×

ஓசூர் அருகே கண்காணிப்பு பணியின் போது யானை தாக்கி வேட்டை தடுப்பு காவலர் படுகாயம்

*100 மீட்டர் தூரம் விரட்டிச் சென்றதால் பரபரப்பு

ஓசூர் : ஓசூர் அருகே, கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போது, ஒற்றை யானை விரட்டிச் சென்று தாக்கியதில் வேட்டை தடுப்பு காவலர் படுகாயம் அடைந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள தீர்த்தம் பகுதியில், கடந்த ஒரு மாதமாக 2 யானைகள் சுற்றித்திரிந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்தன. இந்த யானைகளை, அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதை தொடர்ந்து, ஓசூர் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் தீர்த்தம் பகுதியில் கடந்த சில தினங்களாக முகாமிட்டு, யானைகளை கண்காணித்து விரட்டும் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று, 3 வேட்டை தடுப்பு காவலர்களும், ஒரு வனவரும் யானைகளை கண்காணிக்க டூவீலர்களில் சென்றுள்ளனர். அப்போது, அங்கு நின்றிருந்த 2 யானைகளில் ஒரு யானை, ஆக்ரோஷத்துடன் அவர்களை துரத்தியுள்ளது.

இதில் வனவரும், ஒரு வேட்டை தடுப்பு காவலரும் ஓடி விட, மற்ற இரண்டு வேட்டை தடுப்பு காவலர்களை அந்த யானை 100 மீட்டர் தூரம் விரட்டி சென்றுள்ளது. அப்போது, அந்த யானையிடம் வேட்டை தடுப்பு காவலர் ஜெயபிரகாஷ்(29) என்பவரை, யானை தூக்கி போட்டு மிதித்தது.

இதனை கண்டு அருகில் இருந்த வேட்டை தடுப்பு காவலர்கள் கூச்சலிட்டு கத்தியதால், அந்த யானை அங்கிருந்து சென்று விட்டது. யானை தாக்கியதில் தோள் மற்றும் முதுகில் படுகாயமடைந்த ஜெயபிரகாசை மீட்டு, சூளகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆகாய தாமரைக்குள் ஒளிந்திருக்கும் யானை

ஓசூர் வனக்கோட்டம் பேரண்டப்பள்ளி பகுதியில் சுற்றித்திரிந்த ஒற்றை யானை, நேற்று இரவு உணவு தேடி வெளியே வந்துள்ளது. காமன்தொட்டி உள்ளிட்ட பகுதிகளில் வலம் வந்த யானை, அட்டக்குறுக்கி பகுதியில் உள்ள ஏரியில் தஞ்சமடைந்துள்ளது.

அந்த ஏரி முழுவதும் படர்ந்துள்ள ஆகாய தாமரைகளுக்கு இடையில், யானை ஒளிந்து கொண்டது. இது குறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அந்த யானையினை காண திரண்டு வந்தனர் வனத்துறையினர் பொதுமக்களை எச்சரித்து, அங்கிருந்து அனுப்பினர். மேலும், யானையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Tags : Hosur ,Theertham ,Hosur, Krishnagiri district… ,
× RELATED திராவிட மாடல் ஆட்சியில் ஆதிதிராவிட –...