திருவள்ளூர், பிப்.26: திருவள்ளூர் மாவட்டம் 1.1.1997ல் உதயமாகி 27 ஆண்டுகள் பூர்த்தி அடைந்துள்ளது. 1997ல் அப்போதிருந்த மக்கள் தொகைக்கு ஏற்ப மாவட்ட தலைநகரான திருவள்ளூர் நகரின் மையப் பகுதியில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. இங்கிருந்து திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், திருச்சி மற்றும் ஆந்திர மாநிலம் திருப்பதி கர்நாடக மாநிலம் பெங்களூரு உள்பட பல்வேறு நகரங்களுக்கும் மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. நாள் ஒன்றுக்கு 40 முதல் 50 பேருந்துகள் மட்டுமே திருவள்ளூர் பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் வந்து செல்கின்றன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட போலீஸ் எஸ்பி அலுவலகம், ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றங்கள், மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், மாவட்ட வனத்துறை அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம், வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம் பொதுப்பணித்துறை அலுவலகம், முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகம், மாவட்ட விளையாட்டு மைதானம், போலீஸ் டிஎஸ்பி அலுவலகம், நகராட்சி அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகம், தீயணைப்பு நிலையம் உள்பட மாவட்ட அளவிலான அனைத்து அரசு அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன. இதனால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களின் தேவைகளுக்காகவும், கோரிக்கைகளுக்காகவும் திருவள்ளூர் நகருக்கு வந்து செல்கின்றனர்.
மேலும் திருவள்ளூர் அருகே அரசு சட்டக் கல்லூரி, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள் பாலிடெக்னிக் கல்லூரி, தனியார் மெட்ரிக் மேல்நிலை பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள், அரசு நிதிநாடும் மேல்நிலை பள்ளிகள் என அதிகளவில் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இதனால் சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருப்பதி, திருச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம் உள்பட பிற மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பேருந்துகள் வந்து செல்கின்றன.
தற்போது திருவள்ளூர் பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் திருப்பதி, அரக்கோணம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, திருத்தணி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு நாள் தோறும் 80க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், திருவள்ளூரிலிருந்து ஆவடி, பூந்தமல்லி, கோயம்பேடு, தியாகராய நகர், செங்குன்றம், மந்தவெளி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு 100க்கு மேற்பட்ட சென்னை மாநகரப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. மேலும் 50க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளும் திருவள்ளூர் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றன.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி, ஊத்துக்கோட்டை, பொன்னேரி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் இருந்தும் பேருந்துகள் வந்து செல்கின்றன. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திருவள்ளூருக்கு ஆயிரக் கணக்கான மக்கள் பேருந்துகளில் வந்து செல்கின்றனர். அதேபோல், திருவள்ளூரில் இருந்து சென்னை உள்பட பிற மாவட்டங்களுக்கும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி்களுக்கு செல்பவர்கள் என ஏராளமானோர் சென்று வருகின்றனர். இதனால் திருவள்ளூர் நகரில் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை எப்பொழுதும் போக்குவரத்து நெரிசலாகவே உள்ளது.
அது மட்டுமல்லாமல் பேருந்து நிலையத்திற்கு செல்லும் சாலையும் குறுகிய சாலையாக இருப்பதால் காலை நேரத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு செல்பவர்களும், வேலைகளுக்கு செல்பவர்களும் மாலை நேரத்தில் பள்ளி விடும்போது போக்குவரத்து நெரிசல் ஒரு பக்கமும், விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுமோ என்ற அச்சமும் அவ்வழியாக செல்லும் அனைவருக்குமே ஏற்படுவதுண்டு. அதேபோல் நகரின் மையப் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கியபடியே நாள்தோறும் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் காலை, மாலை நேரங்களில் நாள்தோறும் படிக்கட்டுகளில் தொங்கியபடியே மாணவர்கள் செல்லும் நிலையும் உள்ளது. இதனால் உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் அதிகளவில் உள்ளது. எனவே போக்குவரத்து நெரிசலை குறைக்க மாற்று இடத்தில் பேருந்து நிலையம் அமைக்க திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன், திருவள்ளூர் நகரமன்ற தலைவர் உதய மலர் பாண்டியன் ஆகியோர் தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டனர். இந்நிலையில் திருவள்ளூரிலிருந்து ஊத்துக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள வேடங்கிநல்லூர் என்ற பகுதியில் 5 ஏக்கர் பரப்பளவில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என திமுக தலைமையிலான தமிழக அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து அதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டது.
இதனையடுத்து கடந்த 2023 ஜூலை மாதம் ரூ.33 கோடி மதிப்பீட்டில் 5 ஏக்கர் பரப்பளவில் பேருந்து நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கியது. இந்த பேருந்து நிலையத்தில் 100க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள் வந்து, நின்று, செல்வதற்கு எதுவாக தீவிரமாக அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல் வணிக வளாகங்களும், போக்குவரத்து அலுவலகம் ஆகியவை கட்டும் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று இறுதி கட்ட நிலையை புதிய பேருந்து நிலையம் எட்டியுள்ளது. இது குறித்து வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ கூறுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் உத்தரவின் பேரில் புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று பணிகள் அனைத்தும் முடிவடையும் நிலையில் உள்ளது. அடுத்த வாரம் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும். இதனால் திருவள்ளூர் நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும். போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் விபத்துகளும் முற்றிலும் குறையும் என்றார்.
திருவள்ளூர் – ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் வேடங்கிநல்லூர் பகுதியில் நகராட்சி நிர்வாக துறை சார்பில் 5.583 ஏக்கர் பரப்பளவில் ரூ. 33 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலைய கட்டிட கட்டுமான பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில் மாவட்ட கலெக்டர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அப்போது அவர் கூறியதாவது, புதியதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தில் 56 பேருந்துகள் நிறுத்தும் வசதியும், கடைகளும், பாலூட்டும் தாய்மார்களுக்கான அறையும, நிர்வாக அறையும், உணவகம், வங்கி ஏடிஎம், காவலர் அறை, 2 மற்றும் 4 சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமும், கழிவறை வசதிகள் ஆகிய வசதிகளுடன் ரூ. 33 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது என கலெக்டர் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது நகராட்சி ஆணையர் நா.தாமோதரன், நகராட்சி பொறியாளர் சரோஜா மற்றும் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
