×

தன் உடலை கூட கொடையாக கொடுத்து விட்டு போய்விட்டார் : நல்லக்கண்ணு மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்!!

சென்னை: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான மக்கள் தோழர் இரா.நல்லகண்ணு காலமானார்.அவருக்கு வயது 101. மறைந்த தோழர் நல்லகண்ணுவின் உடல் அவரது விருப்பப்படியே மருத்துவ மாணவர்களின் கல்விக்காக சென்னை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக ஒப்படைக்கப்படுகிறது. மறைந்த நல்லக்கண்ணுவுக்கு அரசியல் தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

திமுக எம்.பி.கனிமொழி : விடுதலைப் போராட்டம் தொடங்கி, தீண்டாமை ஒழிப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு என சமூகச் சீர்திருத்த போராட்டங்களில் தன் வாழ்நாளெல்லாம் உழைக்கும் மக்களுடன் தோளோடு தோள் நின்ற முதுபெரும் பொதுவுடைமைப் போராளி – தகைசால் தமிழர் ஐயா நல்லக்கண்ணு அவர்களுக்கு செவ்வணக்கம்!தியாகங்களும் போராட்டங்களும் நிறைந்த பெருவாழ்வுக்கு சொந்தக்காரரான அவரது புகழ் இத்தமிழ் நிலத்தில் என்றும் நிலைத்திருக்கும்.

CPI மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்: தமிழ் நிலப்பரப்பின் பேரன்பு தலைமகன், நீண்ட நெடுங்கால பொதுவாழ்வில் உழைப்பாளிகளுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் தன் வாழ்வை தியாகம் செய்த, எளிய மக்களுக்காகவும் சிந்தித்த பேரன்புத் தோழர் தன் சிந்தனையை நிறுத்திக்கொண்டார். தான்கொண்ட கொள்கையிலும், நடைமுறை வாழ்விலும் தன் இறுதி மூச்சுவரை சமரசமின்றி வாழ்ந்தவர் தோழர் நல்லகண்ணு. அவருக்கு எங்கள் செவ்வஞ்சலியை செலுத்துகிறோம்.

பாஜக மூத்த தலைவர் தமிழிசை : சுதந்திரப் போராட்ட வீரர் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் R. நல்லகண்ணு அவர்கள் மறைவுச் செய்தி மிகுந்த துயரத்தை அளிக்கிறது. வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக போராடிய அவரது சேவை என்றும் நினைவுகூரப்படும்.அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். குடும்பத்தினர் மற்றும் தோழமைகளுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை : தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சமூக இயக்கங்களுக்கு நல்லகண்ணு மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். தோழர் இரா. நல்லகண்ணு அவர்களின் நினைவு எப்போதும் சமூகநீதிக்கான போராட்டங்களில் வழிகாட்டியாக இருக்கும்.அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், பொதுவுடமை இயக்க தலைவர்கள் மற்றும் நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தூணாக விளங்கிய நல்லகண்ணு, தமது வாழ்நாளில் எளிமையை கடைபிடித்து, லஞ்சம் மற்றும் ஊழலுக்கு அப்பாற்பட்ட நேர்மையான அரசியல்வாதியாக தன்னை நிலைநிறுத்தியவர். பொதுமக்களின் நலனுக்காக போராடிய அவரது சேவை என்றும் ஆழ்ந்த நினைவுகூரப்படும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், அவர் சார்ந்த இயக்கதிற்கும் இரங்கலையும்,அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் : பொதுவாழ்க்கையில் தியாகம், தொண்டு, நேர்மை, எளிமை ஆகியவற்றிற்கு எடுத்துக்காட்டாக விளங்கியதோடு, தன் வாழ்நாள் முழுவதையும் ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் விவசாயிகளின் மேம்பாட்டிற்காக அர்ப்பணித்திட்ட எளிமையின் சிகரம் ஐயா இரா.நல்லகண்ணு அவர்களின் மறைவு இந்திய தேசத்திற்கே மிகப்பெரிய இழப்பாகும்.

நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் : மகத்தான மாமனிதரை இழந்துள்ளோம்; எவராலும் குறை சொல்லமுடியாத மனித புனிதர் அவரது மறைவு மிகுந்த மனவலியாக இருக்கிறது; ஒரு தலைவன் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அவர் ஒரு சான்று..! தன் உடலை கூட கொடையாக கொடுத்து விட்டு போய்விட்டார்.

Tags : Nallakannu ,Chennai ,Communist Party of India ,Comrade ,I. Nallakannu ,Chennai Medical College ,
× RELATED உழைக்கும் மக்களுடன் தோளோடு தோள் நின்ற...