டேராடூன்: பள்ளி பெயரை மாற்றுவது தொடர்பாக கல்வித்துறை இயக்குனரை தாக்கிய பாஜக எம்எல்ஏ மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். உத்தரகாண்ட் மாநிலம் ராய்ப்பூர் தொகுதி பாஜக எம்எல்ஏ உமேஷ் சர்மா, டேராடூனில் உள்ள தொடக்க கல்வி இயக்ககத்திற்கு சென்று அங்குள்ள அரசு பள்ளிக்கு நிலம் வழங்கியவரின் பெயரை உடனடியாக சூட்ட வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால் இதற்கு முறைப்படி மாநில அரசின் அனுமதி தேவை என்று தொடக்க கல்வித்துறை இயக்குனர் அஜய்குமார் நவுடியால் தெரிவித்தார்.
முன்னதாக நேற்று சுமார் 25 ஆதரவாளர்களுடன் இயக்குனரின் அலுவலகத்திற்குள் நுழைந்த எம்எல்ஏ, அங்கிருந்த ஊழியர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் அலுவலக பொருட்களை அடித்து உடைத்ததாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் தலையில் காயம் அடைந்த இயக்குனர் நவுடியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து எம்எல்ஏ உமேஷ் சர்மா கூறுகையில், ‘நான் நிலம் வழங்கியவரின் குடும்பத்தினருடன் கோரிக்கை வைக்கவே சென்றேன், ஆனால் இயக்குனர் என்னிடம் தவறாக நடந்து கொண்டார்’ என தெரிவித்தார்.
ராய்ப்பூர் போலீசார் பாஜக எம்எல்ஏ மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதே சமயம் எம்எல்ஏ தரப்பு அளித்த புகாரின் பேரில் இயக்குனர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் இந்த செயலை கண்டித்து தேர்வு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக எச்சரித்துள்ளனர்.
