×

அரவக்குறிச்சி-ராஜபுரம் செல்லும் சாலையில் குண்டும் குழியுமான பள்ளத்தை சீரமைக்க வேண்டும்

*வாகன ஓட்டிகள் கோரிக்கை

அரவக்குறிச்சி : பராமரிப்பு செய்யப்பட்ட தார் சாலை சில மாதங்களிலேயே சேதம் உடனடி சீரமைப்பு செய்ய பொதுமக்கள் கோரிக்கைகரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ராஜபுரம் செல்லும் முக்கிய வழித்தடத்தில் பராமரிப்பு செய்யப்பட்ட புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலை, சில மாதங்களிலேயே குண்டும் குழியுமாக பள்ளம் ஏற்பட்டு கடுமையாக சேதமடைந்துள்ளது.

இதனால் அப்பகுதியில் பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.குறிப்பாக, சின்னதாராபுரம் பகுதிகளில் இருந்து நான்கு வழி சாலை பிரிந்து, கரூர், பொள்ளாச்சி, ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட நகரங்களை இணைக்கும் முக்கிய இணைப்புச் சாலையாக இந்தப் பாதை செயல்பட்டு வருகிறது.

நாள்தோறும் அரசு பேருந்துகள், தனியார் வாகனங்கள், கனரக லாரிகள் உள்ளிட்டவை அதிக அளவில் இயக்கப்படுவதால், இந்தச் சாலையின் பயன்பாடு மிகவும் அதிகமாக உள்ளது. ஆனால், சமீபத்தில் பராமரிப்பு செய்யப்பட்டதாக கூறப்படும் இந்த தார் சாலை, குறுகிய காலத்திலேயே தரம் குறைந்து, பல இடங்களில் பெரிய பள்ளங்கள் உருவாகியுள்ளன.

இரவு நேரங்களில் போதிய தெருவிளக்குகள் இல்லாத பகுதிகளில் இந்த பள்ளங்கள் தெளிவாக தெரியாமல், இருசக்கர மற்றும் நான்குசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விபத்துகளில் சிக்குவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக மழை நேரங்களில் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி, பாதையின் நிலை மேலும் மோசமடைகிறது.இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், “புதிதாக போடப்பட்ட சாலை என்ற நம்பிக்கையில் வாகனங்களை இயக்குகிறோம். ஆனால் சில மாதங்களிலேயே இவ்வளவு பெரிய சேதம் ஏற்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

போக்குவரத்து மிகுந்த இந்த முக்கிய வழித்தடத்தில் இதுபோன்ற நிலை தொடர்ந்தால், பெரிய விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது” என கவலை தெரிவித்தனர்.எனவே, அரவக்குறிச்சி- ராஜபுரம் செல்லும் சாலையில் சேதமடைந்த பகுதிகளை தரமான முறையில் சீரமைத்து, மீண்டும் இத்தகைய பாதிப்பு ஏற்படாத வகையில் உறுதியான தார்சாலையை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Aravakurichi-Rajapuram ,Aravakurichi ,Rajapuram ,Karur district ,
× RELATED தரமான சாகுபடி செய்வதன் மூலம் தேயிலை கொள்முதல் விலையை உயர்த்த நடவடிக்கை