×

உழவு மற்றும் பசுந்தாள் உரப்பயிர்களும் நன்மை தரும் கோடைகாலத்தில் விவசாய நில மேலாண்மைக்கான வழிமுறைகள்

*வேளாண் துறையினர் தகவல்

தேனி : கோடை காலங்களில் நில மேலாண்மை செய்வது குறித்து வேளாண் துறையினர் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளனர்.இது குறித்து வேளாண் அதிகாரிகள் கூறியதாவது: உங்கள் வயல்களில் அறுவடை முடிந்தவுடன் மானாவாரி நிலங்களில் வரப்பு ஓரங்களில் பள்ளக்கால் பகுதியில் குறிப்பாக கரிசல் மண் பகுதியில் ஆங்காங்கு இருக்கும் மஞ்சணத்தி செடிகள், குரண்டி முள், காக்காமுள் ஆகியவற்றை முழுமையாக அழிக்க வேண்டும்.

கோடைகாலத்தில் இவற்றை அழிக்க சிறிதளவு பட்டையை நீக்கிவிட்டு 2, 4 டீ மருந்தை பசை போல் தயாரித்து தண்டு பகுதியில் தடவினால் அவை காய்ந்து போகும். இவ்வாறாக களைச் செடிகளை அழித்து கோடை உழவில் ஆழச்சால் அகலப்பாத்தி அமைத்து மண்ணின் ஈரப்பதத்தை தக்க வைக்க வேண்டும்.

* குளக்கரம்பை வண்டல் மண் நிலத்தில் இடுதல்: மண் வளத்தை மேம்படுத்த மண்ணின் வளம், கரிம சத்துக்களையும், ஈரப்பதத்தையும் தக்க வைக்க நிலத்திற்கு குளக்கரம்பை வண்டல் மண் அடிக்கலாம். வருவாய்துறை அனுமதி பெற்று குளக்கரம்பை வண்டல் மண்ணை எடுத்து இலவசமாக நிலத்திற்கு இடலாம்.

இரண்டு ஆண்டிற்கு ஒருமுறை நன்செய் நிலத்திற்கு ஏக்கருக்கு 25 டிராக்டர் லோடு என்ற கணக்கில் மண்ணும் புஞ்சை நிலத்திற்கு 30 டிராக்டர் லோடு மண்ணும் இட வேண்டும். இதனை இலவசமாக அருகேயுள்ள, குளங்கள் மற்றும் கண்மாயில் எடுத்துக்கொள்ள விவசாயிகளுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. மண் அள்ளி தூர் வாருவதினால் குளங்களில் நீர் தேக்கும் அளவு அதிகமாகும்.

* ஆடு, மாடு கிடை அமர்த்துதல்: கோடை உழவுக்குப்பின் நிலத்தில் ஆடுகள் மற்றும் மாட்டுக்கிடை அமர்த்துதல் மண்வளம் மற்றும் மண்ணின் அங்கக தன்மையை மேம்படுத்த பெரிதும் உதவும். அத்துடன் மண்ணை வளப்படுத்த கோடை உழவு மிகவும் முக்கியம்.

இதன்படி உங்கள் நிலங்களில் 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை சட்டிக்கலப்பை கொண்டு கோடை உழவு பணிகளை மேற்கொள்ள வேண்டும். கடினமான நிலங்களில் உளிக் கலப்பை பயன்படுத்த வேண்டும்.

* பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி: போதிய நீர் ஆதாரம் இருக்கும் இடங்களில் தக்கைப்பூண்டு, சணப்பு, கொளிஞ்சி போன்ற பசுந்தாள் உரப்பயிர்களைப் பயிர் செய்ய வேண்டும். இவை பூக்கும் தருணத்தில் மடக்கி உழவு செய்து விவசாயிகள் தங்கள் நிலங்களில் மண் வளத்தை மேம்படுத்தலாம்.

எனவே அடுத்த சாகுபடிக்கு இப்போதே திட்டமிட்டு நிலத்தை தயார்படுத்தினால் கண்டிப்பாக எதிர்பார்க்கும் மகசூல் விவசாயிகளுக்கு கிடைக்கும். இவ்வாறு கூறினர்.

Tags : manavari ,
× RELATED இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த...