகள் நடந்து வருகிறது.

இந்த ரேடியோ வானியல் மையத்தில் ஆண்டுதோறும் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான தேசிய அறிவியல் தின விழா நடந்தது. மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை உருவாக்கவும், ஊக்குவிப்பதற்காகவும், பொதுமக்களிடையே அறிவியல் விழிப்புணர்வு கொண்டு வருவதற்காகவும் இவ்விழா கொண்டாடப்பட்டது.

இதையொட்டி நடந்த கண்காட்சியில், ரேடியோ தொலை நோக்கியின் எந்திரவியல்,மின்னியல் மற்றும் மின்னணுவியல் அமைப்புகள், ரேடியோ தொலைநோக்கி கொண்டு நட்சத்திர ஆய்வு,சூரியனையும் சூரிய புள்ளிகளையும் ஆராய்தல், தற்போதையை முன்னணி வானியற்பியல் ஆராய்ச்சி விளக்கங்கள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மற்ற விஞ்ஞான நிறுவனங்களின் கண்காட்சிக்கான கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. பள்ளிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட விஞ்ஞான பரிசோதனை மாதிரிகளும் இந்த கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.

தேசிய அறிவியல் தினத்தையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளிடையே நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பரிசு பெற்ற விஞ்ஞான பரிசோதனை மாதிரிகளும், ஓவியங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவியல் கண்காட்சியை நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களை சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பார்வையிட்டு வியந்தனர்.

Tags : National Science Day ,Ooty Radio Astronomy Research Centre ,Ooty ,Science Day ,Tridorai Radio Astronomy Research Centre ,Tridorai ,
× RELATED கோத்தகிரி தேயிலை தோட்டத்தில்...