×

சிறுபான்மையினருக்கு அரண் திமுக உரிமைகளை பறிப்பது ஒன்றிய அரசு: அமைச்சர் சா.மு.நாசர்

1. சிறுபான்மையினர் யார் பக்கத்தில் இருக்கிறார்கள்?
சிறுபான்மையினர் எப்போதும் தங்களின் பாதுகாவலனாகத் திகழும் ‘திராவிட மாடல்’ அரசு மற்றும் காவல் அரண் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பக்கமே இருக்கிறார்கள். இது வெறும் அரசியல் கூட்டணி அல்ல. இதயப்பூர்வமான பிணைப்பு. சிறுபான்மையினரை வெறும் ஓட்டு வங்கியாகப் பார்க்காமல், அவர்களைத் தன் உடன்பிறப்புகளாகக் கருதி அரவணைக்கும் ஒரே தலைவர் நம் முதல்வர் தான். அதனால் அவர்கள் எப்போதும் உதயசூரியன் பக்கமே.

2. சிறுபான்மையினர் ஓட்டுகளை விஜய் பிரிப்பாரா?
தமிழ்நாடு ஒரு முதிர்ச்சியடைந்த அரசியல் களம். இங்கே மக்கள், குறிப்பாகச் சிறுபான்மையினர், தங்களுக்கு ஆபத்து வரும்போது யார் களத்தில் நின்று போராடினார்கள் என்பதைப் பார்ப்பார்கள். குடியுரிமைத் திருத்தச் சட்டம் போன்ற நெருக்கடியான நேரங்களில் மக்களுக்காக வீதியில் இறங்கிப் போராடியது திமுக தான். புதிய கட்சிகள் வரலாம், போகலாம். ஆனால், சிறுபான்மையினரின் நம்பிக்கையைப் பெற்ற ஒரே இயக்கம் அன்றும், இன்றும், என்றும் திமுக தான். அவர்களின் ஓட்டுகள் சிதறாது, அது சிதற வேண்டிய அவசியமும் இல்லை.

3. இந்த அரசு சிறுபான்மையினருக்கு என்னென்ன செய்துள்ளது?
பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். வக்பு வாரியப் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு. சிறுபான்மையின மாணவ-மாணவியருக்கு விடுதி வசதிகள் மற்றும் கல்வி உதவித்தொகை தடையின்றி கிடைப்பதை உறுதி செய்துள்ளோம். இவை அனைத்தும் வெற்று விளம்பரம் அல்ல, செயல்பாடுகள். இதற்காக மட்டும் ஆண்டுக்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, சுமார் 2.5 லட்சம் மாணவ-மாணவியர் பயனடைந்து வருகின்றனர். அரசு உதவிபெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 18,000 மாணவிகள் பயனடைந்துள்ளனர்.

சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் வழங்கப்படும் கல்விக் கடன் உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் சிறுபான்மையினருக்கு ரூ.120 கோடிக்கு மேல் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்களைப் பழுதுபார்க்கும் பணிகளுக்கான நிதியை ரூ.6 கோடியிலிருந்து ரூ.10 கோடியாக இந்த அரசு உயர்த்தியுள்ளது. நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் இருந்த வக்பு சொத்துக்கள் தொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்க மதுரையில் புதிய தீர்ப்பாயம் அமைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: அரசு பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்ட முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், இப்போது அரசு உதவிபெறும் சிறுபான்மையினர் தொடக்கப் பள்ளிகளுக்கும் (1 முதல் 5ம் வகுப்பு வரை) விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த ‘சிறுபான்மையினர் அந்தஸ்து சான்றிதழ்’ இனி ஆண்டுதோறும் புதுப்பிக்கத் தேவையில்லை. ஒருமுறை பெற்றால் அது நிரந்தரமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில், நங்கநல்லூர் ஜி.எஸ்.டி. சாலையில், 1 ஏக்கர் பரப்பளவில் ரூ.39.20 கோடி மதிப்பீட்டில், 400 ஹஜ் புனிதப் பயணிகள் தங்குவதற்கான புதிய தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்ட, முதல்வர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 16, 2025 அன்று அடிக்கல் நாட்டினார். கிறிஸ்தவப் பெருமக்களின் புனிதப் பயணமான ஜெருசலேம் பயணத்திற்கும் மானியத்தை வாரி வழங்கியுள்ளது திராவிட மாடல் அரசு. கடந்த அதிமுக ஆட்சியில் ரூ.20,000-ஆக இருந்த மானியத்தை, தற்போது ரூ.37,000-ஆக நம் முதல்வர் உயர்த்தியுள்ளார். கன்னியாஸ்திரிகளுக்கு மானியம் ரூ.60,000-ஆக வழங்கப்படுகிறது.

4. ஒன்றிய பாஜ அரசு சிறுபான்மையினருக்கு எந்த வகையில் எதிராக இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?
ஒன்றிய பாஜ அரசு சிறுபான்மையினரின் உரிமைகளைப் பறிப்பதிலேயே குறியாக இருக்கிறது. ஒரே நாடு ஒரே சட்டம், குடியுரிமை திருத்த சட்டம், வக்பு திருத்த சட்டம், போன்ற நடவடிக்கைகள் மூலம் அவர்களின் மத உரிமைகளில் தலையிடுகிறார்கள். கல்வி உதவித்தொகைகளை ரத்து செய்தது மிகப்பெரிய துரோகம். சிறுபான்மையினரின் பன்முகத்தன்மையை அழித்து, இரண்டாம் தரக் குடிமக்களாக மாற்ற நினைக்கும் பாஜகவின் போக்கை எதிர்த்து, இந்தியாவில் முதன்முதலாகத் தீர்மானம் போட்டவர் முதலமைச்சர் தளபதி ஸ்டாலின் அவர்கள் தான். பாஜவின் கொள்கை ‘பிரித்தாளும் சூழ்ச்சி’, எங்கள் கொள்கை ‘அனைவருக்குமான வளர்ச்சி’. மதச்சார்பற்ற கொள்கையைத் தனது உயிர் மூச்சாகக் கொண்டுள்ள இந்த அரசு, ஒருபோதும் சிறுபான்மையினரை விட்டுக் கொடுக்காது. பாஜவின் மதவாத அரசியலுக்கு தமிழ்நாடு எப்போதும் சிம்ம சொப்பனமாக விளங்கும்.

Tags : Union government ,DMK ,Minister ,S.M. Nassar ,Dravidian Model ,government ,M.K. Stalin ,
× RELATED தேர்தல் கூட்டணி தொடர்பாக...