கேள்வி: திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? பதில்: இதை நாங்கள் வரவேற்கிறோம். ஏற்கனவே வலிமையாக இருக்கும் திமுக – இந்தியா கூட்டணி இப்போது மீண்டும் மீண்டும் கூடுதல் பலம் பெற்றுள்ளது. இதை நாங்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஜூன் 3ம்தேதி மறைந்த தலைவர் கலைஞர் பிறந்தநாளில், நான் தான் அவர்களை விரும்பி அழைத்தேன். அந்த அடிப்படையில், ‘பழம் நழுவி பாலில் விழுந்தது என்று சொல்வார்கள்’ அது போன்று தேமுதிக இந்தியா கூட்டணியில் இணைந்தது மகிழ்ச்சியளிக்கிறது மற்றும் வரவேற்கத்தக்கது. கேள்வி: தேமுதிகவுக்கு இப்போது எந்த அளவுக்கு செல்வாக்கு இருப்பதாக நினைக்கிறீர்கள்? பதில்: அவர்களுக்கு செல்வாக்கு இருக்கிறதா இல்லையா என்பது பிரச்னையல்ல. ஆனால், மக்களுக்காகப் போராடுகின்ற ஒரு இயக்கம், மக்களுக்காக வாதாடுகின்ற இயக்கம், மக்கள் நலனை கருத்தில் கொள்ளும் இயக்கம். அந்த அடிப்படையில் தான் சகோதரர் விஜயகாந்த் ஆயிரக்கணக்கான கோடி சம்பாத்தியத்தை விட்டுவிட்டு தேமுதிகவைத் தொடங்கினார். அவர் மக்களோடு மக்களாக இருந்தார். அவர் ‘கேரவன் அரசியல்’ செய்யவில்லை. அவர் மக்களோடு மக்களாக அரசியல் செய்தார். வீட்டை விட்டு வராமல் இருக்கவில்லை. வீட்டை விட்டு வெளியில் வந்து அனைவரையும் சந்தித்தார். சாலையின் நடுவே இறங்கி, வேட்டியை மடித்துக் கட்டி மக்களுடன் இணைந்து போராடினார். அத்தகைய ஒரு நல்ல இயக்கம் இந்தியா கூட்டணியில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
கேள்வி: தேமுதிக இணைந்துள்ளதால் காங்கிரசுக்கான தொகுதிகள் குறையக்கூடும் என்று சிலர் பேசுவது பற்றி?
பதில்: அப்படி ஒன்றும் இல்லை. இதுகுறித்து அகில இந்திய தலைமைதான் முடிவு செய்யும். கேள்வி: ராமதாசும் இந்த கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதா? பதில்: எனக்கு தெரியாது. அவர் வருவாரா மாட்டாரா என்று என்னால் யூகிக்க முடியாது. தமிழ்நாடு முதல்வர் தான் முடிவு செய்வார். அதை பற்றிய கருத்து எதுவும் என்னிடம் இல்லை. கேள்வி: ஒரு நடிகர் புதிய கட்சி தொடங்கி இருக்கிறார், அந்த கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக வந்த தகவல்கள் பற்றி? பதில்: எந்த நடிகர் கட்சி தொடங்கினாலும், தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி தான் வெற்றி பெறும். இந்தியா கூட்டணி மட்டுமே வெற்றி பெறும். யாரும் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை, நடைபெறவும் இல்லை. அது ஒரு மாயை. காங்கிரஸ் ஒருபோதும் மறைமுக பேச்சுவார்த்தையோ அல்லது கொல்லைப்புற அரசியலோ செய்யாது. காங்கிரசுக்கு என்று ஒரு வரலாறு இருக்கிறது. பாரம்பரியம் இருக்கிறது. நாங்கள் இந்தியா கூட்டணியுடன் உறுதியாக நிற்கிறோம், அவர்களுடனேயே தொடர்கிறோம். தற்போது பேச்சுவார்த்தைகளும், தொகுதி பங்கீடும் நடந்து கொண்டிருக்கின்றன. அப்படி யாராவது ஏமாற்று வேலைகள் செய்தார்கள் என்றால் அதற்கு அவர்கள்தான் பொறுப்பு. காங்கிரஸ் கட்சி பொறுப்பு கிடையாது.
கேள்வி: தமிழக காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக நீங்கள் இருக்கும் போது, உங்களை மீறி ஒரு குரூப் விஜய் உடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்கிறார்களே? பதில்: வேறு யாராவது பேச்சுவார்த்தை நடத்தினார்களா என்று எனக்குத் தெரியாது. அப்படி செய்திருந்தால் அது தவறு. இங்கு ஒரு மாநிலத் தலைமையில்தான் கட்சி செயல்படுகிறது, பல மாநிலத் தலைமைகள் அல்ல. கேள்வி: வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்? பதில்: திமுக கூட்டணிக்கு 100 சதவீத வெற்றி நிச்சயம். 2021 சட்டமன்ற
தேர்தலை விட 2026 தேர்தலில் இக்கூட்டணி மிகப் பெரிய வெற்றியை பெறப் போகிறது. பொதுவாக இந்தியாவில் ஒரு முதல்வருக்கோ அல்லது அரசுக்கோ எதிரலை இருக்கும். ஆனால், தமிழக முதல்வருக்கு ஆதரவாகப் பெரிய ஆதரவு அலைதான் பெரிய அளவில் வீசிக் கொண்டிருக்கிறது. முதல்வரின் இந்த ஆதரவு அலை என்பது இந்திய அரசியலில், குறிப்பாக தமிழக அரசியலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மிகப் பெரிய வெற்றியைத் தரும். கேள்வி: காங்கிரஸ் கட்சியில் மாணிக்கம் தாகூர் போன்ற எம்பிக்கள் தொடர்ந்து கூட்டணியை விமர்சிக்கிறார்கள், உங்கள் எச்சரிக்கையை மீறி செயல்படும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? பதில்: அதுகுறித்து அகில இந்திய தலைமை பரிசீலித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்.
இதைப் பற்றி எனக்கு கருத்து சொல்வதற்கு ஒன்றுமில்லை. என்ன நடந்தது என்பதை அகில இந்திய தலைமைக்கு தெரிவித்துள்ளேன். கேள்வி: கட்சிக்கு எதிராகச் செயல்படுபவர்களை உங்களால் கன்ட்ரோல் பண்ண முடியவில்லை என்ற பேச்சு உலாவுகிறதே? பதில்: கட்டுப்படுத்த முடியவில்லை என்றெல்லாம் கிடையாது. அகில இந்திய தலைமை, பொது வெளியில் தேர்தலை பற்றியோ, கூட்டணி குறித்தோ கட்சியினர் யாரும் பகிரங்கமாகப் பேசக்கூடாது என்று ஜனவரி 16ம்தேதி அன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. அதையும் மீறி பேசுகிறார்கள் என்றால் அகில இந்திய காங்கிரஸ் தலைமை அதையும் கவனித்துக் கொண்டிருக்கிறது. அகில இந்திய தலைமை தக்க நேரத்தில் முடிவெடுப்பார்கள். அகில இந்திய தலைமைதான் முடிவெடுக்கும். கேள்வி: தமிழகத்தில் ராகுல்காந்தி பிரசாரம் இருக்குமா? பதில்: இந்த மாத இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் அவரை எதிர்பார்க்கிறோம். எந்த இடம் என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை. முடிவு செய்த உடன் அதைப் பற்றிய விவரங்கள் பகிரப்படும்.
