×

சம்சாரக் காட்டை ஞானக் காடாக மாற்றும் நாமம்!

114. பவாரண்ய குடாரிகா

நாம் இதற்கு முன்பு பவாநீ, பாவநா கம்யா என்று இரண்டு நாமங்களை பார்த்தோம். அதற்கு அடுத்து வரக்கூடியதுதான் இந்த நாமம். பவாநீ என்று சொல்லும் போதே அதில் பவ என்கிற சொல் சிவபெருமானை குறிக்கும். பவ என்றால் இந்த சம்சாரத்தையும் குறிக்கும். இந்த இரண்டையும் எப்படி இணைக்கிறாள் என்று பார்த்தோம். பாவநா கம்யா என்று பார்க்கும்போது, அவளுடைய பாவனைதான் இந்த மொத்தப் பிரபஞ்சமுமே என்று பார்த்தோம். நாம் அவளை பாவனையினால் அடையலாம் என்று பார்த்தோம். இந்த நாமாவிலும் பவ என்கிற அந்த சப்தம் வருகிறது. பவ – ஆரண்ய – குடாரிகா என்று வருகிறது. இந்த நாமாவிலும் அந்த சப்தம் வருகின்றது. இந்த நாமத்திலுள்ள பவ என்கிற சப்தத்திற்கும் நாம் சம்சாரம் அல்லது பிரபஞ்சம் என்கிற அர்த்தத்தைத்தான் எடுத்துக் கொள்கிறோம். பவ ஆரண்ய என்றால் சம்சாரமாகிய காடு. எப்படி சம்சாரத்தை ஒரு கடலாக குறிப்பிடுகிறோமோ அதுபோல, இந்தப் பிரபஞ்சத்தை ஒரு காடாக வசின்யாதி வாக் தேவதைகள் குறிப்பிடுகிறார்கள். பவ ஆரண்யம் என்று சொல்கிறார்கள்.

ஏன் இப்படி சம்சார சாகரம் என்று சொல்கிறோம்? ஏன் காடு என்று சொல்கிறோம்?

ஒரு கடல் இருக்கிறது. ஒருவனுக்கு நீச்சல் தெரியவில்லை. அவன் அதற்குள் போய்விட்டான். இப்படி ஆழமான கடலுக்குள் சென்று விட்டால் அதிலிருந்து வருவதற்கு கஷ்டப்படுவானோ, அதுபோன்று வழி தெரியாதவன் ஒரு காட்டுக்குள் போய்விட்டால் வெளியே வருவதற்கு எப்படி கஷ்டப்படுவானோ…. அதுபோன்றுதான் இந்த ஜீவாத்மாக்கள் இந்த சம்சாரத்திற்குள் மாட்டிக் கொண்டிருக்கின்றன. அதனால்தான், சம்சாரத்தை பவ சாகரம் அல்லது பவாரண்யம் என்றெல்லாம் சொல்கிறோம். இப்போது வசின்யாதி வாக்தேவதைகள் இந்த நாமத்தில் என்ன சொல்ல வருகிறார்கள். சம்சாரத்தை காடாகச் சொல்லி விட்டார்கள். அம்பாளைப்பற்றி இந்த நாமாவில் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்க வேண்டும்.

பவ – ஆரண்ய – குடாரிகா. சம்சாரமாகிய காட்டுக்கு கோடாரியைப் போன்றவளாக இருக்கிறாள். குடாரிகா என்றால் கோடாரி என்று பொருள். குடாரி – சமஸ்கிருதம். கோடாரி – தமிழ். அவ்வளவே. ஒரு கோடாரி எப்படி காட்டை
வெட்டுமோ, அதுபோல தன்னை அடைந்த ஜீவாத்மாக்களின் சம்சாரக் காட்டை, வெட்டி, திருத்தி காப்பாற்றக் கூடியவளாக இருக்கிறாள். அதனாலேயே பவாரண்யா குடாரிகா என்கிற நாமத்தால் வர்ணிக்கின்றனர். இப்போது இது இந்த நாமத்தினுடைய வெளிப்படையான அர்த்தம். இப்போது இதனுடைய உள்ளுக்குள் இருக்கும் அர்த்தத்தையும் பார்ப்போமா!

இந்த ஜீவாத்மாவானது காடு என்கிற ஆரண்யத்தில் வந்து சிக்கிக் கொண்டு விட்டது. இதில் ஒரு விஷயத்தை நுட்பமாக பார்க்க வேண்டும். இந்தக் கோடாரி இருக்கிறதல்லவா? இந்தக் கோடாரியானது காட்டை வெட்ட வேண்டும். ஒரு மரம் வெட்டுபவன் அந்தக் கோடாரியை எடுத்துக் கொண்டு போய் காட்டை வெட்டுகிறான். இப்போது அவன் கையில் இருக்கின்ற கோடாரி எதில் செய்யப்பட்டிருக்கும் என்றால் அதுவும் ஒரு மரத்தில்தான் செய்திருப்பார்கள். அந்த மரம் என்பது அந்தக் காட்டிலிருந்து எடுக்கப்பட்ட மரமாகத்தான் இருக்கும். அந்தக் காட்டிலிருந்தே மரத்தை எடுத்து அதில் கோடாரியை செய்து அந்தக் காட்டையே வெட்டுகிற மாதிரி… அம்பாள் இந்த சம்சாரத்திற்குள் அந்தர்யாமியாக இந்தப் பிரபஞ்சத்திற்குள் இருக்கிறாள். இப்போது அந்தர்யாமியாக இருக்கக் கூடியவளை கோடாரி போன்று பிடித்துக் கொண்டால், அதை வைத்துக் கொண்டே இந்த சம்சாரத்தை வெட்டி சாய்த்துக் கொண்டே போய்விடலாம். அம்பாள் எங்கேயோ இருக்கிறாள் என்று நினைக்க வேண்டியதில்லை.

நம்மை எந்த சம்சாரமானது பந்தப் படுத்துகிறது, ஒரு தளைக்கு உட்படுத்துகிறது என்றெல்லாம் குறை சொல்கிறோமோ… அந்த குறை சொல்லக் கூடிய சம்சாரத்திற்குள்ளேயும் அவள்தான் இருக்கிறாள். அப்படி இருக்கக் கூடிய அவளை பிடித்துக் கொண்டால், நாம் எளிதாக கரையேறி விடலாம். எப்படி ஒரு மரவெட்டி காட்டுக்குள் இருந்து மரத்தை எடுத்து, காட்டை எப்படி வெட்டுகிறானோ அதுபோல இதற்குள்ளேயிருக்கும் அம்பாளை இறுக்கமாக பிடித்துக் கொண்டால், அவள் குடாரிகா என்கிற கோடாரியாக மாறி இந்தக் காட்டை வெட்டி திருத்தி நம்மை மீட்பாள் என்பதே இதன் தேறிய பொருளாகும்.

இப்படி வெட்டி, திருத்தப்பட்ட இந்த ஜீவனை அம்பாள் என்ன செய்கிறாள்?

அப்படி வெட்டப்பட்ட திருத்தப்பட்ட இந்த ஆரண்யம் எப்படி மாறுகிறது என்பதுதான் இதற்கு அடுத்தான முக்கியமான கேள்வி. இதற்கு முன்னால், கணக்கு வழக்கு இல்லாத அளவுக்கு வளர்ந்திருந்த காடாக இருந்தது. திமுதிமு என்று வளர்ந்திருந்தது. நாம் உள்ளே சென்றால் வெளியே வருவதற்கான எந்த சாத்தியமும் இல்லாத, சிக்கிக் கொள்ளும் அளவிற்கு இருந்தது. இப்போது அந்தக் காட்டை அம்பாள் என்கிற குடாரிகா திருத்தினால் என்ன ஆகும்? உபநிஷதங்களில் சொல்லப்படுகின்ற ஆரண்யமாக ஞான ஆரண்யமாக மாறி விடுகின்றது. பவாரண்யம் என்கிற காடானது, அம்பாள் என்கிற குடாரிகாவால் திருத்தப்பட்டவுடன் ஞானக் காடாக மாறிவிடுகின்றது. வேதம் என்ன சொல்கிறது. ஞானத்தின் பிறப்பிடம் காடு என்று சொல்கிறது. ஆரண்யங்களில்தான் உபநிஷதங்கள் பிறக்கிறது. எந்தக் காடானது சம்சாரக் காடாக இருந்ததோ, அதுவே இப்போது உபநிஷதங்களாக ஞானத்தை தரக் கூடிய ஆரண்யங்களாக மாறியிருக்கிறது. ஞானாரண்யமாக மாறி விடுகிறது. அம்பாள் இந்த transformation ஐ அளிக்கிறாள்.

இன்னும் எளிமையாக புரிந்து கொள்ள வேண்டுமெனில், அவள் கோடாரியாக வந்தால் இந்த பவமே ஞானமாக மாறி விடுகிறது. உண்மையான சொரூபத்தை காண்பித்தவுடனேயே இந்த பவாரண்யம் ஞானாரண்யமாக மாறிவிடுகிறது என்று பார்த்தோம். இந்த ஜீவாத்மாக்களுக்கு இதைச் செய்யக் கூடியவர் குருவாக இருக்கிறார். அந்தக் குருவானவர் நம்முடைய வித்யா சம்பிரதாயப்படி அம்பாளே குருவாக வருகிறாள் என்று சொல்லப்படுகிறது. இப்படி அம்பாளை காண்பித்துக் கொடுக்கக்கூடிய, ஞானத்தை காண்பித்து கொடுக்கக்கூடிய குருவானவரை சிவ சொரூபமாக சொல்வது வழக்கம். இப்படி சிவ சொரூபமான குரு வருகிறார் அல்லவா? இப்போது சிவபெருமானின் உருவத்தை ஒரு கணம் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

சிவ பெருமானின் உருவத்தை நினைத்துப் பார்த்தால், ஒரு கையில் பரசு என்று சொல்லக் கூடிய கோடாரியை வைத்துக் கொண்டிருப்பார். இதை தமிழில் மழு என்று சொல்வோம். இப்போது இந்தக் கோடாரியாக இருக்கக்கூடியது யாரெனில், சாட்சாத் அம்பாள். அவளே இங்கு பரசுவாக கோடாரியாக இருக்கிறாள். பரசு… கோடாரி… குடாரிகாவாக இருக்கிறாள். அந்த குடாரிகாவை கொண்டு இந்த ஆரண்யத்தை திருத்தக்கூடிய குருநாதர் வருகிறார். அவரே குருவாக சிவபெருமானாக இருந்து கொண்டு அதைச் செய்கிறார்.

மீண்டும் பார்ப்போம்!

சிவ சொரூபமான குருநாதர் வருகிறார். அவர் அம்பாள் என்று சொல்லக்கூடிய சித் சொரூபத்தை கோடாரியை கையில் வைத்திருக்கிறார். அதன் மூலமாக நம் பவாரண்யத்தை திருத்துகிறார். அப்படி திருத்தப்பட்டவுடனே அது ஞானாரண்யமாக பிரகாசிக்கின்றது. அங்கு ஜீவாத்மா தன்னுடைய சொரூபத்தை உணர்கின்றான். இன்னொரு விஷயத்தை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். அந்த ஆயுதத்தை எங்கேயாவது அவர் உபயோகப்படுத்தியிருக்கிறாரா என்று பார்த்தால், இல்லவே இல்லை. ஏனெனில், அந்தப் பரசுவாக இருப்பவளே அம்பாள்தான். அவர் அதை உபயோகப்படுத்தவில்லை என்று நினைக்கிறோம். ஆனால், ஒவ்வொரு நிமிஷமும் உபயோகப்படுத்திக் கொண்டு தான் இருக்கிறார். அஞ்ஞானத்தை வெட்டி வெட்டி ஞானத்தை பிரகாசிக்கச் செய்வதற்கு கோடாரியாக அம்பாளே இருந்து செயல்படுகின்றாள்.

ஏனெனில், சுவாமியை சிவபெருமான் என்று சொன்னால், அது ஞான சொரூபம். அவர் வைத்திருக்கக்கூடிய ஆயுதங்கள் என்று எல்லாமே, சக்தியை தவிர அம்பாளை தவிர வேறெதுவுமே இல்லை. அவர் கையில் வைத்திருக்கக் கூடிய ஆயுதங்கள். வஸ்திரங்கள், ஆபரணங்கள் எல்லாமே, உருவம் போன்ற எல்லாமே அம்பாள்தான். இன்னும் சொன்னால், சிவம் என்றால் அதற்கு ஒரு உருவமோ அல்லது வடிவமோ எதுவுமே கிடையாது. எப்போது சிவத்திற்கு உருவமும் வடிவமும் வருகின்றதோ அப்போது அது சக்தியாகிறது. அது அம்பாள் ஆகிவிடுகின்றது. இங்கு குருநாதர் என்ன காண்பித்துக் கொடுக்கிறார் எனில், எங்கேயோ இருக்கக்கூடிய அம்பாளை காண்பித்துக் கொடுக்கவில்லை. நமக்குள்ளேயே, சம்சாரத்திற்குள்ளேயே, அந்தர்யாமியாக இருக்கக்கூடிய அம்பாளையே காண்பித்துக் கொடுக்கிறார். அதைப் பிடித்துக் கொண்டு நம்மை கரை சேர்க்கிறார். இதற்கான கோயிலை பார்க்கும் முன்பு, இந்த ஆரண்யம் பற்றி ஒரு விஷயத்தை பார்க்க வேண்டும்.

இந்த பவாரண்யம், ஞானாரண்யமாக மாறுகின்றது என்று பார்த்தோம். நம்முடைய கோயில்களில் நிறைய இடங்களில் ஆரண்யங்கள் என்றுதான் பெயர். வேணு வனம், வில்வ வனம் என்றெல்லாம் இன்னும் நிறைய சொல்லலாம். இப்படி ஞானம் தரக்கூடியது எது? ஞானத்திற்கு சமானமான வார்த்தையைச் சொல்ல வேண்டுமெனில் வேதத்தைச் சொல்லலாம். வேதம் என்றால் அறிந்து கொள்வது. ஆரண்யத்தை வேதமாக மாற்றுவதால் இந்த நாமத்திற்கு நாம் வேதாரண்யம் கோயிலையே சொல்லலாம்.

எப்படி வேதமானது, ஆரண்யங்களில் இருந்துதான் உபநிஷதங்கள் உண்டாயிற்று என்று சொன்னதோ, அந்த வேதங்களே வந்து வழிபட்ட ஆரண்யம்தான் வேதாரண்யம். இத்தலத்தில் அருளும் சிவபெருமானின் பெயர் வேதாரண்யேஸ்வரர். மறைக்காடர் என்று தமிழில் பெயர். அம்பிகையின் திருநாமம் யாழைப் பழித்த மொழியம்மை என்பதாகும். நால்வரால் பாடல் பெற்ற தலமும் ஆகும். இந்த தலத்திலுள்ள அம்பிகையையும், ஈசனையும் வழிபட நம்முடைய அஞ்ஞான காட்டை அழித்து அதை ஞானாரண்யமாக மாற்றுவார்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
(சுழலும்…)

Tags : Pavaranya Kutarika ,Bhavani ,Bhavana Kamya ,Lord Shiva ,Bhava ,
× RELATED மலர்களின் நாமங்களில் மாதொருபாகன்