தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக பிரதான கட்சியாக உள்ளது. இந்த கூட்டணியில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து பேசி வந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் இணைந்துள்ளார். கடந்த மாதம் மதுராந்தகத்தில் பிரதமர் முன்னிலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் ஒன்றாக மேடையேறினர். அப்போது நாங்கள் இருவரும் ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்டவர்கள். சகோதரர்களான எங்களுக்குள் கருத்துவேறுபாடு இருந்தது உண்மை தான். ஆனால் அதையெல்லாம் மறந்து தேர்தல் வெற்றிக்கு ஒன்றாக பணியாற்றுவோம் என்று கூறி சிலிர்த்துக் கொண்டனர். ஆனால் இருதரப்பிலும், ஒருவருக்கொருவர் குழிபறிக்கும் நோக்கில் தான் செயல்படுகின்றனர் என்ற பேச்சு, தேர்தல் களத்தில் பரவலானது.
இந்தநிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழகம் முழுவதும் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அமமுகவை அதிமுக புறக்கணித்தது. இதேபோல் பல இடங்களில் பிரசாரங்கள் தொடங்கப்பட்டு உள்ள நிலையில், அங்கும் அமமுகவை அதிமுக அழைக்கவில்லை. இதனால் அதிமுக-அமமுக கூட்டணி ஒப்புக்குதான் என்று கூறப்பட்டது. இதை உறுதி செய்யும் வகையில், ‘‘எங்களுக்கான தொகுதிகளை பாஜவிடம் கேட்டு பெறுவோம்’’ என்று டிடிவி.தினகரன் தெரிவித்திருந்தார். கூட்டணிக்கு அதிமுக தலைமை என்று இருக்கும் நிலையில், பாஜவிடம் தொகுதிகளை கேட்டு பெறுவோம் என்று டிடிவி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் இருந்தே அதிமுக-அமமுக சுமுகமான உறவு இல்லை என்பது வெட்ட வெளிச்சமானது.
சமீபத்தில் நடந்த தமிழகம் முழுவதும் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் இரண்டு கட்சிகளும் இணைந்து கொண்டாடி ஒற்றுமையை வெளிப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு பலமாகவே இருந்தது. ஆனால் அதிமுகவிரை அமமுகவினரோ, அமமுகவினரை அதிமுகவினரோ அழைக்கவில்லை. இது குறித்து ேகள்வி எழுப்பிய தொண்டர்களிடம் ‘‘அவங்க தனிக்கட்சி, நாம் தனிக்கட்சி. தேர்தலில் பாஜ தான் நம்மை கூட்டணி என்ற பெயரில் ஒருங்கிணைத்துள்ளது. எனவே எல்லைமீறிய நட்பு வேண்டாம். தேர்தல் முடிவுகள் வந்த பிறகு ஒன்றாக இணைந்து கொண்டாடுவது குறித்து யோசிக்கலாம்’’ என்று மூத்த நிர்வாகிகள் கறாராக சொல்லிட்டாங்களாம். அப்படின்னா நம்ம கூட்டணி பரவசம் எல்லாம் மைக்குக்கு முன்னாடி மட்டும் தானா? இப்படி இருந்தா எப்படி ஒன்றாக எலக்சன் வேலை பார்க்க முடியும்? நாம என்ன ஒப்புக்கு சப்பானா என்று தொண்டர்கள் முணுமுணுத்தப்படி சென்றனர்.
* ரவுண்டு கட்டி அடிக்குறாங்க! உளறல் மன்னனுக்கு கல்தா?
அதிமுக மாஜி அமைச்சரும், அந்தக் கட்சியின் படு சீனியர் நிர்வாகியுமான திண்டுக்கல் சீனிவாசன் தற்போது கட்சிப் பொருளாளராக உள்ளார். ஏதாவது பொதுக்கூட்டங்களில் இவர் பேசுகிறார் என்றால்… பதற்றமும், பரபரப்புமாக இருப்பவர்கள் மாற்றுக் கட்சியினர் அல்ல… இவரது சொந்தக் கட்சியினர்தான். யதார்த்தமாக பேசுகிறோம் என்ற பெயரில், உட்கட்சி ரகசியங்களை பட்டவர்த்தனமாக போட்டு உடைத்து விடும் இவரது பேச்சுக்கள், பல சமயங்களில் தலைமைக்கு தலைவலியைக் கொடுத்திருக்கிறது. இவருக்கே தலைவலி கொடுக்கிற அளவுக்கு மாவட்டத்தில் இப்போது உள்கட்சி உள்ளடி உச்சத்தை எட்டியிருப்பதாக திண்டுக்கல் மாவட்ட அதிமுகவினர் தெரிவிக்கின்றனர்.
சட்டமன்ற உறுப்பினர் என்ற நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக திண்டுக்கல் தொகுதிக்குள் தலைகாட்டாமல் இருந்தார். கட்சியில் எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்த நிலையில் தன்னை மூத்த மற்றும் முக்கிய தலைவராக கருதிக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்தார். தற்போது தேர்தல் நெருங்கியிருப்பதால் மீண்டும் திண்டுக்கல் தொகுதிக்குள் சுற்றி, சுற்றி வருகிறாராம். மூன்றாம் முறையாக திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று விடவேண்டுமென பணத்தை செலவிடும் பணியிலும் ஈடுபட்டுள்ளார். 4 முறை எம்பியாக இருந்தவர், மூன்றாம் முறையாக எம்எல்ஏ ஆகிவிட வேண்டுமென்பதில் ரொம்ப ஆர்வமாக உள்ளாராம்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்த நலத்திட்ட பணிகளிலும், தொகுதி வளர்ச்சி பணிகளிலும் தலைகாட்டாமல் இருந்த திண்டுக்கல் சீனிவாசன், கடைசி கட்ட சிறப்பு விற்பனை என்பதைப் போல இப்போது தினசரி நிகழ்ச்சிகளை படு பிஸியாக நடத்தி வருகிறார். அடிக்கல் நாட்டுவிழா, பூமி பூஜை மற்றும் கட்சி விழா என மும்முரமாக சுற்றி வருகிறார். இவர் அமைச்சராக இருந்த காலத்திலும் சரி, இப்போது எம்எல்ஏவாக உள்ள போதும் குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு தொகுதிக்கு எந்த திட்டமும் கொண்டு வரவில்லை.
மாவட்டத்திலுள்ள 7 தொகுதிகளில் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் ஆகிய தொகுதிகளை கொண்ட பகுதிக்கு மாவட்டச் செயலாளராகவும் இருக்கும் இவருக்கு எதிராக நத்தம் விஸ்வநாதன், முன்னாள் மேயர் மருதராஜ் ஆகியோர் எதிர் அரசியல் செய்து வருகின்றனர். பாஜவினரும் கூட்டணிக்குள் வந்து சேர்ந்திருக்கும் நிலையில், தாமரைக் கட்சியின் முன்னாள் தலைவர் தனபால் தலைமையிலும், தற்போதைய தலைவர் முத்துராமலிங்கம் தலைமையிலும் இரு கோஷ்டிகளாகவும், பாமகவினர் அன்புமணி கோஷ்டி, ராமதாஸ் கோஷ்டிகளாகவும் திண்டுக்கல் சீனிவாசனை முற்றுகையிட்டு வருகிறார்களாம். ஒரு கோஷ்டியிடம் பேசினால், மற்றொரு கோஷ்டி முறைக்கிறதாம். இப்படியாக கூட்டணி கட்சியினர் நிலை போய் கொண்டிருக்கிறதாம்.
இதோடு திண்டுக்கல்லில் இருக்கும் ஓபிஎஸ்சின் ஆதரவாளர்கள், இந்த முறை எப்படியாவது திண்டுக்கல் சீனிவாசனை காலி செய்துவிட வேண்டுமென கங்கணம் கட்டி திரிகின்றனராம். திண்டுக்கல் தொகுதிக்குள் கணிசமாக சிறுபான்மையினர் வாக்குகள் இருப்பதால் அவை இந்த முறை தனக்கு எதிராக சென்றுவிடும் சூழல் உள்ளதும் அவருக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளதாம். கட்சியில் இருக்கும் சிலர், ‘‘தலைவருக்கு ரொம்ப வயதாகிவிட்டது. எதையாவது உளறி கொட்டுகிறார். இந்த முறை அவருக்கு சீட் கொடுப்பதை விட ஆளை மாற்றுவதே சிறப்பானது’’ என தலைமையிடம் போட்டுக் கொடுத்து வருகிறார்களாம்.
இன்னொரு தரப்பினரோ இந்த முறை எப்படியும் திண்டுக்கல் சீனிவாசன் தோற்று போவார். அதனால், வேட்பாளரை மாற்றலாம். புதிதாக இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கலாம் என பரிந்துரைக்கின்றனராம். இப்படியாக திரும்பும் திசையெல்லாம் திண்டுக்கல் சீனிவாசனுக்கு எதிரான உள்ளடிகள் ஓங்கியடிப்பதால், இதையெல்லாம் மீறி அவர் சீட் வாங்கி நின்றாலும் இம்முறை கரை சேரும் வாய்ப்புகள் படு மங்கலாகவே இருக்கிறது. இப்படியான சூழலில் வாக்காளர்களை கவரும் வகையில் நலத்திட்டங்கள் என்ற பெயரில் சில்வர் பேஷன்களை (தாம்பூலம்) பரிசுகளாக வீடுகள் தோறும் வழங்கும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளாராம் திண்டுக்கல் சீனிவாசன்.
