- பெரம்பூர்
- திமுக
- ஆர்.டி.சேகர்
- மதச்சார்பற்ற முன்னேற்ற கூட்டணி
- கீதா
- வியாசர்பாடி அம்பேத்கர் கலைக் கல்லூரி
பெரம்பூர்: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் 3வது முறையாக ஆர்.டி. சேகர் போட்டியிடுகிறார். இவர் இன்று காலை பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வியாசர்பாடி அம்பேத்கர் கலை கல்லூரியில் உள்ள பெரம்பூர் தேர்தல் நடத்தும் அலுவலர் கீதாவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். முன்னதாக சர்மா நகர் பகுதியில் இருந்து கூட்டணி கட்சி நிர்வாகிகள் சுமார் 2 ஆயிரம் பேருடன் ஊர்வலமாக சென்றார். அப்போது கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வேட்புமனு தாக்கல் செய்த பிறகு ஆர்.டி.சேகர் கூறுகையில், ‘’3வதுமுறையாக பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெறுவேன். சினிமா நட்சத்திரத்துக்கு வரும் கூட்டத்தை பற்றி கவலைப்பட தேவையில்லை. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே மட்டுமே போட்டி. பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் போட்டியாளர்களாகத்தான் கருதுகிறேன். இன்று மூன்றாவது முறையாக போட்டியிடுகிறேன். ஆனால் முதல் முறையாக போட்டியிடுவது போல உணர்கிறேன்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் பொதுமக்களுக்கு தமிழக முதல்வரால் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு திட்டங்கள் மற்றும் சாதனைகளை கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவேன். குறிப்பாக பெண்களுக்கு தமிழக அரசு செய்துள்ள திட்டங்களை வீடு, வீடாக எடுத்து செல்வதன் மூலம் எளிதில் வெற்றிபெற முடியும்’ என்றார். வேட்பு மனு தாக்கலின்போது மாநிலங்களவை உறுப்பினர் கிரிராஜன், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மகேந்திரன் மற்றும் தோழமை கட்சியினர் இருந்தனர்.
