×

தமிழின் பெருமையை உலகிற்கு எடுத்துரைத்த “கீழடி-பொருநை”: சொன்னாரு..! செஞ்சாரு..!!

சொன்னாரு: சிவகங்கை மாவட்டம் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களைப் பாதுகாக்க உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்பது திமுகவின் முக்கிய தேர்தல் வாக்குறுதியாகும். அதேபோல், தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகத்தைப் போற்றும் வகையில் திருநெல்வேலியில் “பொருநை அருங்காட்சியகம்” அமைக்கப்படும் என மு.க.ஸ்டாலின் திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தார்.

செஞ்சாரு: “கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி” என்ற தமிழர்களின் பெருமைக்கு அறிவியல் பூர்வமான ஆதாரமாகத் திகழ்வது சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் தாலுகாவில் அமைந்துள்ள கீழடி ஆகும். வைகை நதிக்கரையில் 2,600 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் ஒரு திட்டமிடப்பட்ட நகர நாகரிகத்தைக் கொண்டிருந்ததை இந்த அகழாய்வுகள் உலகிற்கு பறைசாற்றுகின்றன. திமுகவின் தேர்தல் அறிக்கையில் கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டது.

அதன்படி ரூ.18.43 கோடி செலவில் பாரம்பரிய செட்டிநாடு கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்ட இந்த அருங்காட்சியகம் கடந்த 2023 மார்ச் 5ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. அதேபோல், திருநெல்வேலியில் ‘பொருநை அருங்காட்சியகம்’ அமைக்கப்படும் என கடந்த 2021 செப்.9ம் தேதி சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்திருந்தார். இதற்கான அடிக்கல் கடந்த 2023 மே.18ம் தேதி நாட்டப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தின் பணிகள் முடிந்து 2025 டிச.21ம் தேதி முதல்வரால் திறந்துவைக்கப்பட்டது.

13 ஏக்கரில் ரூ.57 கோடி மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்ட இந்த பொருநை அருங்காட்சியம் தற்போது மக்கள் பயன்பாட்டில் உள்ளது. பொருநை நாகரிகம் 3,200 ஆண்டுகள் பழமையானது என்று அமெரிக்காவின் பீட்டா அனாலிட்டிக் ஆய்வகம் உறுதி செய்தபோது, இது தமிழகத்தின் இதுவரை கண்டறியப்பட்ட மிகப்பழமையான நாகரிகம் என்று ஆய்வாளர்கள் வியந்து பாராட்டினர். அதேபோல், கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓடுகளில் உள்ள குறியீடுகள் சிந்துவெளி நாகரிக முத்திரைகளுடன் ஒப்புமை கொண்டுள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் பாராட்டு தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

கண்டெடுக்கப்பட்ட பொக்கிஷங்கள்
கீழடி அகழாய்வில் இதுவரை 15,000-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் மிக முக்கியமானவை பின்வருமாறு:
* எழுத்தறிவு: “ஆதன்”, “குவிரன்” போன்ற பெயர்கள் பொறிக்கப்பட்ட தமிழி எழுத்துக்கள் கொண்ட பானை ஓடுகள். இது அக்காலத் தமிழர்களின் பரவலான எழுத்தறிவை மெய்ப்பிக்கிறது.
* தொழில்நுட்பம்: செங்கல் கட்டுமானங்கள், கழிவுநீர் கால்வாய் வசதிகள், உறை கிணறுகள் மற்றும் சாயத் தொட்டிகள்.
* வணிகம்: ரோம் உள்ளிட்ட வெளிநாடுகளுடன் வணிகம் செய்ததற்கான அடையாளங்கள், தங்க ஆபரணங்கள், தந்தத்தினால் ஆன பகடைகள் மற்றும் மணிகள்.
* சிவகளையில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியில் இருந்த நெல்மணிகள் கி.மு. 1155-ம் ஆண்டைச் சேர்ந்தவை என அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
* தங்க ஆபரணங்கள்: ஆதிச்சநல்லூர் அகழாய்வில் சிறிய தங்க மோதிரங்கள், நெற்றிப் பட்டங்கள் மற்றும் தங்க அணிகலன்கள் கிடைத்துள்ளன.
* இரும்பு ஆயுதங்கள்: கத்திகள், ஈட்டிகள், அம்புகள், கோடாரிகள் மற்றும் வாள்கள் உள்ளிட்ட 85-க்கும் மேற்பட்ட இரும்புப் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.
* மண்பாண்டங்கள்: கருப்பு-சிவப்பு நிறப் பானைகள், கிண்ணங்கள், குடுவைகள் மற்றும் நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட ஈமத்தாழிகள் (முதுமக்கள் தாழிகள்) கிடைத்துள்ளன.
* வெள்ளி காசுகள்: ஆதிச்சநல்லூரில் சூரியன், சந்திரன் போன்ற குறியீடுகள் பொறிக்கப்பட்ட பண்டைய வெள்ளிக் காசுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

* தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம்
2023-24ம் ஆண்டில் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் தஞ்சையில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த 13ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினால் இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. தஞ்சை தமிழ் பல்கலைக்கழக வளாகத்தில் 50 ஏக்கர் பரப்பரளவில் இந்த அருங்காட்சியகம் அமையஉள்ளது. இதற்காக ரூ.57 கோடியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த அருங்காட்சியகம் சோழர்களின் வரலாறு,கலை, பண்பாடு மற்றும் நிர்வாக திறனை எடுத்துரைக்கும் படி அமைக்கப்படவுள்ளன. அதேபோல், அரியலூரிலும் கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழன் நினைவாக ‘அகழ்வைப்பகம்’ கட்டும் பணி நடந்து வருகிறது.

* திமுகவுடன் இன்று பேச்சுவார்த்தை: கொமதேக ஈஸ்வரன் தகவல்
கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களிடம் கூறியதாவது, ‘‘திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைக்காக நாளை (இன்று) எங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை (இன்று) நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம்’’ எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி குறித்தான கேள்விக்கு, ‘‘நிலையான ஒரு அரசு இல்லாமல் தமிழ்நாட்டின் வளர்ச்சியை உறுதிப்படுத்த முடியாது. ஒரு கட்சி ஆட்சியாக இருந்தால்தான், நிலையான ஆட்சியை தர முடியும். வளர்ச்சி என்பது தான் முக்கியம், மற்ற எண்ணங்கள் தான் இருக்கக் கூடாது. புதிய கட்சிகள் வருவதால் இந்த வார்த்தை தற்போது அதிகமாக பேசப்படுகிறது. அனைவரையும் பங்காளிகள் ஆக்கிக் கொள்வேன் என்பதால், தற்போது இது அதிகமாக பேசப்படுகிறது’’ என பதிலளித்தார்.

அதிமுகவின் தேர்தல் வாக்குறுதி குறித்தான கேள்விக்கு, ‘‘எதிர்க்கட்சியாக இருப்பவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக வாக்குறுதிகளை கொடுப்பார்கள். இந்த ஆட்சியால் மக்கள் எந்த அளவு பயனடைந்துள்ளார்கள் என்பதை தெரிந்துகொண்டு, அதே வழியில் எதையாவது அறிவிக்க வேண்டும் என்று அறிவிக்கிறார்கள். தற்போது கூட எங்கள் கூட்டணியில் 5 ஆயிரம் ரூபாய் மகளிருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதனை நாங்கள் தேர்தலின் போது தெரிவிக்கவில்லை. கடந்த தேர்தலில் கூறியதை அனைத்தையும் நிறைவேற்றி இருக்கிறோம். எனவே எங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது’’ என பதிலளித்தார்.

* கிரிஷ் சோடங்கர் சொன்னது சொந்த கருத்து: விஜய்வசந்த் எம்.பி நச்
தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ‘நடிகர் விஜய்யின் கொள்கைகள் காங்கிரசுடன் ஒத்துப்போகின்றன; எனவே தவெக-வுடன் கூட்டணி அமைக்கத் தயார்’ என்று கூறியிருந்தார். இது திமுக – காங்கிரஸ் கூட்டணியில் சிறு சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே செய்தியாளர்களைச் சந்தித்த விஜய் வசந்த் எம்.பி.யிடம் இது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த விஜய்வசந்த் எம்.பி ‘அவர் (கிரிஷ் சோடங்கர்) சொந்த கருத்துக்களைச் சொல்லி இருக்காரு, எதுவாக இருந்தாலும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிதான் முடிவெடுக்கும். ராகுல் காந்தியும், கார்கேயும், சோனியாகாந்தியும், கே.சி. வேணுகோபாலும் எடுக்கிற முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம்.’ என்றார். திமுக காங்கிரஸ் கூட்டணி எவ்வாறு உள்ளது என்று கேட்டதற்கு, ‘திமுக காங்கிரஸ் கூட்டணி நன்றாக உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் முன்பு குமரி மாவட்டத்திற்கு வருகை தந்து நலத்திட்டங்களை வழங்கியுள்ளார். திமுக காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது’ என்றார்.

Tags : Keezhadi-Porunai ,Sonnaru ,Senchararu ,Keezhadi ,Sivaganga district ,DMK ,Porunai Museum ,Tirunelveli ,Thamirabarani river ,MK Stalin ,
× RELATED தேர்தல் கூட்டணி தொடர்பாக...