×

மணப்புள்ளிக்காவு பகவதி அம்மன் கோயில் விழா 15 யானைகள் அலங்கார அணிவகுப்புடன் வீதி உலா

*திரளான பக்தர்கள் பங்கேற்று ஆடிப்பாடி ஆரவாரம்

பாலக்காடு : பாலக்காடு-திருச்சூர் தேசிய சாலை அருகே அமைந்துள்ளது மணப்புள்ளிக்காவு பகவதி அம்மன் கோயில். இந்த கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் திருவிழா நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த வெள்ளியன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு ஒவ்வொரு நாட்களிலும் விஷேச பூஜைகள், இரவு நேரங்களில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.

நேற்று காலை 4 மணிக்கு ஈட்டு வெடியுடன் அம்மன் கோயில் நடை திறக்கப்பட்டு, விநாயகருக்கு கணபதி ஹோம பூஜைகள் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக அலங்கார பூஜைகள், மூலஸ்தானத்திலிருந்து அம்மனின் உரைவாள், சிலம்பு, அரையணி மணிகள் ஆகியவை எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து கோயில் வளாகத்தில் அலங்கரித்த யானைகள் மீது அம்மன் பஞ்சவாத்தியத்துடன் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அம்மன் தங்கக்காப்பு அலங்காரத்தில் சிவப்பு பட்டுடுத்தி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து, மாலை 5 மணிக்கு கோயிலிருந்து 15 யானைகள் ஊர்வலமாக கோட்டை மைதானத்திற்கு புறப்பட்டு வந்து அங்கு அணி திரண்டன. பின்னர் அலங்கார அணிவகுப்புடன் யானை மீது அம்மன் பஞ்சவாத்தியங்கள் முழங்க வண்ண முத்துமணிக்குடை மாற்றும் நிகழ்ச்சி கோட்டை மைதானத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியை காண்பதற்கு ஆயிரக்கணக்கான மக்கள் கோட்டை மைதானத்தில் திரண்டிருந்தனர். பாலக்காடு மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களும், கோவை, பொள்ளாச்சி, உடுமலை, பழநி, திண்டுக்கல் மற்றும் மேட்டுப்பாளையம், நீலகிரி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களும் வந்தனர்.

திருவீதியுலா நிகழ்ச்சியில் கலைஞர்கள் கேரளாவின் பாரம்பரிய கலைகளின் வேடங்கள் தரித்தப்படி ஆடல் பாடலுடன் சென்றனர். பஞ்சவாத்ய இசைக்கேற்ப மக்கள் ஆடிப்பாடி ஆரவாரம் செய்து திருவிழாவை பரவசப்படுத்தினர். பாலக்காடு கோட்டை மைதானத்திலிருந்து அம்மன் திருவீதியுலா புறப்பட்டு இரவு கோயிலை வந்தடைந்து விஷேச பூஜைகள், வாண வேடிக்கை ஆகியன நடந்தது.

Tags : Manapullikavau Bhagavathy Amman Temple Festival ,Palakkad ,Manapullikavau Bhagavathy Amman Temple ,Palakkad-Thrissur National Highway ,Masi ,
× RELATED டெல்லி மதுபான கொள்கை வழக்கிலிருந்து...