சென்னை, ஏப்.4- தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் ஒருநாள் மட்டுமே உள்ளதால் அரசியல் கட்சிகள் இன்று போட்டி போட்டு மனு தாக்கல் செய்தனர். தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடக்கிறது. கடந்த 30ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. முதல் நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின், நாம் தமிழர் கட்சி சீமான், தவெக தலைவர் விஜய் மற்றும் அமைச்சர்கள், திமுக, அதிமுக வேட்பாளர்கள், சுயேச்சைகள் ஆர்வமுடன் வேட்பு மனு தாக்கல் செய்தனர். காலை 11 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி வரை வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாளில் தமிழகம் முழுவதும் 573 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஏப்ரல் 6ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.
இதைத்தொடர்ந்து 31ம் தேதி (மகாவீர் ஜெயந்தி), 1ம் தேதி (வங்கி விடுமுறை) என 2 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை என்பதால், மனு தாக்கல் செய்யப்படவில்லை. இரண்டு நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் (2ம் தேதி) காலை 11 மணிக்கு மீண்டும் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. 2வது நாளில் மட்டும் சுமார் 800 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். நேற்று (3ம் தேதி) பெரிய வெள்ளி என்பதால் அரசு விடுமுறை. வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது. இன்று 4ம் தேதி (சனி) வேட்புமனு தாக்கல் செய்யலாம். இதைத்தொடர்ந்து அரசியல் கட்சிகள் ஆர்வமுடன் இன்று காலை 11 மணி முதல் மால 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்தனர். இன்று மட்டும் சுமார் 600 பேருக்கு மேற்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர்.
தொடர்ந்து நாளை (5ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை என்பதால் அரசு விடுமுறை ஆகும். மனு தாக்கல் செய்ய முடியாது. அடுத்து இறுதி நாளான 6ம் தேதி (திங்கள்) வேட்புமனு தாக்கல் செய்யலாம். அதன்படி, தமிழகத்தில் இன்னும் ஒருநாள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும். இறுதிநாளான வருகிற திங்கட்கிழமை விடுபட்ட திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் அனைவரும் வேட்புமனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர். மேலும், காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் பட்டியல் நேற்று மாலைதான் வெளியானது. அவர்களும் இறுதிநாளான திங்கட்கிழமை தான் வேட்புமனு தாக்கல் செய்கிறார்கள்.
7ம் தேதி வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும். 9ம் தேதி மாலை 3 மணி வரை வேட்புமனுவை வாபஸ் வாங்கலாம். அன்றைய தினம் மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். சுயேட்சை வேட்பாளர்களுக்கு 9ம் தேதி மாலை 3 மணிக்கு மேல் சின்னம் ஒதுக்கப்படும். அதன் அடிப்படையில், வேட்பாளரின் போட்டோ, சின்னம், பெயர் விவரங்களுடன் பேலட்ஷீட் தயாரிக்கப்பட்டு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பொருத்தும் பணிகள் நடைபெறும். இதைத்தொடர்ந்து தமிழகத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பிரசாரம் மேலும் சூடுபிடிக்கும். 21ம் தேதி மாலை 6 மணி வரை பிரசாரம் செய்யலாம். 23ம் தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, இடைவிடாமல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். மே 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
