இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்க வேண்டும்: பிரதமர் மோடியிடம் காங். வலியுறுத்தல்

புதுடெல்லி: பிரதமர் மோடி இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் ஒப்பந்தத்தின் விதிமுறைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தி இருக்கின்றது. இந்தியா-அமெரிக்கா இடையேயான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து விமர்சித்து வருகின்றது.  இந்நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘‘அமெரிக்கா உடனான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் குறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும்.

அமெரிக்கா தரப்பில் இருந்து தெளிவான தெளிவுபடுத்தல்கள் வரும் வரை மற்றும் இந்திய விவசாயிகளின் நலன்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வரை இறக்குமதி தாராளமயமாக்கல் இருக்காது என்று அரசு திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும். இந்த ஒப்பந்தம் தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் எதுவும் மாறாது என்ற அதிபர் டிரம்பின் கூற்றுடன் பிரதமர் மோடி உடன்படுகிறாரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

இந்தியா-அமெரிக்காவின் ஒப்பந்தம் விவசாயிகளை மோசமாக பாதிக்கும். தெளிவுபடுத்தல்கள் செய்யப்படும் வரை இந்த வர்த்தக ஒப்பந்தத்தை இந்திய அரசு நிறுத்தி வைக்க வேண்டும். இந்தியாவின் கொள்கையில் மறுபரிசீலனை இருப்பதால் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின் இறக்குமதி தாராயமயமாக்கலை நாங்கள் மேற்கொள்ள மாட்டோம் என்று பிரதமர் திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். மேலும் காங்கிரஸ் கட்சி சில கேள்விகளை எழுப்புகின்றது.

* பிப்ரவரி 2ம் தேதி அதிபர் டிரம்ப் ஒப்பந்தம் எட்டப்பட்டதில் மகிழ்ச்சி அடைவதாகவும் பிரதமரின் வேண்டுகோளின் பேரில் இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் கூறிஒப்பந்தத்தின் அறிவிப்பை வெளியிட்டார். பிரதமர் இதனை அறிவிக்க ஏன் அவசரப்பட்டார் என்பது முதல் கேள்வியாகும்.

* மக்களவையில் ராகுல்காந்தி சீனா மற்றும் முன்னாள் ராணுவ தளபதி நரவனேவின் புத்தகத்தை பற்றிய பிரச்னையை எழுப்பியதுடன் தொடர்புடையது என்று நாங்கள் நம்புகிறோம். அதிலிருந்து திசைதிருப்பவே பிரதமர் மோடி அதிபர் டிரம்பிடம் இதனை அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார் என்று நாங்கள் நம்புகிறோம்.

* டிசம்பர் மாதத்திலேயே உச்சநீதிமன்ற தீர்ப்பு எந்த நேரத்திலும் வரலாம் என்று அறிந்து இருந்தபோதும், பலர் அதனை ரத்து செய்யலாம் என்றும் நம்பினர். ஆனால் தீர்ப்பு டிரம்புக்கு எதிராக செல்லக்கூடும் என்று உங்களுக்கு தெரிந்திருந்தும் நீங்கள் அவசரமாக ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டது ஏன்?

* இந்த தீர்ப்பானது ஒப்பந்தத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்ற தனது நண்பர் டிரம்பின் கூற்றுடன் பிரதமர் மோடி உடன்படுகின்றரா என்று அவரிடம் நாங்கள் கேட்க விரும்புகின்றோம்” என்றார்.

Related Stories: