×

மஞ்சூர்-ஊட்டி சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக நின்ற செடி, கொடிகள் அகற்றம்

மஞ்சூர் : மஞ்சூர்-ஊட்டி சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வளர்ந்து நின்ற செடி, கொடிகள் வெட்டி அகற்றும் பணி துவங்கியது. நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து ஊட்டி மற்றும் குன்னூர் செல்லும் பிரதான சாலையில் பழைய தாலுகா அலுவலகம் முதல் குந்தாபாலம் மெரிலேண்ட், கைகாட்டி வரை சாலையின் இருபுறங்களிலும் செடி, கொடிகள், முட்புதர்கள் வளர்ந்து நின்றன.

சமீபத்தில் பெய்த மழையில் அந்த செடி, கொடிகள் மேலும் வளர்ந்து சாலையின் இருபுறங்களிலும் பெரும்பகுதியை ஆக்ரமித்திருந்தன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர்.

சாலையோர புதர்களால் எதிரே வரும் வாகனங்களுக்கு இடம் விடுவதிலும் கஷ்டம் ஏற்பட்டு வந்தது. மேலும் கொண்டை ஊசி வளைவுகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு செடி, கொடிகள் ஆக்ரமித்திருந்தன.

சாலையோர புதரில் கரடி, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் தஞ்சம் அடையும் நிலையும் உருவானது. இதனால் அந்த வழியில் செல்லும் பாதசாரிகளும் அச்சத்துடன் பயணித்து வந்தனர். இதனை கருத்தில் கொண்டு நெடுஞ்சாலைதுறை சார்பில் சாலையோர செடி, கொடிகளை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி சாலை பணியாளர்கள் மூலம் தற்போது குந்தாபாலம் பகுதியில் சாலையோர செடி, கொடிகள், முட்புதர்கள் முழுவதுமாக வெட்டி அகற்றப்பட்டு வருகிறது.

Tags : Manjoor-Ooty road ,Manjoor ,Ooty ,Coonoor ,Nilgiris district ,Kundapalam Maryland ,
× RELATED கோத்தகிரி தேயிலை தோட்டத்தில்...