திரைப்படங்கள், சமூக ஊடகங்களில் சிறுவர் இல்லங்களை தவறாக சித்தரிப்பதை நிறுத்த வேண்டும்

ஓசூர், பிப்.8:தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ராமராஜ், ஓசூர் பகுதிகளில் இயங்கி வரும் குழந்தைகள் காப்பகங்கள் மற்றும் மகளிர் காவல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, குழந்தைகள் காப்பகங்களில் உள்ள வசதிகளை பார்வையிட்டார். தொடர்ந்து, ஓசூர் மகளிர் காவல்நிலையத்திற்கு சென்ற அவர் குழந்தைகள் சம்பந்தமாக வழக்குகள் குறித்தும் கேட்டறிந்தார். இதையடுத்து, அவர் நிருபர்களிடம் கூறியது:சமூக ஊடகங்களிலும், திரைப்படங்களிலும் தமிழகத்தில் உள்ள சிறுவர் இல்லங்கள் குறித்து தவறாக சித்தரிப்பதை நிறுத்த வேண்டும். எங்காவது ஓரிரு குறைகள் இருப்பின், அவற்றை பெரிதுபடுத்தி காட்டுவதன் மூலமாக சமூகத்தில் இருக்கும் குழந்தைகளும், குற்றவாளிகளும் அதனை தங்களுக்கு சாதகமாக்கி கொள்ளக்கூடிய நிலை ஏற்படுகிறது.

குறைகளை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடமோ அல்லது தமிழ்நாடு குழந்தைகள் ஆணையத்திடமோ புகாராக தெரிவித்தால், ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளது. தேவையான பரிந்துரைகளை நாங்கள் அரசுக்கு செய்து சிறுவர் காப்பகங்களிலுள்ள பிரச்னைகளை சரிசெய்து கொள்ள முடியும். மாறாக சமூக ஊடகங்களிலும், திரைப்படங்களிலும் குழந்தைகளை தவறாக சித்தரிப்பதன் மூலமாக, குழந்தைகளின் வளர்ச்சிக்கு தடைகள் ஏற்படும். தமிழகத்தில் குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும், குழந்தை தொழிலாளர் முறை ஒழிக்கப்பட வேண்டும். குழந்தைகளின் உரிமைகளை பெற்றுத்தரவும், அவர்களை பாதுகாக்கவும், தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் செயல்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள், போலீசார் உடனிருந்தனர்.

Related Stories: