மோடி உருவபொம்மை எரிப்பு- பரபரப்பு; புதுச்சேரியில் பாஜ- காங்கிரஸ் பயங்கர மோதல்: கல்வீச்சில் எஸ்பி உட்பட 5 பேர் காயம்

புதுச்சேரி: புதுச்சேரி பாஜ அலுவலகம் முன்பு காங்கிரசார், மோடி உருவ பொம்மையை எரித்த நிலையில், பாஜவினருடன் பயங்கர மோதல் ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை விரட்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புதுடெல்லியில் சர்வதேச ஏஐ மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இளைஞர் அணியினர், பிரதமர் சரணடைந்து விட்டார் என வாசகங்கள் அச்சடிக்கப்பட்ட டி-ஷர்ட்டுகளை கையில் ஏந்தி கொண்டு மாநாடு நடக்கும் அரங்கிற்குள் நுழைந்து பிரதமருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த விவகாரம் பாஜவினர் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் புதுச்சேரி பாஜ இளைஞர் அணியை சேர்ந்தவர்கள் காமராஜர் சாலையில் இருந்து பேரணியாக வைசியாள் வீதியில் உள்ள புதுச்சேரி காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு வந்து, ராகுல் காந்தியின் உருவ பொம்மையை எரித்துவிட்டு சென்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உருவ பொம்மை மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் தலைவர் ராஜ்மோகன் (47) பெரியகடை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் 3 பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து உருவ பொம்மையை எரித்த பாஜவினரை தேடி வருகின்றனர். இந்நிலையில், நேற்று காங். தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்எல்ஏ, இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு, மகளிர் காங், தலைவி நிஷா தலைமையில் 100க்கும் மேற்பட்ட காங்கிரசார் காமராஜர் சாலையில் இருந்து புறப்பட்டு ரெட்டியார்பாளையம் சித்தானந்தா நகரில் உள்ள பாஜ அலுவலகத்தை முற்றுகையிட வந்தனர்.

அவர்களை, போலீசார் பேரிகார்டு அமைத்து தடுத்து நிறுத்தினர். இருப்பினும் தடுப்புகளை மீறி வந்த காங்கிரசார், மோடியின் உருவ பொம்மையை திடீரென தீயிட்டு எரித்தனர். அப்போது, பாஜவினருக்கும் காங்கிரசாருக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி செருப்பு, கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். இதனால், அப்பகுதியில் மேலும் பதற்றமாக காணப்பட்டது. அப்போது அங்கு திரண்ட, பாஜவினர் உருட்டு கட்டைகளுடன் பதில் தாக்குதலுக்கு சென்றனர்.

இரு பக்கமும் முன்னேறியவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். கலவரம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டதால் போலீசார், தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். கல் வீச்சில் எஸ்பி வம்சிதரரெட்டி உள்ளிட்ட 2 போலீசார், இரு கட்சிகளை சேர்ந்த 3 பேர் உள்ளிட்ட 5 பேர் காயம் அடைந்தனர். ஆத்திரமடைந்த பாஜவினர், இளைஞர் காங்கிரஸ் கொடியை தீயிட்டு கொளுத்தி கோஷமிட்டனர்.

அதேபோல் காங்கிரசார் இந்திராகாந்தி சதுக்கத்தை சுற்றி அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை எஸ்பி ஜிந்தா கோதண்டராமன் தலைமையிலான போலீசார் அப்புறப்படுத்தினர். தொடர்ந்து போலீசார் பாஜ அலுவலகம் முன் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

* மகளிர் போலீசார் இல்லை-பெண்கள் அவதி
போராட்டம் நடந்த இடத்தில் மகளிர் போலீசார் இல்லாததால், மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகளை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினார். ஒரு சிலர் பெண் நிர்வாகிகள் முண்டியடித்தபடி வந்தபோது, தடுமாறி கீழே விழுந்தனர். அய்யய்யோ, நான்தான் கீழே கிடக்கிறேன் என்னை மிதித்துவிடாதீர்கள் என கதறினர்.

* குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்
பாஜ மாநில தலைவர் ராமலிங்கம் கட்சி அலுவலகத்துக்கு வந்து, சம்பவம் குறித்து நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறுகையில், கலவரத்தை தூண்ட வேண்டும் என திட்டமிட்டு காங்கிரசார் வந்துள்ளனர். இதோடு நிறுத்திக்கொள்ளாவிட்டால் பாஜ தரப்பில் கடுமையான பதிலடி தரப்படும். கல்வீச்சில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்ய வேண்டும் என்றார்.

Related Stories: