×

முதல் மகளிர் ஓடிஐயில் இன்று சீண்டும் ஆஸ்திரேலியாவை மீண்டும் வெல்லுமா இந்தியா? பிரிஸ்பேனில் மல்லுக்கட்டு

 

பிரிஸ்பேன்: இந்தியா – ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி, பிரிஸ்பேன் நகரில் இன்று நடைபெறுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள ஹர்மன்பிரித் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி, 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. அதன் தொடர்ச்சியாக, 3 ஒரு நாள் போட்டிகள் தொடரில் இந்தியா-ஆஸி மகளிர் அணிகள் மோதவுள்ளன. இந்த அணிகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி இன்று, பிரிஸ்பேன் நகரில் நடைபெறுகிறது. இதற்கு முன், கடந்தாண்டு நவிமும்பையில் நடந்த ஒரு நாள் போட்டியில் ஆஸி மகளிர் அணியை இந்திய மகளிர் அணி வெற்றி வாகை சூடியது. அதற்கு பழிவாங்கும் வகையில் இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் ஆஸி வியூகம் வகுக்கும். இந்த போட்டியில் ஆஸி நட்சத்திர வீராங்கனை ஆலிஸா ஹீலி கேப்டனாக களமிறங்குகிறார்.

வரும் மார்ச் 6ம் தேதி, பெர்த் நகரில் இந்திய அணியுடன் நடக்கும் டெஸ்ட் போட்டியுடன் தனது கிரிக்கெட் பயணத்தை நிறைவு செய்வதாக அவர் அறிவித்துள்ளார். ஆஸி அணியில் டி20 போட்டிகளில் பங்கேற்காத மற்றொரு முன்னணி வீராங்கனை அலானா கிங், இன்று துவங்கும் ஒரு நாள் தொடரிலும், டெஸ்ட் போட்டியிலும் களம் காண உள்ளார். இந்திய அணியில் அருந்ததி ரெட்டி, பார்தி ஃபுல்மாலி, ஷ்ரேயங்கா பாட்டீல் ஆகியோருக்கு மாற்றாக, காஷ்வீ கவுதம், ஹர்லீன் தியோல், பிரதிகா ராவல் களமிறங்க உள்ளனர். இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, இன்றைய போட்டியிலும் துவக்க வீராங்கனையாக அதிரடி காட்ட உள்ளார். உலகக்கோப்பை ஒரு நாள் போட்டியில் ஆஸிக்கு எதிராக 127 ரன்கள் குவித்த ஜெமிமா ரோட்ரிகஸ் இன்றும் கலக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய பந்து வீச்சில் ரேணுகா தாக்குர், சரணி, தீப்தி சர்மா ஆகியோர் முக்கிய பங்காற்றுவர். போட்டி துவங்கும் நேரம்: இந்திய நேரப்படி காலை 9.20 மணி

 

Tags : India ,Australia ,Brisbane ,women's ,team ,Harmanpreet Kaur ,
× RELATED தென்ஆப்பிரிக்காவிடம் இந்தியா...