- தலைமை தேர்தல் ஆணையர்
- இந்தியா
- சென்னை
- தமிழ்நாடு சட்டமன்றம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- புதுச்சேரி
- தமிழ்
- தமிழ்நாடு
- புதுச்சேரி சட்டசபை
- தமிழ்நாடு…
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் குறித்து ஆலோசனை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் இன்று மதியம் சென்னை வந்தார். பின்னர், தனி விமானத்தில் புதுச்சேரி சென்றார். நாளையும், நாளை மறுதினமும் சென்னையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அப்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எந்த தேதியில் தேர்தல் நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படுகிறது. தமிழகத்தில் ஆளும் திமுக அரசின் பதவிக்காலம் மே மாதம் 10ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதேபோல், புதுச்சேரி (ஜூன் 15), மேற்கு வங்காளம் (மே 7), அசாம் (மே 20), கேரளா (மே 23) ஆகிய மாநிலங்களின் பதவிக்காலமும் முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து இந்த 5 மாநிலங்களில் உள்ள 824 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, ஒவ்வொரு மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடனும் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் தேர்தல் வன்முறை குறைவு என்பதால், எப்போதும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. வடமாநிலங்களில்தான் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், தற்போது நடைபெற உள்ள 5 மாநில தேர்தலை கண்காணிக்க 714 ஐஏஎஸ் அதிகாரிகளும், 233 ஐபிஎஸ் அதிகாரிகளும் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், 497 செலவின பார்வையாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடைபெற்றது. ஆனால், வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2ம் தேதிதான் நடந்தது. கொரோனா காலம் என்பதால், அப்போது முன்கூட்டியே தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. பின்னர், மற்ற 4 மாநிலங்களிலும் நடைபெற்ற பல கட்ட தேர்தலுக்கு பிறகு மொத்தமாக மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த முறை வெயிலின் தீவிரத்தை கருத்தில் கொண்டு ஏப்ரல் இறுதியில் தமிழக சட்டப்பேரவை தேர்தலை நடத்தலாமா? என்று தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, 5 மாநில தேர்தல்களை 5 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ள நிலையில், அதில் கடைசி கட்டமாக தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படலாம் என தெரிகிறது.தமிழகத்தில் கடந்த 1952ம் ஆண்டு முதல் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற்று வந்தாலும், ஆரம்பத்தில் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களிலேயே தேர்தல் நடந்துள்ளது. அதன்பிறகு பெரும்பாலும் மே மாதமே சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது.
இதற்கு முன்பு, 2001 (மே 10), 2006 (மே 8), 2016 (மே 16) ஆகிய ஆண்டுகளில் மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றுள்ளது. 2011 (ஏப்ரல் 13), 2021 (ஏப்ரல் 6) ஆண்டுகளில்தான் ஏப்ரல் மாதமே தேர்தல் நடந்துள்ளது. அந்த வகையில், இந்த ஆண்டும் தமிழகத்தில் ஏப்ரல் மாதம் இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்று தெரிகிறது. தேர்தல் தொடர்பான அறிவிப்பு மார்ச் மாதம் 2வது வாரம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தேர்தல் தொடர்பான ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், தேர்தல் கமிஷனர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி உள்பட 15 அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இன்று காலை 10 மணிக்கு டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு மதியம் 12.55 மணிக்கு சென்னை வந்தனர். இந்திய தேர்தல் அதிகாரிகளை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வரவேற்றார். பின்னர், 1.30 மணிக்கு, சென்னை விமான நிலையத்தில் தயாராக இருந்த தனி விமானத்தில் புதுச்சேரி புறப்பட்டு சென்றனர். புதுச்சேரியில் இன்று மாலை தேர்தல் அதிகாரிகள், போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்கள். இன்று இரவு புதுச்சேரியில் தேர்தல் அதிகாரிகள் தங்குகிறார்கள்.
இதைத்தொடர்ந்து நாளை காலை 10 மணிக்கு தனி விமானத்தில் சென்னை வரும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் சென்னை, எம்ஆர்சி நகரில் உள்ள ஒரு நட்சத்திர விடுதிக்கு செல்கிறார்கள். அங்கு இன்று மாலை தமிழக தேர்தல் தொடர்பான ஆலோசனையில் ஈடுபடுகிறார்கள். பின்னர் 2வது நாளாக, நாளையும் தமிழக தேர்தல் தொடர்பான அரசு அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், அனைத்து மாவட்ட எஸ்பிக்கள், உயர் போலீஸ் அதிகாரிகள், தேர்தல் தொடர்பான மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் அனைத்துக்கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்கள்.
இந்திய தலைமை தேர்தல் அதிகாரிகள் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் எஸ்.பி.க்கள், கமிஷனர்கள், தேர்தல் பார்வையாளர்கள் ஆகியோருடனும், அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனும் ஆலோசனை நடத்தி முடித்துவிட்டு நாளை இரவு அல்லது 28ம் தேதி டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3 நாள் நடைபெறும் ஆலோசனையின்போது, இந்த இரண்டு மாநிலங்களிலும் எந்த தேதியில் தேர்தல் நடத்துவது மற்றும் எத்தனை கட்டங்களாக தேர்தல் நடத்துவது என்பது குறித்து முக்கிய முடிவு எடுக்க இந்திய தலைமை தேர்தல் ஆணையர் முடிவு செய்ய திட்டமிட்டுள்ளார்.
