×

குரூப் 2 தேர்வு சென்னையில் 3 கல்லூரிகளில் நடந்தது

 

சென்னை: டிஎன்பிஎஸ்சி அறிவித்தவாறு வழக்கம் போல் குரூப் 2 தேர்வு நேற்று நடந்தது. சென்னையில் 3 கல்லூரிகளில் இந்த தேர்வு நடந்தது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி)குரூப்-2, 2ஏ பதவிகளில் காலியாக உள்ள 645 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜூலை 15ம் தேதி வெளியிட்டது. குரூப் 2 பணியில் 50 இடங்கள், குரூப் 2ஏ பதவியில் 595 இடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இப்பதவிக்கான முதல்நிலை தேர்வு கடந்த செப்டம்பர் 28ம் தேதி நடந்தது. இத்தேர்வை 4 லட்சத்து 18 ஆயிரத்து 791 பேர் எழுதினர். தொடர்ந்து கடந்த டிசம்பர் குரூப் 2, குரூப் 2ஏ முதல்நிலை தேர்வுக்கான ரிசல்ட் வெளியிடப்பட்டது. இதில் குரூப்-2 பதவிகளில் 1,126 பேரும், குரூப்-2 ஏ பதவிகளில் 9,457 பேரும் மெயின் தேர்வு எழுத தகுதி பெற்றவர்களாக டிஎன்பிஎஸ்சி அறிவித்து இருந்தது. இதற்கிடையில் குரூப் 2, குரூப் 2 பதவிக்களுக்கான காலி பணியிடங்களுக்கான எண்ணிக்கையை 828 ஆக டிஎன்பிஎஸ்சி உயர்த்தியது. தொடர்ந்து இவர்களுக்கான முதன்மைத் தேர்வு கடந்த 8ம்தேதி தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை குரூப்-2ஏ பதவிகளுக்கான பாடத்தேர்வும், பிற்பகலில் குரூப்-2, 2ஏ பதவிகளுக்கு தமிழ்த்தகுதித் தாள் தேர்வும் நடைபெறுவதாக இருந்தது. காலையில் நடைபெற இருந்த தேர்வை 9233 பேரும், பிற்பகலில் நடைபெற இருந்த தேர்வை 9244 பேரும் எழுத இருந்தனர்.

தேர்வு நடைபெறவிருந்த நிலையில் தேர்வர்களுக்கான அறை ஒதுக்குவதில் ஏற்பட்ட பிரச்னை என்று பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டது. இதனையடுத்து அன்றைய தினம் நடைபெற இருந்த தேர்வு முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. ரத்து செய்யப்பட்ட தேர்வு அடுத்த மாதம் (மார்ச்) 15ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இந்த நிலையில் பிப்ரவரி 22ம் தேதி குரூப் 2 பொது அறிவு தேர்வு வழக்கம் போல நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. டிஎன்பிஎஸ்சி அறிவித்தப்படி குரூப்-2 பதவிகளுக்கான விரிந்துரைக்கும் வகையிலான பாடத் தேர்வு நேற்று நடைபெற்றது. சமீபத்தில் ஏற்பட்ட ஹால்டிக்கெட் குளறுபடி இந்த முறையும் வராதபடி, தீவிரமாக கவனித்து அதற்கேற்றாற்போல், தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது.
இத்தேர்வு எழுத 1082 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். சென்னையில் மட்டும் 364 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

சென்னையை பொறுத்தவரை திருவல்லிக்கேணி மாநில கல்லூரி, நந்தனம் அரசு கலைக்கல்லூரி, அரும்பாக்கம் டி.ஜி.வைஸ்ணவா கல்லூரிகளில் தேர்வு மையம் அமைக்கப்பட்டது. இந்த மையங்களில் மொத்தம் 4 தேர்வு கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தது. டிஎன்பிஎஸ்சி அறிவித்தப்படி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை குரூப்-2 தேர்வு நடந்தது. இத்தேர்வை எழுதுபவதற்காக தேர்வர்கள் ஆர்வமுடன் காலை 7 மணி முதலே தேர்வு கூடங்களுக்கு வர தொடங்கினர். தொடர்ந்து காலை 9.30 மணிக்கு தேர்வு தொடங்கியது. தேர்வு நடைபெற்ற அனைத்து மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்வு நடைபெற்ற மையங்களில் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

 

Tags : Chennai ,TNPSC ,Tamil Nadu Public Service Commission ,
× RELATED பாஜ சிறுபான்மை அணி மாநில மாநாட்டை புறக்கணித்த தொண்டர்கள்