தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் கொங்கு மண்டலத்தில் வெற்றியை தக்க வைத்துக்கொள்ள அதிமுகவும், மண்டலம் முழுவதையும் கைப்பற்றுவதற்கு திமுகவும் வியூகம் வகுத்து வருகின்றன. தேர்தலுக்கு இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில் தற்போதைய கள நிலவரம் படு சூடாக மாறியுள்ளது.
கொங்கு மண்டலத்தில் 68 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், திண்டுக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மண்டலத்தை பொறுத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணி தனது வலுவான கோட்டையாக மாற்றி வைத்திருக்கிறது. உதாரணமாக, கடந்த 2021 சட்டமன்ற தேர்தலை பார்த்தாலே தெரிந்துவிடும். அதில், அதிமுக கூட்டணி 44 இடங்களில் வெற்றிபெற்றது. திமுக கூட்டணி 24 இடங்களில் வென்றது. திராவிட கட்சிகளின் இருபெரும் ஆளுமைகளாக திகழ்ந்த கலைஞர், ஜெயலலிதா ஆகியோரின் மறைவிற்கு பின்னர் நடைபெற்ற தேர்தல் என்பதால், இது பெரிதும் கவனம் பெற்றிருந்தது.
திமுகவில் மு.க.ஸ்டாலின், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் தேர்தலை சந்தித்தனர். இதில், சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் எடப்பாடி பழனிசாமி. இவர் முதலமைச்சராக ஆட்சியை நிறைவு செய்த போதுதான், தேர்தலை சந்திக்க நேர்ந்தது. இந்த சூழலில் கொங்கு மண்டலத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து மேம்பாலங்கள், நீர்பாசன திட்டங்கள் உள்ளிட்டவற்றை செயல்படுத்தினார். தேர்தல் முடிவுகளில் திமுக கூட்டணி ஆட்சியை கைப்பற்றினாலும், கொங்கு மண்டலத்தில் அதிமுக கூட்டணி பெருவாரியான வெற்றியை பதிவு செய்தது. தற்போது, 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பான களம் என்பது பெரிதும் மாறியிருக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக பெருவாரியான வெற்றியை பதிவுசெய்தது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, பெரிய அளவில் வியூகங்களை வகுத்து செயல்படுத்தி இருக்கிறார். அதிலும், தேர்தல் நெருங்கி வரும் வேளையில் களப் பணிகளை வேகப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக, கொங்கு மண்டலத்தில் அதிமுகவை வீழ்த்த வேண்டும் என்று தீவிரம் காட்டி வருகிறார்.
முதல்வர் மு.க.ஸ்டாலினை பொறுத்தவரை தங்களுக்கு வாக்களிக்காத மக்களுக்கும் நன்மைகள் செய்யவேண்டும் என்ற நோக்கில் கொங்கு மண்டலத்திற்கு கடந்த நான்கரை ஆண்டுகளில் ஏராளமான நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் முதல் வெளிநாட்டு தொழில் முதலீடுகள் வரை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். தற்போதைய நிலையில், கொங்கு மண்டலம், திமுக கூட்டணி பக்கம் சாய்ந்துள்ளதால், இம்முறை களமும், காட்சியும் அதிமுக அணிக்கு எதிராக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை என்கிறார்கள், அரசியல் விமர்சகர்கள்.
