ஊட்டி : நீலகிரியில் சாலையோரங்களில் பூத்துள்ள கோத்தகிரி மிலார் செடிகளில் பூத்துள்ள மஞ்சள் நிற மலர்கள் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்கள் இங்குள்ள சுற்றுலா தலங்கள் மட்டுமின்றி, இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளை காண செல்வது வழக்கம்.
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா,ரோஜா பூங்கா, குன்னூரில் உள்ள சீம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா போன்ற பூங்காக்களில் உள்ள பல்வேறு வகையான மலர்கள் வசீகரம் செய்வது போல், நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் பூக்கும் காட்டு மலர்களும் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.
குறிப்பாக ஊட்டியில் பூக்கும் காட்டு சூரியகாந்தி,டேலியா,சேவல் கொண்டை,எவர்லாஸ்ட்,சீகை மர பூக்கள்,கோத்தகிரி மிலார் செடிகளில் பூக்கும் மஞ்சள் நிற மலர்கள் அனைத்தும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.இந்த மலர்கள் ஒரே சமயத்தில் பூக்காது.
வேறுபட்ட காலத்தில், காலநிலைக் கேற்ப பூக்கும். தற்போது நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் மஞ்சள் நிறத்தில் கோத்தகிரி மிலார் செடிகளில் மலர்கள் பூத்துள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள வனங்கள் மற்றும் சாலை ஓரங்களில் இந்த மலர்கள் பூத்து குலுங்குகிறது. இதனை சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கண்டு ரசித்து செல்வதுடன், அதன் நடுவே நின்று புகைப்படமும் எடுத்துச் செல்கின்றனர்.
குறிப்பாக, தொட்டபெட்டா செல்லும் சாலையோரங்களில் இந்த மலர்கள் அதிகம் காணப்படுவதால், இதனை இங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.
