“இது மாசி மாசமா? பங்குனி மாசமா? வெயில் இந்த காட்டு காட்டுது’’ என வெயிலை சபித்தவாறே, தனது முகத்தில் இருந்த வியர்வைத்துளிகளை சேலைத்தலைப்பால் ஒத்தி எடுத்தபடி அலுவலகத்தின் உள்ளே நுழைந்தார் அஜிதா. அவருக்கு ஜில்லென்று ஒரு டம்ளரில் மோர் கொடுத்து, “தமிழகத்தில் நிலவும் வெயில் மாதிரி அரசியல்லயும் எதாவது ஹாட் நியூஸ் இருக்கா?’’ என கேட்டோம். ஒரு சிப் மோர் அருந்திவிட்டு, “எக்கச்சக்கமா இருக்கு’’ என்றபடியே அடுத்தடுத்து சிப் மோர் அருந்தியடி தகவல்களை அடுக்க ஆரம்பித்தார். “தமிழகத்தில் தேர்தல் நடத்துவது குறித்தும், தேதியை முடிவு செய்வது குறித்தும் ஆலோசனைக் கூட்டம் நடத்த வருகிற 26ம் தேதி தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்வர் சென்னை வராரு. இங்க 2 நாட்கள் தங்கும் அவரு முதல்நாள் அரசியல் கட்சி நிர்வாகிகளிடம் கருத்து கேட்கிறார். அடுத்த நாள் தலைமை செயலாளர் முருகானந்தம், டிஜிபி வெங்கட்ராமன், போலீஸ் கமிஷனர் அருண் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்துறார். அதன்பின்னர் டெல்லி போறாரு. ஓரிரு நாள்ல தேர்தல் தேதியை அறிவிக்கிறாரு. மாநிலங்களவை தேர்தல் வருகிற மார்ச் 16ம் தேதி நடக்குது. 20ம் தேதி தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வருது. இதனால் 20ம் தேதிக்குப் பிறகுதான் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும்னு சொல்லப்படுது. ஆனால் அப்படி இல்லையாம். தேர்தல் நடைமுறைக்கும், மாநிலங்களவை தேர்தலுக்கும் சம்பந்தம் இல்லையாம்.
இருந்தாலும் மார்ச் 2வது வாரத்தில அதாவது தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தல் முடியும் நாள்லயோ அல்லது அடுத்த ஓரிரு நாள்லயோ தேர்தல் அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் வெளியிடுமாம். அறிவிப்பு வெளியிட்ட நாள்ல இருந்து ஒரு மாதத்தில் தேர்தல் நடக்குமாம். இதனால, ஏப்ரல் 16ம் தேதி தேர்தல் நடைபெறும்னு தேர்தல் ஆணையம் அறிவிக்கத் திட்டமிட்டிருக்காம். மேலும், தமிழகத்தில் பல கட்ட தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செஞ்சிருந்ததாம். ஆனா சமீபத்தில் சென்னை வந்த தேர்தல் துணை ஆணையரிடம், ஒரே கட்டமாக தேர்தல் நடத்துவதுதான் நல்லதுன்னு அனைத்து அதிகாரிகளும் தங்கள் கருத்துக்களை பதிவு செஞ்சாங்களாம். இதனால ஒரே கட்டமா தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தற்போது முடிவு செஞ்சிருக்காம். ஆனால் கடந்த தேர்தலை விட இந்த முறை நடைபெறும் சட்டப்பேரவை தேர்தல் கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுமாம். வருமான வரித்துறை, அமலாக்கத்துறையின் கெடுபிடியும் அதிகமா இருக்குமாம்’’ என்றவரிடம் திமுக-தேமுதிக கூட்டணி பத்தி ஏதாவது தகவல் இருக்கா? என பீடிகை போட்டோம்.
“திமுக கூட்டணியில் தேமுதிக இணைஞ்சதுல அந்தக் கட்சி தொண்டர்கள் ரொம்பவே மகிழ்ச்சியடைந்து, பட்டாசு வெடித்து கொண்டாடினாங்க. அதற்கு காரணம், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் திமுக கூட்டணியில இணைய வேண்டும்னு 90 சதவீத மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தி இருக்காங்க. அதுமட்டுமில்லாம, திமுக கூட்டணியில் எத்தனை சீட் கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு போட்டியிட்டால் ஜெயிச்சிடலாம். அதிமுக கூட்டணியில் எவ்வளவு சீட் அதிகமாக பெற்றாலும் ஜெயிக்க முடியாதுன்னு சொன்னவங்க, அந்த கூட்டணியா இருந்தா தங்களுக்கு சீட்டே வேண்டாம்னு சொல்லி இருக்காங்களாம். இதனால் உங்கள் கருத்தை எழுதிக் கொடுங்கன்னு பிரேமலதா தொண்டர்களிடம் கேட்டிருக்கார். அவங்களும் தங்களோட கருத்துகளை எழுதிக் கொடுத்துருக்காங்க. இதனால் முன்கூட்டியே திமுக கூட்டணிக்கு செல்வதுன்னு தேமுதிக முடிவெடுத்துருச்சாம். ஆனா இது தெரியாம, அதிமுக கூட்டணி பலமுறை தங்கள் கூட்டணிக்கு வருமாறு அழைத்தபடியே இருந்தார்களாம். ஆனால் என்ன செய்வது கூட்டணி திமுகவுடன்தான் என்று பிரேமலதா அறிவித்து, இணைந்து விட்டார். இந்த இணைப்புக்கு பாலமாக இருந்தது அமைச்சர் எ.வ.வேலுதானாம். அமைச்சரும், பிரேமலதாவும் பக்கத்து மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாம். இதனால்தான் அவர் கூட்டணிக்கு பிரேமலதாவை அழைத்து வந்தாராம்’’ என்றவர், நமது ஏக்கப்பார்வையை அறிந்தவராக, “வேற ஏதாவது இருக்கான்னு கேட்கிறீங்கதானே. சொல்றேன் இருங்க’’ என்ற இழுவையோடு ஓபிஎஸ் திமுக பக்கம் சாயும் கதையை சொன்னார்.
“அதிமுகவுல சேர்க்கவே மாட்டேன்னு எடப்பாடி சொன்னதுக்கு அப்புறம், பாஜ நம்மள எப்படியாவது அதிமுகவுல சேர்த்துரும்னு நம்பிட்டு இருந்தாரு. ஆனா, வழக்கம்போல பாஜ நம்ப வச்சு அவர கழுத்தறுத்துடுச்சி. தை பிறந்தா வழி பிறக்கும் என்று நம்பிட்டு இருந்த அவருக்கு தை முடிஞ்சும் எந்த வழியும் பிறக்கல. அவரு கூட இருந்த எல்லாரும் பிச்சிகிட்டு போனதுதான் மிச்சம். அவருடன் இருந்த மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் திமுகவுல சேர்ந்துட்டாங்க. இன்னும் சிலர் மாற்றுக்கட்சிக்கு போயிட்டாங்க. இதனால இவரோட வாரிசு, நடிகர் கட்சிக்கு போகலாம் என்று சொல்லி இருக்காரு. ஆனால், முதல்வரா நான் இருந்துட்டு, நேற்று வந்த நடிகர்கிட்ட போய் கைகட்டி நிக்கணுமா? செங்கோட்டையனுக்கு என்ன மரியாதை இருக்குன்னு பாத்தீயா என டென்ஷனானாராம்.
இந்த தேர்தல்ல நாம யாருன்னு காட்டலன்னா அரசியல் எதிர்காலமே இல்லாம போயிடும்னு ஓபிஎஸ் புலம்பிட்டு வந்தாராம். இதனால் அவங்க குடும்பத்தினர் சில கோயில்களை சொல்லி அங்க போக சொல்லி இருக்காங்க. அந்த கோயில்களுக்கு வாரிசோட போயிட்டு வந்திருக்காரு… கோயிலுக்கு போயிட்டு வந்தும் அவரு வாய் திறக்காததுனால அரசியலில் பழுத்த பழம் என்று கூறப்படும் பண்ருட்டி ராமச்சந்திரன், ஓபிஎஸ்கிட்ட இருந்து வெளியே வந்து 89 வயசுல புதிய கட்சி ஸ்டார்ட் பண்ணாரு. அப்போது, ஓபிஎஸ் அத்தியாயம் முடிந்துவிட்டது.
அவருக்காக நான் என்ன தற்கொலையா செஞ்சுக்க முடியும்னு செய்தியாளர்கள் சந்திப்புல பண்ருட்டி கொந்தளிச்சாரு.
இப்படி இருக்குறவங்க எல்லாம் டாடா காட்டிட்டு போனதால, தன்னுடைய இருப்பை நிரூபிக்க ஓபிஎஸ் க்கு இருக்கும் ஒரே வழி திமுக பக்கம் போறதுதானு முடிவு செய்தாராம். ஏற்கனவே, சி.எம்ம வாக்கிங் போகும்போதும், வீட்டிலயும் ஓபிஎஸ் சந்திச்சு பேசி இருந்தாரு. சட்டசபை கடைசி நாள்ல சி.எம்ம சந்திச்சு ஓபிஎஸ் பேசி இருக்காரு. வெளியே வந்து திமுக ஆட்சி தான் வரும்னு சொல்லி இருக்காரு. சட்டசபைல அவரோட ஆதரவு எம்எல்ஏ அய்யப்பனும், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆசியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆட்சி அமைப்பார் என்று பேசி உள்ளார். இதன் மூலம், ஓபிஎஸ் திமுக கூட்டணியில் விரைவில் ஐக்கியமாவார் என்று உறுதியாகி உள்ளது’’ என்று அஜிதா இத்துடன் தனது தகவல் களஞ்சியத்தை மூடிவிடுவார் என நினைத்தோம். ஆனால், “இன்னொரு காமெடியான சங்கதி இருக்கு… கேளுங்க!’’ என பனையூர் சங்கதியை எடுத்துவிட்டார். “நடிகர் விஜய் வருகிற 29ம் தேதி சென்னையில் பொதுக்குழுவை கூட்டுறாராம். அந்த பொதுக்குழுவில் தன்னால் தமிழகம் முழுவதும் பிரசாரத்துக்கு வர முடியாது. அதேநேரத்தில் பொத்தாம் பொதுவாக கூட்டம் நடக்கும். அங்கு வருவேன் என்று அறிவிக்க உள்ளாராம். இதனால் தொண்டர்கள் பிரசாரத்தை தீவிரப்படுத்தி அவரை முதல்வராக்க வேண்டும்னு ஒரு டிப்ரெண்ட் ஆர்டர் போடப்போறாராம்’’ என்றபடியே மீண்டும் பங்குனி வெயில்… சாரி… மாசி வெயிலோடு உலாவுக்கு செல்ல வண்டியை ஸ்டார்ட் செய்தார்.
