×

செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு பொதுமக்கள் சாலை மறியல்

புழல், பிப்.24: புழல் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தின் மீது செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. புழல் ஸ்டீபன் திருமாறன் தெருவில் மகேந்திரன் என்பவருக்கு சொந்தமான குடியிருப்பு கட்டிடத்தின் மீது, தனியார் நிறுவனத்தின் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிக்கான கட்டிடத்தில் மீது உபகரணங்கள் இறக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் வசித்து வரும் 700க்கும் மேற்பட்ட பகுதி குடியிருப்பு சார்ந்தவர்கள் ஒன்று திரண்டு, கேள்வி எழுப்பி உள்ளனர்.

அப்பொழுது, செல்போன் நிறுவனத்தின் அதிகாரிகள் தகுந்த பதில் அளிக்காததை கண்டித்து, கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை, புழல் அம்பேத்கர் சிலை அருகில் சென்னை நோக்கி செல்லும் திசையில், 24வது வார்டு அதிமுக கவுன்சிலர் சேட்டு, சமூக ஆர்வலர் ஆம்புலன்ஸ் பாலாஜி, வட்ட திமுக பிரதிநிதி நாகராஜ் மற்றும் பொதுமக்கள் நேற்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த புழல் காவல் துறையினர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

இதனையடுத்து, புழல் காவல் ஆய்வாளர் வசந்த ராஜா, செல்போன் கோபுரம் அமைக்க உள்ள கட்டிடத்தின் பகுதியை பார்வையிட்டு, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது, அவரிடம் கோபுரம் அமைப்பது குறித்து பொதுமக்கள் கேள்வி கேட்டபோது, நீங்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டால், உங்கள் மீது வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்து விடுவேன் என்று கூறியுள்ளார். இதனால் பொதுமக்களுக்கும், காவல் ஆய்வாளர் வசந்த ராஜாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இச்சம்பவதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Tags : Puzhal ,Mahendran ,Stephen Thirumaran Street ,
× RELATED தச்சூர்-சித்தூர் இடையே ரூ.3,998 கோடியில் 6...