×

தஞ்சாவூரில் நெல் மூட்டைகள் நனைந்து முளைத்து விட்டதாக குற்றம் சாட்டியவர் வயலில் அறுவடை நடக்கவேயில்லை: எடப்பாடிக்கு அமைச்சர் சக்கரபாணி பதில்

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று 2026-27ம் ஆண்டுக்கான வேளான் இடைக்கால பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ‘‘தமிழகத்தில் விவசாயத்தின் வளர்ச்சி மைனஸ் 1.83 சதவீதமாக உள்ளது’’ என்றார். உடனே அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குறுக்கிட்டு, ‘‘2011-12ம் ஆண்டில் உங்கள் ஆட்சியில் மைனஸ் 21.35 சதவீதமாகவும், 2015-16ம் ஆண்டில் மைனஸ் 4.6 சதவீதமாகவும், 2016-17ம் ஆண்டில் மைனஸ் 29.91 சதவீதமாகவும் வேளாண் வளர்ச்சி இருந்தது. 2023-24ம் ஆண்டில் திமுக ஆட்சியில் மைனஸ் 1.96 சதவீதமாக இருந்தது. எனவே மைனஸ் 21-ல் இருந்து மைனஸ் 1 ஆக குறைந்திருப்பதை கவனிக்க வேண்டும்’’ என்றார்.
எடப்பாடி பழனிசாமி: வேளாண்மை துறைக்கென்று தனி பட்ஜெட்டை போட்டிருக்க வேண்டும். ஆனால் ஊரக வளர்ச்சி, பட்டு வளர்ச்சி, கால்நடை, பால்வளம், மீன்வளம், கூட்டுறவு உள்ளிட்ட பல துறைகளை இணைத்து பட்ஜெட் போட்டிருக்கிறீர்கள். அதையெல்லாம் கூறி ரூ.47 ஆயிரம் கோடி ஒதுக்கீடு என்று கூறுகிறீர்கள். அது எப்படி?.
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்: வேளாண்மை துறை மற்றும் வேளாண்மை துறையை சார்ந்துள்ள அனைத்து விவசாயிகளையும் அழைத்து பேசி பட்ஜெட் தயாரித்தோம்.
எடப்பாடி பழனிசாமி: நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்ற நெற்கள் மழையில் நனைந்து முளைத்து வீணாகிவிட்டன. அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்க வேண்டும்.
அமைச்சர் சக்கரபாணி: இதுதொடர்பாக தஞ்சாவூர் மாவட்டத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் வந்திருந்தார். அங்கு ஒரு கிராமத்தை சேர்ந்த பூங்கொடி மற்றும் அவரது மாமியார் ஆகியோர் தங்கள் நெல் மூட்டைகள் நனைந்து முளைத்து விட்டதாக குற்றம் சாட்டினர். இது குறித்து துறை ரீதியாக ஆய்வு செய்து பார்த்தால் அவர்களின் வயலில் அறுவடை நடக்கவேயில்லை. பின்னர் எப்படி நெல் கொண்டு வரமுடியும்? இதில் யாரும் பாதிக்கப்படவில்லை.
எடப்பாடி பழனிசாமி: டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் குளறுபடி நேரிட்டு அது ரத்து செய்யப்பட்டு விட்டது. இது தமிழக வரலாற்றிலேயே நடந்ததில்லை.
அமைச்சர் கயல்விழி செல்வராஜ்: அந்த தேர்வு வரும் மார்ச் 15ம் தேதி நடத்த முடிவு செய்துள்ளோம். தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2012ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதியன்று 17 பணிகளுக்காக நடந்த தேர்வில் 6 லட்சத்து 41 ஆயிரத்து 228 பேர் தேர்வு எழுதிய நிலையில், வினாத்தாள் கசிந்ததாக கூறி அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டுவிட்டது. இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

Tags : Minister ,Chakarapani ,Tanjavur ,Chennai ,Edappadi Palanisami ,Tamil Nadu ,Legislative Assembly ,M. R. K. Paneer Selvam ,
× RELATED 2026 தேர்தலில் வென்று மீண்டும் திமுக...