மாட்ரிட்: லா லிகா ஆடவர் கால்பந்து போட்டியில் நேற்று, வாலென்சியா அணியை, வில்லா ரியல் அணி, 2-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் லா லிகா கால்பந்து போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று முன்தினம் நடந்த போட்டியில் பலம் வாய்ந்த பார்சிலோனா அணி, லெவன்டே அணியை, 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி வாகை சூடியது. இந்நிலையில், நேற்று நடந்த போட்டியில் வில்லா ரியல் – வாலென்சியா அணிகள் மோதின. போட்டியின் துவக்கம் முதல் வில்லா ரியல் அணி வீரர்கள் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தி கோல் போடுவதில் முனைப்பு காட்டினர்.
அவர்களுக்கு ஈடுகொடுத்து ஆடிய வாலென்சியா அணியின் லார்கி ரமஸானி, போட்டியின் 27வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி அட்டகாசமாக முதல் கோல் போட்டார். அடுத்த 4வது நிமிடத்தில் வில்லா ரியல் வீரர் சன்டி கோம்ஸானா சிறப்பாக பந்தை கடத்திச் சென்று கோலாக்கினார். முதல் பாதி ஆட்டம் முடியும் தருணத்தில் 45+6வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை வில்லா ரியல் வீரர் பேபே கெயே சிறப்பாக அடித்து கோல் போட்டார். அதன் பின் இரு அணி வீரர்களாலும் கோல் போட முடியவில்லை. அதனால், 2-1 என்ற கோல் கணக்கில் வில்லா ரியல் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.
