×

சென்னையில் உள்ள தொகுதிகளில் வரும் 12ம் தேதி முதல் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி: மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026 னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்கு 12.04.2026 அன்று முதல் 18.04.2026 வரை வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்றத் தொகுதிகளில் 13,95,716 ஆண் வாக்காளர்கள், 14,96,921 பெண் வாக்காளர்கள் மற்றும் 868 இதர வாக்காளர்கள் என மொத்தம் 28,93,505 வாக்காளர்கள் உள்ளனர். சென்னை மாவட்டத்தில் 975 இடங்களில் 4,085 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்கு 12.04.2026 அன்று முதல் 18.04.2026 வரை வாக்காளர் தகவல் சீட்டு (VIS) அந்தந்தப் பகுதிகளின் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) மூலமாக விநியோகம் செய்யப்படவுள்ளது.

தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வாக்காளர் தகவல் சீட்டு (VIS) விநியோகத்திற்கான அட்டவணையை தயாரித்து, அதனடிப்படையில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக வழங்கப்படவுள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலை அலுவலருக்கும் (BLO) ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிக்குட்பட்ட வாக்காளர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டினை வழங்கி கையெழுத்து அல்லது விரல் அடையாளத்தைப் பெற தெரிவிக்கப்பட்டுள்ளது. விநியோகிக்கப்படாத வாக்காளர் தகவல் சீட்டு அனைத்தும் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மூலமாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் திருப்பி வழங்கிடவும், அவை மூடும் உறையில் பாதுகாப்பாக வைத்திடவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலின்படி, வாக்காளர்களின் வசதியை அதிகரிக்கும் நோக்கில், வாக்காளர் தகவல் சீட்டு வடிவமைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாற்றியமைக்கப்பட்ட வடிவமைப்பில் வாக்காளரின் வரிசை எண் மற்றும் பகுதி எண் ஆகியவை சீட்டின் மேல் வலது மூலையில் பெரிய எழுத்துருவில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும்.

இம்மாற்றம் மூலம் வாக்காளர்கள் தங்கள் வாக்குச்சாவடியை எளிதில் அடையாளம் காணவும், வாக்குப்பதிவு அலுவலர்கள் வாக்காளர் பெயரை வாக்காளர் பட்டியலில் விரைவாக கண்டறியவும் உதவியாக இருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட தகவலை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

Tags : Chennai ,Tamil Nadu Assembly General Election ,2026 ,Chennai District ,Council Commissioner ,J. Kumaraguruparan ,
× RELATED தமிழகத்தில் 4,613 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்