முத்துக்கள் முப்பது
1. முன்னுரை
நாம் ஆலயங்களுக்குச் செல்கிறோம். கோயில்களிலே பல்வேறு விழாக்கள், உற்சவங்கள் நடைபெறுவதையும் கண்டு களிக்கிறோம். உற்சவங்களில் சில நேரங்களில், உற்சவ மூர்த்திகள் திருவீதி உலா வருவதையும் தரிசிக்கிறோம். திருவீதி உலா வருகின்றபொழுது, உற்சவ மூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்கள். மயில், அன்னப்பட்சி, கருடன், சிம்மம், யானை, குதிரை என்று பல்வேறு வாகனங்கள் அந்தந்த தெய்வங்களுக்கு ஏற்ற வகையில் அமைந்திருப்பதை காண்கின்றோம். இந்த வாகன ஊர்வலங்கள் எதற்கு, வாகனங்களின் மீது உற்சவ மூர்த்திகள் திருவீதி உலா வருவதற்கு என்ன காரணம், வாகனங்களின் தாத்பரியம் என்ன என்ற கேள்விகளுக்கு விடையாக இந்த இதழ் முப்பதுமுத்துக்கள் விரிகிறது.
2. மூலவரும் உற்சவ மூர்த்திகளும்
‘‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று”, ‘‘கோயில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம்” என்பது முதுமொழி. நம் தமிழ்நாட்டின் பழமொழி. எந்தச் சின்ன ஊராக இருந்தாலும் கோயில் இருக்கும். திருமால், சிவன், அம்பிகை, முருகன் போன்ற மூர்த்திகளுக்கு தகுந்த ஆகமங்களின் அடிப்படையில் கட்டப்பட்டிருக்கும். ஆகம அடிப்படையில் இல்லாத கோயில்களும் உண்டு. கோயில் களில் இரண்டு விதமான மூர்த்திகள் இருக்கும். ஒன்று மூலமூர்த்தி. இன்னொன்று உற்சவ மூர்த்தி. மூல மூர்த்திகள் கருவறையை விட்டு வெளியே வராது.உற்சவ மூர்த்திகள் பல்வேறு உற்சவங்களுக்காகவும் விழாக்களுக்காகவும், கருவறையை விட்டு அவ்வப்பொழுது வெளியே வரும்.
3. உற்சவங்கள்
கோயிலின் செழுமையும் சிறப்பும் உற்சவங்களைப் பொறுத்து அமைகிறது. ஒவ்வொரு கோயில்களிலும் ஒவ்வொரு உற்சவங்கள் விசேஷமாக நடைபெறும். திருப்பதியில் பிரம்மோற்சவம், திருவண்ணாமலையில் கார்த்திகை உற்சவம், மயிலாப்பூரில் அறுபத்தி மூவர் உற்சவம், ரங்கத்தில் வைகுண்ட ஏகாதசிஉற்சவம், வில்லிபுத்தூரில் திருத்தேர்உற்சவம், மதுரையில் சித்திரை விழா உற்சவம், சிதம்பரத்தில் மார்கழி தரிசனமும் , ஆனித் திருமஞ்சனமும், பழனியில் தைப்பூசம், திருச்செந்தூரில் ஸ்கந்தசஷ்டி சூரசம்ஹாரம், கும்பகோணத்தில் மாசி மகம், திருவாரூரில் தேர் உற்சவம் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.உற்சவ காலங்களில், உற்சவ மூர்த்திகள், வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி, பக்தர்களுக்குக் காட்சி தருவதை நாம் காணலாம்.
4. கோயில் பூஜைகள்
ஆலயபூஜைகள், தினசரி செய்ய வேண்டிய பூஜைகள், முக்கியமான நாட்களில் செய்ய வேண்டிய பூஜைகள், அந்தந்தக் கோயில்களுக்கு உரிய உற்சவங்களின்போது செய்ய வேண்டிய பூஜைகள் என்று பலவகையாக இருக்கும். பூஜைகள் பிரதானமாக நித்தியம் (தினசரி), நைமித்திகம் (விசேஷம்) என வகைப்படுத்தப்படுகின்றன. நித்திய பூஜை என்பது தினமும் முறைப்படி நடைபெறும் வழிபாடு. நைமித்திக பூஜை என்பது பிரதோஷம், அமாவாசை, கிருத்திகை போன்ற விசேஷ நாட்களில் அல்லது திருவிழாக் காலங்களில் நடத்தப்படும் சிறப்பு வழிபாடாகும். பெரும்பாலும் இந்தச் சிறப்பு வழிபாடுகள் அல்லது உற்சவங்களின் போதுதான், திருவீதி உலா நடைபெறும். வாகன சேவைகள் இடம்பெறும்.
5. திருவீதி வலம்
உற்சவங்களின்போது அதன் ஒரு பகுதியாக திருவீதி வலம் இடம்பெற வேண்டும் என்று ஆகமங்களில் சொல்லப்பட்டாலும் அதற்கான காரணங்கள் உண்டு. இறைவன் தனது பக்தர்களைத் தேடிவந்து குறைகளைத் தீர்த்து, ஊருக்குப் பாதுகாப்பும், ஆசியும் அளிக்கிறார். ‘‘கோ” என்பது அரசனையும் குறிக்கும். இறைவனையும் குறிக்கும். மன்னர்கள் நகர்வலம் வந்து மக்களைக் காப்பது போல, சுவாமி திருவீதி வலம் வந்து ஊரைத் தீயசக்திகளிடமிருந்து காப்பதாக நம்பிக்கை.
6. பக்தர்களின் ஏக்கம்தீர வீதிஉலா
கோவிலுக்குள் வரமுடியாத சூழ்நிலையில் இருப்பவர்கள், ( நோயாளிகள், மாற்றுத் திறனாளிகள், வயோதிகர்கள்) ‘‘திருவிழா நடக்கும் சமயத்தில் கோவிலுக்குள் செல்ல முடியவில்லையே, சுவாமியை தரிசனம் செய்ய முடியவில்லையே, இன்று சுவாமி என்ன அலங்காரத்தில் இருப்பாரோ” என சுவாமியைப் பார்க்க முடியாமல் மனதிற்குள் ஏங்குபவர்கள் எத்தனையோ பேர் இருக்கலாம். அப்படிப்பட்ட பக்தர்களின் மனக்குறையைத் தீர்ப்பதற்காக, அவர்களுக்கும் தனது தரிசனம் கிடைக்க செய்வதற்காக, ஸ்வாமி வீதிவலம் வருகிறார். வீதிஉலா வரும்போது, அந்த வீதிகளில் உள்ள எதிர்மறை ஆற்றல் நீங்கி, நேர்மறை சக்தி பரவும். ஊருக்குச் சுபிட்சம் கிடைக்கும்.
7. எப்போது சுவாமி வெளியே வருவார்?
கருவறையில் உள்ள சுவாமி குறிப்பிட்ட உற்சவங்களுக்காக கோயிலுக்கு உள்ளே இருக்கக்கூடிய மண்டபங்களுக்கு எழுந்தருளுவார். சான்றாக ரங்கம் ரங்கநாதர் கோயிலில் உள்ள முக்கிய மண்டபமான சந்தனு மண்டபத்தைச் சொல்லலாம். இங்கு, உற்சவர் நம்பெருமாள் தினசரி விஸ்வரூபம், திருமஞ்சனம் (அபிஷேகம்) மற்றும் சிறப்பு உற்சவ நாட்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். தீபாவளி, கைசிக ஏகாதசி மற்றும் பல்வேறு சிறப்பு நாட்களில் திருமஞ்சனம் மற்றும் அலங்காரப் புறப்பாடு இங்கு நடைபெறும். இப்படிப் பல கோயில்களில் சுவாமி வெளியே வந்து தரிசனம் தரும் சிறப்பு மண்டபங்கள் உண்டு.
8. பிரகார புறப்பாடு
கோயில்களில் ஊஞ்சல் மண்டபம் இருக்கும். அங்கே ஊஞ்சல் சேவைக்காக எழுந்தருள்வார். திருமலையில், ராஜகோபுரத்திற்கு எதிரே வலது பக்கத்தில் ஊஞ்சல் மண்டபம் இருக்கும். அங்கே உற்சவ மூர்த்தி உபய நாச்சிமார்களோடு (தேவி, பூதேவி) தினசரி மாலை, சகஸ்ர தீபாலங்கார பூஜைக்காக ஊஞ்சல் மண்டபம் எழுந்தருளுவார். திருமஞ்சன மண்டபம் இருக்கும். திருமஞ்சன சேவைக்காக எழுந்தருளுவார். திருக்கல்யாண மண்டபம் இருக்கும்.
அங்கே திருக்கல்யாணத்திற்காக எழுந்தருளுவார். இதுதவிர குறிப்பிட்ட உற்சவ மண்டபங்களும் இருக்கும். ஆந்தந்த உற்சவத்தின்போது அங்காங்கு எழுந்தருளுவார். குறிப்பிட்ட உற்சவ தினங்களில், சுவாமி கோயிலை விட்டு வெளியே வராமல், கோயிலுக்குள்ளேயே பிரகாரத்தில் வலம் வருவர்.
9. கோயிலுக்கு வெளியே வருதல்
கோயிலுக்கு வெளியே வந்து மாடவீதிகளில் வலம்வரும் நிகழ்வுகளும் உண்டு. கோயிலைச் சுற்றியுள்ள நான்கு மாட வீதி களில் வலம் வந்து தம்முடைய ஆஸ்தானம் அடைவார். மாசிமகம் போன்ற நாட்களில் தீர்த்தவாரிகளுக்கு, சுவாமி குறிப்பிட்ட நீர்நிலைகளுக்கும் (புஷ்கரணி) அருகாமையில் உள்ள கடற்கரைக்கும் எழுந்தருள்வதும் உண்டு. சில நேரங்களில், வெகுதூரத்தில் உள்ள கடலுக்கு தீர்த்தவாரிக்காகச் செல்ல நேரிடும். வழியெல்லாம் பல்வேறு ஊர்களில் தங்கி, மண்டகப் படிகளையும் உற்சவங்களையும் (இங்கும் கருட சேவை, முத்துப் பல்லக்கு போன்ற வைபவங்கள் உண்டு) செய்துகொண்டு செல்வார். சுவாமி ஆஸ்தானத்திற்கு வருவதற்கு, சில வாரங்களோ மாதங்களோ ஆகலாம்.
10. தெப்ப உற்சவம்
அடுத்து தெப்ப உற்சவம் கண்டருள்வதற்காக பெருமாள் கோயிலுக்கு வெளியே உள்ள நீராழி மண்டபத்திற்கு எழுந்தருளு வதும் உண்டு. இது தவிர குறிப்பிட்ட உபயதாரர் உற்சவத்தைப் பெற்றுக் கொள்வதற்காக, சில குறிப்பிட்ட ஊர்களுக்கு சுவாமி எழுந்தருளுவதும் உண்டு. பார்வேட்டை, அம்பு போடுதல் (விஜயதசமி) உற்சவங் களின் போது சுவாமி வெளியே புறப்பாடு கண்டருளுவது உண்டு. உதாரணமாக, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் தை மாதத்தில் பொங்கலை ஒட்டி பார்வேட்டைக்காக பழைய சீவரம் என்கிற இடத்திற்கு எழுந்தருளுவது உண்டு.
11. பிரம்மோற்சவம்
பிரம்மோற்சவம் என்பது வருடத்திற்கு ஒரு முறையோ இருமுறையோ நடக்கக்கூடிய உற்சவமாகும். இது குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு குறை வில்லாமல் நடைபெறும். கொடியேற்றத்தில் ஆரம்பித்து தீர்த்தவாரி அல்லது சக்கர ஸ்தானம் முடிந்து, கொடி இறக்கத்துடன் நிறைவு பெறும். இந்த பிரம்மோற்சவ காலங்களில், காலை மாலை இரு வேளையும் வெவ்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடக்கும். இதற்கென்று, கோயில்களில் பல்வேறு வாகனங்களைச் செய்து வைத்திருப்பார்கள்.
அந்த வாகனங்களைப் பாதுகாப்பதற்காகவே ஒரு மண்டபத்தையும் கட்டி வைத்திருப்பார்கள். இதற்கு வாகன மண்டபம் என்று பெயர். வாகனங்களை பெரும்பாலும், வலிமையான மரங்களில் வேலைப்பாடுகளோடு செய்து வண்ணம் தீட்டி வைத்திருப்பார்கள். சில வாகனங்களுக்கு தங்கம், வெள்ளி முலாம் பூசப்பட்ட கவசங்களையும் அணிவித்து இருப்பார்கள்.
12. என்னென்ன வாகனங்கள்?
மூஷிக வாகனம், அன்னப் பட்சி வாகனம், யானை வாகனம், யாளி வாகனம், கல்ப விருட்ச வாகனம், குதிரை வாகனம், சந்திரப் பிரபை வாகனம், சூரிய பிரபை வாகனம், கைலாச வாகனம், மயில் வாகனம், பூத வாகனம்,ரிஷப வாகனம், கமல வாகனம், பூத வாகனம், வெள்ளிக் கேடயம், அஜ வாகனம், தேர்வாகனம், என்று விதவிதமான வாகனங்கள் திருவிழாக் காலங்களில் திருவீதி வலம் வருவதை நாம் பார்க்கிறோம்.
இதில் சிவபெருமானுக்கு என்றே பிரத்யேகமான வாகனங்கள் உண்டு. உதாரணமாக கருட வாகனம் என்பது பெருமாளுக்கே உரியது. சேஷ வாஹனம் என்பதும் பெருமாளுக்கே உரியது. பூத வாகனம், ரிஷப வாகனம் சிவபெருமானுக்கே உரியது. மயில் வாகனம் என்பது முருகனுக்கே உரியது. மூஷிக வாகனம் என்பது விநாயகருக்கு உரியது. சிம்ம வாகனம் அம்பாளுக்கு உரியது.
13. மூஷிக வாகனம்
முதலில் விநாயகருக்குரிய பிரதானமான வாகனத்தைப் பார்ப்போம். ‘‘மூஷிக வாகன, மோதக ஹஸ்தா” என்ற பிரபலமான ஸ்லோகம். விநாயகரை வணங்கி, ஞானத்தை அருளுமாறு வேண்டி பாடப்படுகிறது. எத்தனையோ வாகனங்களில் விநாயகர் ஊர்வலம் வந்தாலும் பிரதான வாகனம், எலி வாகனம்தான். அதுவும் சுண்டெலி. சுண்டெலிக்கு வடமொழியில் மூஷிகம் என்று பெயர்.
மூஷிகன் அசுர குணம் கொண்டவன் என்றும், விநாயகர் அவனை அடக்கி தன் வாகனமாக மாற்றினார் என்றும், கர்வத்துடன் இருந்த ஒரு கந்தர்வன் (மூஷிகன்) ரிஷியின் சாபத்தால் சுண்டெலியாகி, விநாயகரின் அருளால் வாகனமானான் என்றும் கதைகள் உண்டு. மூஷிகம் என்பது ஆசை, பேராசை மற்றும் கட்டுப்படுத்தப்படாத மனதைக் குறிக்கிறது. மனிதர்கள் மனதை கட்டுப்படுத்தி, ஞானத்தையும் விவேகத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஆன்மிக தத்துவத்தை உணர்த்துகிறது.
14. கவி காளமேகத்தின் பாடல்
இது குறித்து காளமேகத்தின் சுவையான பாடல் ஒன்று உண்டு. கேலி செய்வது போல் அமைந்த இந்தப் பாடலை ‘‘நிந்தாஸ்துதி” என்பார்கள். காஞ்சிபுரத்திலே, விநாயகப் பெருமானுக்கு உற்சவம் நடந்து கொண்டிருந்தது. பெருமான் பெருச்சாளி வாகனத்தில் அமர்ந்து செல்கிறார். ‘‘பாவம், இப்படி இந்தப் பிள்ளையை எலி இழுத்துப் போகிறதே! சிவனுடைய மழு எங்கே? திருமாலின் சக்கரம் எங்கே? பிரமனின் தண்டம் எங்கே? இதனைத் தடுக்காமல் இருப்பதனால் அவர்களிடமிருந்து அவை யாவும் பறிபோய்விட்டனவோ?” என்று அங்கலாய்க்கிறார் கவிஞர். பாடல் இது.
மூப்பான் மழுவும் முராரிதிருச் சக்கரமும்
பாப்பான் கதையும் பறிபோச்சோ – மாப்பார்
வலிமிகுந்த மும்மதத்து வாரணத்தை யையோ
எலியிழுத்துப் போகின்ற தென்?
விநாயகர், எங்கும் புகக்கூடிய சுண்டெலியை வாகனமாகக் கொண்டு, மனிதர்களுக்குப் பேராசையை அடக்கி, அமைதியுடன் செயல்பட கற்றுத் தருகிறார். மூஷிக வாகனம் என்பது ‘‘பெரிய சக்தியைக் கொண்ட மனதை (விநாயகர்) சிறிய கட்டுப்பாடற்ற மனதின் (மூஷிகம்) மூலம் அடக்கி, வெற்றி பெறுதல்” என்பதைக் குறிக்கிறது.
15. பூத வாகனம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவின் 3-ம் நாள் காலை உற்சவத்தில், உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் பூத வாகனத்தில் உலா வந்து அருட்காட்சி தருவார். சில தலங்களில் 2ம் நாள் இக்காட்சி உலா நடைபெறும். சிவன் தனது படையினருடன் வீதிஉலா வருவதாக ஐதீகம். சிவ கணங்களில் ஒன்றான பூத கணங்கள் சிவனைத் தாங்கி வருவது போல் அமைக்கப்படும் இந்த வாகனம், அகன்ற கண்களும், கோரைப் பற்களும், பெரிய தொப்பையும் கொண்டும், இடக்காலை மண்டியிட்டு, வலக்காலை தாங்கியபடியும் அமைக்கப்பட்டுள்ளது. இரு கைகள் கொண்டதும், நான்கு கைகள் கொண்டதுமாக பூதங்கள் வைக்கப்பட்டுள்ளன. இரண்டு கைகள் கொண்ட பூதவாகனம் கைகளை ஏந்தியபடியும், நான்கு கைகள் கொண்ட பூதவாகனம் கைகளில் கதை, வாள் முதலிய ஆயுதங்களை தாங்கியவாறும் உள்ளது.
16. மயில் வாகனம்
மயில் வாகனம் என்பது முருகனுக்கே உரியது. நீலமயில், வண்ணமயில், கோல மயில், தோகைமயில் என்றெல்லாம் வர்ணிக்கப்படும் கம்பீரமான மயில்மீது முருகன் அமர்ந்து வரும் காட்சி காணக் கிடைக்காத காட்சி. ‘‘சித்ரகலாப மயில்”, ‘‘ரத்ன கலாப மயில்” என மயில் வாகனத்தின் அழகை விவரிக்கும் அருணகிரிநாதர், அம்மயில் மீது ஞானபண்டிதனாக முருகன் எழுந்தருளுவதை மயில் விருத்தத்தில் சிறப்பாகப் பாடியுள்ளார். மயில் வாகனனை வேண்டுவோருக்கு நலம் தரும் என்பது அவர் வாக்கு. சூரபத்மனை அடக்கி அவனையே மயில்வாகனமாக மாற்றிய வரலாற்றை அருணகிரிநாதர், ‘‘மாணிக்கத்தைத் தருகின்ற பாம்புக்கு அச்சத்தை விளைவிக்கின்ற மயில் மீது எழுந்தருளிய ஞானபண்டிதரே” என்று குறிப்பிடுகிறார்.
மயில் மீது அமர்ந்து வரும் முருகனைச் ‘‘சந்தான புஷ்ப பரிமள கிண்கிணீ முகச் சரணயுகள” (மணம் வீசும் மலர்கள், கிண்கிணி அணிந்த பாதங்கள் உடையவன்) என விவரிக்கிறார். மேலும், ‘‘உலகடைய நொடியில் வரும் சித்ரகலாப மயில்” என அதன் வேகம் மற்றும் அழகைப் பாடியுள்ளார். மயில் வாகனத்தில் மந்திர மயில், தேவ மயில், மற்றும் அசுர மயில் என மூன்று வகைகள் உள்ளன. அவை வெவ்வேறு தத்துவங்களைக் குறிக்கின்றன. மயில் வாகனத்தில் ஏறிய முருகப் பெருமான், அகங்காரத்தையும் (மயில்) ஆணவத்தையும் (சூரன்) தன் காலடியில் அடக்கி ஆள்வதை இது காட்டுகிறது. மயில் நமது மனதைக் குறிக்கிறது; மனதை முருகனின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதே மயில் வாகனத் தத்துவமாகும்.
17. அதிகார நந்தி வாகனம்
இந்த வாகனம் சிவபெருமானுக்கே உரியது. சைவத் திருவிழாக்களில், குறிப்பாகப் பிரம்மோற்சவத்தின்போது சிவபெருமான் (உற்சவர்) வீதியுலா வரும் வாகனங்களில் முக்கியமானது. கயிலாயத்தின் வாயில் காவலனான நந்திதேவர், சிவபெருமானைப் போன்றே மூன்று கண்களுடனும், நான்கு கரங்களுடனும், அபய முத்திரையுடனும் காட்சியளிப்பார். சிவாலயங்களில் உள்ள ஐவ்வகை நந்திகளில் இவர் மூன்றாவதாகக் கருதப்படுகிறார்.
சிவபெருமானை தரிசிக்க வருபவர்களை அனுமதிக்கும் அதிகாரம் கொண்டவர், அதனால் ‘‘அதிகார நந்தி” என அழைக்கப்படுகிறார். அதிகார நந்தி வாகனமானது நான்கு கைகளுடன் முன்னிரு கைகளை முன்புறமாக ஏந்தியபடியும் பின்னிரு கைகளில் உடுக்கை, திரிசூலம் ஆகியவற்றை ஏந்தியபடி ஒரு காலை முட்டியிட்டு மறுகாலை முன்புறமாக பதித்த நிலையில் உள்ளது. பெரும்பாலான சிவாலயங்களில் வெள்ளி அதிகார நந்திவாகனத்தில் உற்சவர் எழுந்தருளுவார். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் மற்றும் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் போன்றவை அதிகார நந்தி சேவைக்கு மிகவும் புகழ் பெற்றவை.
18. புருஷா மிருக வாகனம்
வைணவத்தில் கருட சேவை அமைப்பில் சைவத்தில் புருஷ மிருக வாகன சேவை இருக்கும். தாடி மீசையுடன் ஞானி போன்ற தோற்றம் தருகின்ற முகத்தினைக் கொண்டும், இடைவரை மனித உடலும், மீதம் சிம்ம உடலும் கொண்டது புருஷா மிருகமாகும். இரு கைகளை ஏந்தி இறைவனின் திருவடிகளைத் தாங்குமாறு இருக்கிறார். குபேர வனத்தைப் பாதுகாக்கும் பொறுப்புடன், சிவபெருமான் மீது பக்தி கொண்ட கதைகளுடன் தொடர் புடையது.
திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் சிவாலயத்தில் கார்த்திகை தீப திருவிழாவின் ஒன்பதாம் நாள் புருஷா மிருகன வாகனத்தில் இறைவன் உலா வருகிறார். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனித்திருவிழாவின் நான்காம் நாள் வெள்ளி புருஷ மிருக வாகனத்தில் கபாலீஸ்வரர் வீதியுலா வருகிறார். திருப்போரூரில் உள்ள கந்தசாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவின் மூன்றாம் நாளில் புருஷா மிருக வாகனத்தில் முருகப் பெருமான் உலா வருகிறார்.
19. சூரியப்பிரபை வாகனம்
சூர்யப்பிரபை வாகனத்தில் இறைவனை தரிசிப்பது, இறைவன் உலகிற்கு ஒளியை வழங்கும் தெய்வம் என்பதை நினைவூட்டுகிறது. குறிப்பிட்ட சிவாலயங்களிலும், எல்லா விஷ்ணு ஆலயங்களிலும், இன்னும் சிற்சில ஆலயங்களிலும், சூரியப்பிரபை வாகனம் முக்கியமான வாகனமாக இருக்கிறது. குறிப்பாக ரதசப்தமி நாளில் சூரியப் பிரபை வாகனத்தில் உற்சவ மூர்த்திகள் திருவீதி உலா காண்கின்றனர். பெரும்பாலும் சூரிய உதய நேரத்தில் சூரிய பிரபை வாகனப் புறப்பாடு இருக்கும். சூரியனின் அம்சமாக சிவபெருமான் கருதப்படுவதால், காளஹஸ்தி, தருமபுரி போன்ற முக்கிய சிவாலயங்களில் இவ்விழாக்கள் சிறப்பான முறையில் நடைபெறுகின்றன.
காளஹஸ்தி சிவன் கோயிலில் ரத சப்தமியை யொட்டி காளஹஸ்தீஸ்வரர் சூரிய பிரபை வாகனத்திலும் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் சப்பரத்தில் நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் புரிவர். வைணவத்தில் முக்கியமாக ரதசப்தமி விழாவின் போது, உற்சவ மூர்த்தி சூரிய நாராயணராக ஏழு குதிரைகள் பூட்டிய சூரியப்பிரபை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளிப்பார். இது சூரிய மண்டலத்தின் நடுவில் நாராயணன் இருப்பதை உணர்த்தும். பெரும்பாலும் பிரம்மோற்சவத்தின் 7-வது நாளில் காலையில் சூரிய உதயத்தின்போது நடைபெறும். திருமலை பிரமோற்சவத்தில், மலையப்ப சுவாமி சூரியப்பிரபை வாகனத்தில், தங்க மற்றும் வைர ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு, சூரியமண்டலத்திற்கு நடுவில் நாராயணராக அருள்பாலிக்கிறார்.
20. சந்திரப்பிரபை வாகனம்
சோமன் என்ற தேவதையே சந்திரனாகக் கருதப்படுகிறார். சோமனிடம் தோன்றியதால் சந்திரனின் கிரணங்கள் அமிர்த மயமாக இருக்கின்றன. சூரியனால் ஆரோக்கியம் உண்டாவதுபோல சந்திரனால் புஷ்டி உண்டாகிறது. ஒளிக்குக் காரகன் சூரியன் என்றால், மனதுக்குக்காரகன் சந்திரன். ‘‘சந்த்ரமா மனஸோ ஜாத” என்பது புருஷ சூக்தத்தில் வரும் ஒரு புகழ்பெற்ற வேத மந்திர வரி. இதற்கு ‘‘சந்திரன் மனதிலிருந்து பிறந்தவர்” என்று பொருள். சிவபெருமான் சந்திரனை தன்னுடைய முடியிலே சூடி இருக்கின்றார். அதனால் சந்திரசேகரன் என்று பெயர்.
சிவன் மற்றும் அம்மன் கோயில்களில், குறிப்பாக பிரம்மோற்சவ விழாக்களில், சந்திரன் குளிர்ந்த தன்மையுடன், மன அமைதியையும், கவலைகளைப் போக்கி அருள் வழங்க, சந்திரப்பிரபை வாகனத்தில் உலா வருவது சிறப்பான நிகழ்வாகும். சுவாமி வெண்ணிற ஆடைகள்மற்றும் மாலைகளுடன் மாடவீதிகளில் உலா வருவது கண்ணுக்கு விருந்தாகும். திருப்பதி ஏழுமலையான் மற்றும் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில்களில், பிரம்மோற்சவத்தின் 7-வது நாளில் இரவு நேரத்தில் இந்த வாகன சேவை நடைபெறும். இந்த வாகனத்தில் இறைவனை தரிசிப்பதால், வாழ்க்கையில் ஏற்படும் மூன்று வகையான கஷ்டங்கள் (ஆத்யாத்மிகம், ஆதிபௌதிகம், ஆதிதைவிகம்) நீங்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.
21. கருட வாகனம்
கருட வாகனம் என்பது விஷ்ணுவின் அதிகாரப்பூர்வ வாகனமாகும். கருடாழ்வார், விஷ்ணுப்பிரியன், விஹாகேஸ்வரன், வைநதேயன், சுபர்ணன், புள்ளரசன், பட்சிராஜன் என்ற பெயர்களும் கருடனுக்கு உண்டு. பெருமாள் கோவில்களில், புரட்டாசி சனிக்கிழமை மற்றும் பிரம்மோற்சவத்தின் போது, சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். கருடன் ‘பெரிய திருவடி’ என்றும் அழைக்கப்படுகிறார்.
கருடன் மனிதர்களைப் போன்ற தோற்றத்துடன், மூக்கு மட்டும் கழுகுபோல இறக்கைகளோடு, அமர்ந்த நிலையில், ஒரு காலை மண்டியிட்டு, ஒரு காலை சற்று உயர்த்தி, இரு கரங்களை முன்புறம் நீட்டியவாறு திருமாலின் பாதங்களை தாங்குவார். ஆகமத்திற்கு ஏற்றவாறு உற்சவத்தின் மூன்றாம் நாள் அல்லது ஐந்தாம் நாள் கருட வாகனம் பயன்படுத்தப்படுகிறது. திருவரங்கம் கோயிலில் வருடத்தில் நான்கு முறை நம்பெருமாள் கருட வாகனத்தில் உலா வருகிறார். சித்திரைத் தேர் திருவிழா, தைத்தேர் திருவிழா மற்றும் பங்குனி கோரதத் திருவிழாக்களில் நம்பெருமாள் தங்க கருட வாகனத்தில் உலா வருகிறார்.
மாசித் தெப்பத்திருவிழாவின் போது நம்பெருமாள் வெள்ளி கருட வாகனத்தில் உலா வருகிறார். மாசி வெள்ளி கருடவாகனத்தில் நம்பெருமாளை தரிசனம் செய்தால் காசிக்குச் சென்று வந்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்தில் இருந்து குடவாசல் செல்லும் வழியில் திருநறையூர் நம்பி கோயில் கருட வாகனம் மிகவும் புகழ்பெற்ற ஒன்றாகும். கல்லினாலான கல் கருடன்.
நாச்சியார் கோயிலில் கல் கருடன் சேவை வருடத்தில் மார்கழி மற்றும் பங்குனி மாதங்களில் நடைபெறுகிறது. கல்கருட சேவையின் பொழுது 4 டன் எடையுள்ள கல்லினால் செய்யப்பட்ட கருடாழ்வார் வீதி உலா நடைபெறும். கருட வாகனத்தை முதலில் 4 பேரும் பின்னர் 8, 16, 32, 64 கடைசியாக 128 பேர் தூக்குவர். கருடனின் சிறகுகள் ஞானத்தையும், உடல் கர்ம யோகத்தையும் உணர்த்துவதோடு, ஜீவாத்மா (கருடன்) பரமாத்மாவை (விஷ்ணு) சுமந்து செல்வதாகவும், தீய விசைகளை அழிப்பவராகவும் கருதப்படுகிறது.
22. ரிஷப வாகனம்
ரிஷபம் என்பது காளையைக் குறிக்கும். இது சிவனின் வாகனம் மற்றும் நந்தியின் வடிவமாகும். பெருமாளுக்கு கருட சேவை போல சிவன், காளைமீது ஏறி (ரிஷப ஆருடர்) காட்சி தருவது, சிவாலயங்களில் நடக்கும் சேவைகளில் மிகவும் சிறப்பான ஒன்றாகும். கபாலீஸ்வரர் கோவில் பங்குனித் திருவிழா போன்ற நிகழ்வுகளில், சிவபெருமான் காளை மீது வீதியுலா வந்து மக்களுக்குக் காட்சியளிப்பார். இது அறத்தின் வடிவமாகவும், இறைவனின் அருளை உணர்த்துவதாகவும் போற்றப்படுகிறது. பக்தர்கள் இந்த வாகனத்தில் சிவனை வழிபடுவது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இடப வாகனம், சிவ பெருமானின் வலிமை மற்றும் கருணையைப் பறைசாற்றுகிறது.
23. சேஷ வாகனம்
பெருமாள் ஆலயங்களில் மிக முக்கியமான வாகன சேவை சேஷவாகன சேவை. சேஷன் என்றால் தொண்டன். ஆதிசேஷனாகிய அரவம் (பாம்பு)தான் பெருமாளின் முதல் தொண்டன். இதில் ஐந்து தலை நாகத்தை சின்னசேஷ வாகனம் என்றும், ஏழுதலை நாகத்தை பெரிய சேஷ வாகனம் என்றும் அழைப்பார்கள். திருமலை பிரமோற்சவத்தில் இரண்டு சேஷ வாகன சேவைகளும் உண்டு. இரண்டு முறை வருகின்ற ஒரே வாகனசேவை சேஷவாகன சேவைதான். ஆதிசேஷன் பெருமாளோடு எப்போதும் இருப்பவர்.
சென்றால் குடையாம்
இருந்தால் சிங்காசனமாம்,
நின்றால் மரவடியாம்
நீள்கடலுள், என்றும்
புணையாம் மணி விளக்காம்
பூம்பட்டாம் புல்கும்
அணையாம், திருமாற்கு அரவு
– என்பது பொய்கையாழ்வார் அருளிச்செய்த முதல் திருவந்தாதி பாசுரம். திருமலை பிரம்மோற்சவத்தின் தொடக்கமாக ‘பெரிய சேஷ வாகனம்’ போற்றப்படுகிறது. பிரபஞ்சத்தின் அசைக்கமுடியாத அடித்தளம் ஆதிசேஷன் மனித குண்டலினி சக்தியை எழுப்பி வீடுபேறு (மோட்சம்) அடைவதை குறிக்கிறது. இந்த வாகனத்தில் இறைவனைக் காண்பது மனஅமைதி, நிலைத்தன்மை மற்றும் எதிர்மறை சக்திகளிடமிருந்து பாதுகாப்பைத் தரும்.
24. சிம்ம வாகனம்
பெரும்பாலும் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் திருநாள் சிம்ம வாகனம் இடம்பெறுகிறது. கண்ணனை ‘‘சிற்றாயர் சிங்கம்” என்று பாடுகிறார். இறைவனின் நடையழகில் சிம்மம் போன்ற நடைஅழகை ‘‘மாரி மலை முழைஞ்சில்” என்ற பாசுரத்தில் ஆண்டாள் வர்ணிக்கிறார். சிங்கம் கம்பீரம், வலிமை, வீரம் மற்றும் தீமைகளை அழிப்பதன் அடையாளமாகக் கருதப்படுகிறது. பெருமாள் சிம்மவாகனத்தில் வருவதால், தீயசக்திகளை அழித்து பக்தர்களைக் காக்கிறார் என்பது நம்பிக்கை.
சிம்ம வாகனம் (சிங்க வாகனம்) அம்மன் வழிபாட்டில் வீரத்தையும், சக்தியையும் குறிக்கும். சிம்ம வாஹினி என்றே அவள் திருநாமம். நவராத்திரி விழா, பிரம்மோற்சவம் மற்றும் திருவிழாக்களில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். மதுரை மீனாட்சி, ஆனந்தவல்லி, முத்தாரம்மன் மற்றும் காமாட்சி அம்மன் போன்ற பல்வேறு அம்மன் கோயில்களில் இக்காட்சி அற்புதமாக இருக்கும்.
25. யாளி வாஹனம்
சிங்கத்தின் உடல், தலை, யானையின் தும்பிக்கை மற்றும் தந்தங்களுடன், சில சமயங்களில் குதிரையின் அம்சங்களும் கலந்த உருவம் யாளி. தென்னிந்தியக்கோயில் சிற்பங்களில் பரவலாகக் காணப்படும் யாளி, சிங்கத்தை விட வலிமையானதாகக் கருதப் படுகிறது. துர்க்கை, பெருமாள் போன்ற தெய்வங்கள் யாளிவாகனத்தில் எழுந்தருளி அருள்பாலிப்பர். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சித்திரைத் திருவிழாவின் ஏழாம் நாளில் மீனாட்சி யாளி வாகனத்தில் உலா வருகிறார்.
26. அன்ன வாகனம்
திருமங்கையாழ்வார் ‘‘அன்னமாய்அருமறை பயந்தான்” என்று திருமால் அன்னப்பறவை வடிவம்கொண்டு, நான்கு வேதங்களை (அருமறைகள்) வெளியிட்ட நிகழ்வைப் பாடுகிறார். வேதஞானமாக அன்னம் கருதப்படுகிறது. மதுரை சித்திரைத் திருவிழா போன்ற முக்கிய திருவிழாக்களின் போது, அம்மன் அன்ன வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வருவது வழக்கம். திருமலை, திருச்சானூர் பிரம்மோற்சவத்தில் ஒரு நாள் அன்னவாகன சேவை உண்டு. அன்றைக்கு வெண்பட்டு உடுத்தி பெருமாள் வீணையோடு காட்சி தருவார். திருநாங்கூர் கருட சேவையில் திருமங்கை ஆழ்வார் குமுதவல்லி நாச்சியாரோடு அன்ன வாகனத்தில் காட்சி தருவார்.
27. யானை வாகனம்
கஜவாகனம் என்று அழைக்கப்படும் யானை வாகன சேவை எல்லா தேவதைகளுக்கும் பொதுவானது. திருமலை பிரம்மோற்சவத்தில் பெருமாள் ஒருநாள் யானை வாகனத்தில் காட்சி தருவார். திருச்சானூர் பிரம்மோற்சவத்தில் தாயார் ஒரு நாள் யானை வாகனத்தில் காட்சி தருவார். கஜலக்ஷ்மி என்றாலே இரு பக்கமும் யானையோடு காட்சி தரும் மகாலட்சுமி தாயாரைக் குறிக்கும். கஜேந்திர மோட்சத்தில், யானையைக் காத்த பெருமாள்போல, தன்னைச் சரணடையும் பக்தர்களை காப்பார் என்பதே இதன் தத்துவம்.
பிரமோற்சவங்களின்போது, குறிப்பாகக் காஞ்சி காமாட்சி அம்மன்கோயில் போன்ற தலங்களில், யானை வாகனச் சேவை சிறப்பாக நடைபெறும். இந்திரனின் வாகனமான ஐராவதம் யானையாக இருப்பதால், இது அரச கௌரவத்தையும் குறிக்கிறது. சூரபத்மனை வதம் செய்யச் சென்றபோது, முருகப் பெருமான் யானை வாகனத்தில் எழுந்தருளினார் என்பது வரலாறு.
28. அஜ வாகனம்
அஜ (அஜா) என்றால் பிறக்காதது, ஆடு என்று பொருள், இது அக்னி தேவருக்குரிய வாகனம். சிவபெருமானின் ஏகபாத மூர்த்தி வடிவத்தின் வாகனமாகவும் ஆடு குறிப்பிடப்படுகிறது. முருகன் கோயில்களில் அஜ வாகனம் முக்கியமாகக் கருதப்படுகிறது. முருகப் பெருமானின் முதன்மை வாகனம் மயில் (சித்ரபர்ஹணா) எனினும் ஆட்டுக்கிடா (மேஷ வாகனர்) முருகனின் மற்றொரு முக்கிய வாகனமாகப் போற்றப்படுகிறது, இது வீரவாகுத் தேவருடன் சென்று சூரனை வெல்ல உதவியதாகக் கூறப்படுகிறது.
முனிவர்களின் தவறான மந்திர உச்சரிப்பால் உருவான ஆட்டை அடக்கி தம் வாகனமாக முருகன் கொண்டதாக வரலாறு உண்டு. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், குறிப்பாகக் கௌமார வழிபாட்டில் ஆடு வாகனம் முக்கிய இடத்தைப் பெறுகிறது. ஞானத்தையும், கல்வியையும் அளிக்கும் வாகனமாகக் கருதப்படுகிறது.
29. குதிரை வாகனம்
குதிரை வாகனம் மரத்தாலான குதிரை வடிவ ஊர்தியாகும். இது பெரும்பாலும் இறக்கைகளுடன், பாய்ந்து செல்வது போன்ற வேகமான தோற்றத்தில், உலோகத் தகடுகளால் அலங்கரிக்கப்பட்டு, உற்சவர் அமர தாங்குபலகைகளுடன் இருக்கும்.கோயில்களில் நடைபெறும் பிரம்மோற்சவம் மற்றும் தெப்பத் திருவிழாக்களில் பெருமாள், சிவன் உள்ளிட்ட தெய்வங்கள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி காட்சி தருவார். குதிரை வாகனம் என்பது இறைவனின் வேகத்தையும், வீரத்தையும் குறிக்கும் சிறப்பான வாகன அலங்காரமாகும். வேடுபறி உற்சவத்தின்போது பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருள்வார்.
30. புலி வாகனம்
ஈசன் புலித்தோலை ஆடையாக அணிந்திருக்கின்றான். இறைவியோ உயிரோடு இருக்கின்ற புலியின்மீது அமர்ந்து கன்மம் ஆணவம் மாயையின் வடிவமான புலியை அடக்கி அதைத்தன் வயப்படுத்தி ஆட்டுவிக் கின்றாள். ஐயப்பன் வழிபாட்டிலும் அம்பாள் வழிபாட்டிலும் புலி வாகனம் இடம் பெரும். புலி வாகனத்தில் ஏறி மலைமீது காட்சி தருவது சபரிமலை வழிபாட்டில் முக்கியமானது.மாரியம்மன் கோவில் திருவிழாக் களில் புலி வாகனத்தில் அம்மன் எழுந்தருளி அருள் பாலிப்பார்.
கபிலேஸ்வரர் போன்ற கோவில்களில் பிரம்மோத்ஸவத்தின் ஒரு நாளாக புலி வாகன சேவை நடைபெறும். புலி வாகனம் என்பது அசுரர்களை அழித்தல், தீயசக்திகளை அடக்குதல் மற்றும் பக்தர்களைக் காத்தல் ஆகியவற்றின் அடையாளமாகக் கருதப்படுகிறது. இதுதவிர இன்னும் பலப் பல வாகன சேவைகள் உண்டு. அதற்கான தத்துவப் பின்னணிகளும் உண்டு. அவற்றை இன்னொரு சந்தர்ப்பத்தில் காண்போம்.
எஸ். கோகுலாச்சாரி
