×

தேர்வு நேரத்தில் ரயில்களை நிறுத்தி மாணவர் வாழ்க்கையில் விளையாடுவதா? கூட்டம்… நெரிசல்… ஆபத்தான பயணம்… பயணிகள் கடும் ஆத்திரம்: தெற்கு ரயில்வேயின் அலட்சியத்தால் ஸ்தம்பித்த சென்னை

சென்னை: தெற்கு ரயில்வேயின் அலட்சியத்தால் சென்னை ஸ்தம்பித்துள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையச் சீரமைப்புப் பணிகளைக் காரணம் காட்டி, முன்னறிவிப்பு இன்றி டஜன் கணக்கில் புறநகர் ரயில்களை ரத்து செய்து, லட்சக்கணக்கான பயணிகளை நடுத்தெருவில் நிறுத்தியுள்ளது தெற்கு ரயில்வே நிர்வாகம். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குத் தேர்வுகள் நடைபெறும் இந்த முக்கியமான நேரத்தில், ரயில்வே நிர்வாகம் செய்துள்ள இந்தத் திட்டமிடப்படாத காரியத்தால் சென்னை மற்றும் புறநகர் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியுள்ளது.

சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மற்றும் செங்கல்பட்டு – கடற்கரை மார்க்கத்தில் வழக்கமாக ஓடும் ரயில்களில் பாதியளவு ரயில்களை (சுமார் 80க்கும் மேல்) தெற்கு ரயில்வே அதிரடியாக ரத்து செய்தது. இதனால் ரயில் நிலையங்களில் ஈ எறும்பு கூட நுழைய முடியாத அளவுக்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. மணிக்கு ஒரு ரயில் மட்டுமே வந்ததால், அதில் ஏற முடியாமல் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் விழிபிதுங்கி நின்றனர். வேறு வழியின்றி உயிரைப் பணயம் வைத்து படிக்கட்டுகளில் தொங்கியபடியும், ஜன்னல் கம்பிகளைப் பிடித்தபடியும் மாணவர்கள் பயணித்த காட்சி காண்போரை பதைபதைக்க வைத்தது. இதுகுறித்து கிண்டியில் பணிபுரியும் பெண் பயணி ஒருவர் கூறுகையில், வழக்கமாக 10 நிமிடத்தில் கடக்க வேண்டிய தூரத்தைக் கடக்க இன்று முக்கால் மணி நேரம் ஆகிறது. கூட்ட நெரிசலில் ஃபுட்போர்டில் தொங்கிக்கொண்டு வருவது மரண பயத்தை காட்டுகிறது,” என்று கண்ணீர்மல்கத் தெரிவித்தார்.

மற்றொருவர் பேசுகையில், ”தினமும் 10 ரூபாயில் ரயிலில் சென்று வருகிறோம். இப்போது ரயில் இல்லாததால் 40 ரூபாய் கொடுத்து பேருந்தில் செல்ல வேண்டியுள்ளது. எங்களை நம்பித்தான் எங்கள் குடும்பமே ஓடுகிறது. ரயில்வே அதிகாரிகள் ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு ரயிலை ரத்து செய்கிறார்கள். எங்களைப் போன்ற ஏழைகளின் வலி அவர்களுக்கு எப்படித் தெரியும்?” என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார். பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் பலர், ரயில் தாமதத்தால் தேர்வுக் கூடத்திற்கு நேரத்திற்குச் செல்ல முடியாமல் தவித்தனர். இந்தச் சீரமைப்புப் பணியை விடுமுறை நாட்களில் செய்திருக்கக் கூடாதா?” என்று பெற்றோர்கள் ரயில்வே அதிகாரிகளை சரமாரியாக வறுத்தெடுத்தனர்.

பொதுமக்களின் கடுமையான எதிர்ப்பு மற்றும் ஊடகங்களில் வெளியான செய்திகளின் எதிரொலியாக, தற்போது பெயரளவிற்கு 26 குறுகிய தூர ரயில்களை இயக்குவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இது ‘யானை பசிக்கு சோளப்பொரி’ போடுவதைப் போன்ற கண்துடைப்பு நாடகம் என பயணிகள் விமர்சிக்கின்றனர். இதற்கிடையே, தெற்கு ரயில்வேயின் இந்த மெத்தனப் போக்கை தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கடுமையாகச் சாடியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மாணவர்களின் தேர்வுக் காலத்தைக் கருத்தில் கொள்ளாமல் ரயில்வே நிர்வாகம் அலட்சியமாகச் செயல்பட்டுள்ளது. ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பொதுமக்கள் அவதிப்படுவதை அறிந்து, முதல்வர் உத்தரவின் பேரில் மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன,” என்று தெரிவித்துள்ளார். மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் ரயில்வே துறை, மக்களின் கஷ்டத்தைப் புரிந்து கொள்ளாமல் தன்னிச்சையாகச் செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

Tags : Chennai ,Southern Railway ,Egmore ,
× RELATED இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த...