சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்தது தொகுதி பங்கீட்டை தொடங்கியது திமுக: மதிமுக, மமக, கமல் கட்சியுடன் இன்று சந்திப்பு

 

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நேற்று தொடங்கியது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி பிரதிநிதிகளுடன் திமுக குழு தொகுதி பங்கீடு குறித்து முதல்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியது. இன்று மதிமுக, மநீம, மமகவை பேச்சுவார்த்தைக்கு வருமாறு திமுக அழைப்பு விடுத்துள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலை சந்திக்கும் வகையில் ஆளுங்கட்சியான திமுக மெகா கூட்டணியை அமைத்துள்ளது. அதாவது திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், தேமுதிக, மக்கள் நீதி மய்யம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தவாக, கொமதேக, தமிழக விடுதலை கட்சி, கொங்கு இளைஞர் பேரவை, முக்குலத்தோர் புலிப்படை, மனிதநேய ஜனநாயக கட்சி இடம் பெற்றுள்ளது. இன்னும் சில கட்சிகள் இணைய உள்ளது. இந்நிலையில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு எத்தனை இடங்களை ஒதுக்குவது என்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் திருச்சி சிவா, ஆ.ராசா, உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகிய 7 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு முதலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கைதான் அழைப்பது வழக்கமாகும்.

அதன் அடிப்படையில் திமுக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் திமுக குழுவினருடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், பொதுச் செயலாளர் முகம்மது அபூபக்கர், பொருளாளர் ஷாஜகான், முதன்மை பொதுச்செயலாளர் அப்துல் ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தை ஒரு மணி நேரம் நடந்தது. பேச்சுவார்த்தையின் போது ஐயுஎம்எல் பாளையங்கோட்டை, ஆம்பூர், பாபநாசம் ஆகிய 3 தொகுதிகளை விரும்பி கேட்டதாக கூறப்படுகிறது. பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன் அளித்த பேட்டியில், ‘‘இது முதல் கட்ட பேச்சுவார்த்தைதான். இது சுமுகமாக நடந்தது’’ என்றார்.

தொடர்ந்து இன்று மதிமுக, மக்கள் நீதி மய்யம், மனிதநேய மக்கள் கட்சிகளுடன் முதல்கட்ட தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடக்கிறது. மதிமுக, மமக 2019ம் ஆண்டு முதல் திமுக கூட்டணியில் தொடர்ந்து வருகிறது. இதே போல கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலிலிருந்து மநீம நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து வருகிற 26ம் தேதி மார்க்சிஸ்ட் கட்சியிடனும் பேச்சுவார்த்தை நடக்கிறது. இதற்காக மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கனகராஜ், சாமுவேல் ராஜ், எஸ்.கண்ணன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட்டுடன் 27ம் தேதி திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துகிறது. இப்படி கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து விரைவில் தொகுதி பங்கீட்டை முடிக்க திமுக திட்டமிட்டுள்ளது. தொடர்ந்து திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளான மார்ச் 1ம் தேதி திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் தொகுதிகள் பட்டியலையும் வெளியிட திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Related Stories: