×

தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜவை பற்றி வாய் திறக்காமல் இருக்கும் விஜய்: உ.வாசுகி விளாசல்

தஞ்சை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் உ.வாசுகி தஞ்சையில் அளித்த பேட்டி: திருக்காட்டுப்பள்ளி மைக்கேல்பட்டி பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. நீதித்துறை நடுவரிடம் சிறுமி கொடுத்த வாக்குமூலம் அல்லது இறப்பின்போது கொடுத்த மரண வாக்குமூலம் எதிலும் மதமாற்ற புகார் இல்லை. கட்டாய மதமாற்றம் நடந்ததற்கான எவ்வித ஆதாரமும் இல்லை என சிபிஐ சொல்லி உள்ளது. இதன் மூலம் பாஜவும், அதன் பரிவாரங்களும், மக்கள் மத்தியில் முன்வைத்த பொய்யான பிரசாரம் தகர்ந்திருக்கிறது.

பொய்யான தகவலை வைத்து வதந்திகளை பரப்பி மக்கள் மத்தியில் மத ரீதியான பிளவை ஏற்படுத்த முயற்சி செய்ததற்காக அண்ணாமலை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அதே நேரத்தில், வெறுப்பு அரசியலை பரப்பி மக்கள் ஒற்றுமையை மதத்தின் பெயரால் சீர்குலைப்பதற்கான பொய்யான பிரசாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை மீது தமிழக அரசு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக கூட்டணியில் இந்த முறை மார்க்சிஸ்ட் இரட்டை இலக்க எண்ணிக்கையில் தொகுதி பெற முயற்சி செய்வோம்.

தவெக தலைவர் விஜய் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை பாதுகாப்பேன் என்று சொல்கிறார். தமிழகத்தை பாதிக்க கூடிய ஒன்றிய அரசின் கொள்கைகளை, திட்டங்களை, சட்டங்களை, அறிவிப்புகளை பற்றி வாய் திறக்காமல் இருக்கும் நிலையில் அவர் சொல்வதை எப்படி நம்புவது? இதையெல்லாம் அவரை பின்பற்றுபவர்கள் யோசிக்க வேண்டும். ​இப்போது தமிழகத்தில் மதசார்பின்மை பாதுகாக்கப்பட வேண்டும். மக்கள் ஒற்றுமை பாதுகாக்கப்பட வேண்டும். ஒன்றிய அரசின் மோசமான நடவடிக்கைகள் நிறைவேறக்கூடாது. அதுதான் வரும் தேர்தலில் முக்கியமான விஷயம். திமுக கூட்டணி ஏற்கனவே வலிமையான கூட்டணியாக உள்ளது. இந்த கூட்டணிக்கு தேமுதிக வந்துள்ளதால் அது வலிமையை அதிகரிக்கும். இவ்வாறு கூறினார்.

Tags : VIJAY ,U. ,Vasuki Vlasal ,Panchai ,Marxist Communist Party ,Vasuki Thancha ,CBI ,Thirukatupalli Michaelpatti School ,Lavanya ,
× RELATED சட்டமன்ற வளாகத்தில் முதல்வர்...