வாஷிங்டன்: அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி நடிகை மேகன் கிங், தனது மூன்று குழந்தைகளுக்கான பராமரிப்பு உரிமையை கடந்த 2025ம் ஆண்டு இறுதியில் தற்காலிகமாக இழந்தார். தனது குழந்தைக்குப் பரிந்துரைக்கப்படாத மருந்துகளை வழங்க பள்ளி செவிலியரிடம் கோரிக்கை வைத்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர் இந்த நடவடிக்கையை எடுத்தனர். தற்போது குழந்தைகள் அவர்களது தந்தை ஜிம் எட்மண்ட்ஸுடன் வசித்து வரும் நிலையில், மேகன் கிங் அவ்வப்போது அவர்களைச் சந்தித்து வருகிறார்.
இந்நிலையில் 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனக்கு மர்ம நபர்களிடம் இருந்து கொலை மிரட்டல் வருவதாகக் கூறி அவர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரைத் தொடர்ந்து மேகன் கிங் கூறுகையில், ‘எனது செல்போன் எண்ணை முன்னாள் கணவர் ஜிம் எட்மண்ட்ஸ் பாலியல் தொழிலாளர்களுக்குக் கசியவிட்டு என்னைத் துன்புறுத்தத் தூண்டியுள்ளார். இதற்கு ஆதாரமாக ஜிம் எட்மண்ட்ஸ் அனுப்பிய ஒரு குறுஞ்செய்தி என்னிடம் உள்ளது’ என அவர் தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள ஜிம் எட்மண்ட்ஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீவ் ஹொனிக் கூறுகையில், ‘இந்தத் தகவல்கள் முற்றிலும் முட்டாள்தனமானவை, ஜிம் தற்போது குழந்தைகளை வளர்ப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்’ எனத் தெரிவித்தார். தற்போது இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
