கொல்கத்தா: டி20 உலக கோப்பை சூப்பர் 8 சுற்றின் கடைசி போட்டியில் இன்று இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. அரையிறுதிக்குள் நுழைய இரு அணிகளுக்கும் இது வாழ்வா சாவா போட்டியாக இருப்பதால், கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐசிசி டி20 உலக கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி சென்றுள்ளது. அதன்படி சூப்பர் 8 சுற்றின் இறுதிபோட்டி இன்று இரவு 7 மணிக்கு கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடக்கிறது. இப்போட்டியில் குரூப் 1 பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.
லீக் சுற்றில் 4 போட்டியிலும் வென்ற இந்தியா, சூப்பர் 8 சுற்றில் முதல் போட்டியில் தென்ஆப்ரிக்காவிடம் படுதோல்வி அடைந்தது. இதனால், இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு மங்கிய நிலையில், சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை தொடர்கிறது. லீக் போட்டியின் முதல் 3 ஆட்டங்களில் டக் அவுட் ஆன அபிஷேக் சர்மா, பார்முக்கு திரும்பியது இந்தியாவுக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. மேலும், சம்சு சம்சான், இஷான் கிஷன், கேப்டன் சூர்யகுமார், திலக்வர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் பேட்டிங்கில் வலுசேர்க்கின்றனர். இந்திய அணியின் பவுலிங்கை பொறுத்தவரை பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி, அக்சர் பட்டேல் ஆகியோர் தொடர்ந்து தங்களது சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.
அதேசமயம், மறுபுறம் வெஸ்ட் இண்டீஸ் அணியும் லீக் சுற்றில் 4 போட்டியில் வென்றதுடன் சூப்பர் 8ல் ஜிம்பாப்வேயை வென்றது. ஆனால் 2வது போட்டியில் தென்ஆப்ரிக்காவிடம் படுதோல்வி அடைந்தது. அந்த அணியின் பேட்டிங் வரிசை, ஹெட்மயரில் தொடங்கி, கேப்டன் ஷாய் ஹோப், பிராண்டன் கிங், பாவல், சேஸ், ரூதர்போர்ட், ஆல்ரவுண்டர்கள் ஹோல்டர், ரொமாரியோ ஷெப்பர்ட், மத்தேயு ஃபோர்டு என 9வது வரிசை வரை நீடிக்கிறது. அதேசமயம், அந்த அணியின் பவுலிங் கேள்விக்குறியாக உள்ளது.
இன்று வெற்றிபெறும் அணி அரையிறுதிக்கு தகுதிபெறும் என்பதால் வாழ்வா, சாவா போட்டியாக அமைந்துள்ளது. வெற்றிக்கு இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெஸ்ட்இண்டீஸ் அணி உலக கோப்பைக்கு முன் சொதப்பி வந்த நிலையில் தற்போது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதனால் இந்தியாவுக்கு கடும் சவால் காத்திருக்கிறது. ஈடன் கார்டன் மைதானம் பேட்டிங்கிற்கு சாதமாக இருப்பதால் ரசிகர்களுக்கு வாணவேடிக்கை காத்திருக்கிறது. இன்றைய போட்டியில் வெற்றிபெறும் அணி அரையிறுதியில் குரூப் 2ல் முதலிடத்தில் உள்ள இங்கிலாந்துடன் மோதும்.
* இதுவரை நேருக்கு நேர்…
இரு அணிகளும் இதற்கு முன் டி.20 போட்டியில் 30 முறை மோதி உள்ளன. இதில் 19ல் இந்தியா, 10ல் வெஸ்ட்இண்டீஸ் வென்றுள்ளது. ஒரு போட்டி கைவிடப்பட்டுள்ளது. கடைசியாக மோதிய 5 போட்டிகளில் வெஸ்ட்இண்டீஸ் 3-2 என முன்னிலையில் உள்ளது. உலக கோப்பையில் 4 போட்டியில் மோதியதில் இந்தியா 3, வெ.இண்டீஸ் 1ல் வென்றுள்ளது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்தியா 2016ல் அமெரிக்காவின் லாடர்ஹில் 244/4 ரன் எடுத்தது தான் பெஸ்ட் ஸ்கோர். இதே போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் 245/6ரன் எடுத்து சேசிங் செய்தது தான் அவர்களின் அதிகபட்ச ரன்.
ராசியான மைதானம்…
* கொல்கத்தா ஈடன் கார்டன் இந்தியாவுக்கு ராசியான மைதானம். இங்கு இதற்கு முன் 8 டி.20 போட்டிகளில் ஆடி உள்ளது. இதில் 7ல் வென்றுள்ளது. ஒரு போட்டியில் தோல்வி (2011ல் இங்கிலாந்துக்கு எதிராக) அடைந்துள்ளது.
* வெஸ்ட் இண்டீஸ் 7 போட்டியில் ஆடி 3ல் வெற்றி, 4ல் தோல்வி கண்டுள்ளது.
* ஒட்டுமொத்தமாக இங்கு இதுவரை 17 டி.20 போட்டி நடந்துள்ளது. இதில் 9ல் முதலில் பேட் செய்த அணியும், 8ல் சேசிங் அணியும் வென்றுள்ளன.
* நடப்பு உலக கோப்பையில் 5 போட்டி நடந்துள்ளது. இதில் முதலில் பேட் செய்த அணி 4ல் வென்றுள்ளது. வெஸ்ட்இண்டீஸ் இங்கு லீக் போட்டியில் இத்தாலி, ஸ்கார்ட்லாந்துக்கு எதிராக முதலில் ஆடி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
* தந்தை உடல் அடக்கம் முடிந்து அணியுடன் இணைந்த ரிங்கு சிங்
இந்திய அணியின் அதிரடி வீரர் ரிங்கு சிங்கின் தந்தை கன்சந்த் சிங் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நொய்டா ஆஸ்பத்திரியில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் காலமானார். இதையடுத்து ரிங்கு உடனடியாக சொந்த ஊரான அலிகார் புறப்பட்டார். தந்தையின் உடல் அடக்கம் முடிந்த நிலையில் நேற்று கொல்கத்தா திரும்பி அணியுடன் இணைந்தார். இன்று இந்திய அணியின் ஆடும் லெவனில் மாற்றம் இருக்காது என்பதால் ரிங்கு களம் இறங்க வாய்ப்பு இல்லை.
* மழை வந்தால் இந்தியாவிற்கு ஆபத்து
இன்றைய போட்டியை பொறுத்தவரை இந்தியாவிற்கு வெற்றி கட்டாயமான ஒன்றாகும். அதேசமயம் கொல்கத்தாவில் மழை வந்து ஆட்டம் ரத்தானால், இந்தியாவிற்கு தான் பாதிப்பு. புள்ளி பட்டியலில் இந்தியாவும், வெஸ்ட் இண்டீசும் தலா 2 புள்ளிகளில் உள்ளன. ஆட்டம் ரத்தாகி தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டால் இரு அணிகளும் 3 புள்ளிகள் பெறும். இதில், இந்தியாவை காட்டிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி ரன்ரேட்டில் முன்னிலையில் இருப்பதால், இந்தியா தொடரில் இருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்படும். அதேசமயம், கொல்கத்தாவில் இன்று மழைக்கு வாய்ப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. வானம் தெளிவாக காணப்படுவதுடன், குறைந்தபட்ச வெப்பநிலை 70, அதிகபட்சமாக 90 டிகிரி பாரன்ஹீட்டாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
