×

வளமான எதிர்காலத்திற்கான இந்தியாவின் இலக்கு ஏஐ அனைவருக்குமான தொழில்நுட்பமாக இருக்க வேண்டும்: செயற்கை நுண்ணறிவு தாக்க மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: ‘‘செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பார்த்து இந்தியா அச்சப்படவில்லை. அதை வளமான எதிர்காலமாகவும், அனைவருக்குமான தொழில்நுட்பமாகவும் பார்க்கிறது. ஏஐ தொழில்நுட்பத்தை ஜனநாயகப்படுத்தவும், அதை அனைவருக்குமான, அதிகாரமளிப்பதற்கான கருவியாக மாற்றும் இலக்குடன் முன்னேறுகிறது’’ என டெல்லி ஏஐ தாக்க உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

டெல்லியில் பாரத் மண்டபத்தில் நடந்து வரும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தாக்க உச்சி மாநாட்டில் உலக தலைவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் உரையாற்றும் நிகழ்வு நேற்று நடந்தது. இந்நிகழ்வை பிரதமர் மோடி தொடங்கி வைத்து பேசியதாவது: சில நாடுகள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ரகசியமான முறையில் மூடிய கதவுகளுக்கு பின்னால் உருவாக்க வேண்டுமென நம்புகின்றன. ஆனால் இந்தியா வேறுபட்டது. ஏஐ பகிரப்பட்டதாக, அதன் குறியீடுகள் ஓபன் சோர்ஸ் ஆக இருக்கும் போது, அது உண்மையிலேயே உலக நன்மைக்கு சேவை செய்யும் என்று நாங்கள் நம்புகிறோம்.

அப்போதுதான் கோடிக்கணக்கான இளம் தலைமுறையினர் அதை மேலும் மேம்படுத்த முடியும். இன்று உலகின் 2 வகையான மக்கள் உள்ளனர். ஏஐயை பார்த்து பயப்படுபவர்கள், அதில் வளமான எதிர்காலத்தை காண்பவர்கள். இந்தியாவைப் பொறுத்த வரையில் ஏஐயை பார்த்து அச்சப்படவில்லை என்பதை பெருமையுடனும் பொறுப்புடனும் கூறுகிறேன். இந்தியா ஏஐயில் செழிப்பை காண்கிறது. சிறந்த வாய்ப்புகளையும், வளமான எதிர்காலத்திற்கான வரைபடத்தையும் காண்கிறது.

எப்போதும் ஒரு புதிய தொழில்நுட்பம் வரும் போது சிலருக்கு சந்தேகங்கள் இருக்கும். ஆனால் இன்றைய இளம் தலைமுறையினர் ஏஐயை ஏற்றுக் கொள்ளும் விதம் முன்னெப்போதும் இல்லாதது. மனித வரலாற்றில் முழு நூற்றாண்டுகளையும் வடிவமைத்த சில திருப்புமுனைகள் உள்ளன. இந்த திருப்புமுனைகள் நாகரிகத்தின் திசையை வடிவமைத்து வளர்ச்சியின் வேகத்தை மாற்றுகின்றன. செயற்கை நுண்ணறிவு வரலாற்றில் அத்தகைய மாற்றங்களில் ஒன்றாகும்.

வரலாற்றில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தியாக ஏஐ திகழ்கிறது. ஏஐ, இயந்திரங்களை அறிவார்ந்ததாக மாற்றுகிறது. மனித திறன்களை பல மடங்கு பெருக்கி வருகிறது. ஆனால், அது அதன் இலக்குகளில் இருந்து விலகிச் சென்றால் அழிவுக்கு வழிவகுக்கும். நன்றாக பயன்படுத்தினால், நல்ல பல தீர்வுகளைத் தரும். எனவே எதிர்காலத்தில் ஏஐயால் என்ன செய்ய முடியும் என்பது கேள்வி அல்ல, ஏஐயை நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதே உண்மையான கேள்வி.

இதில் நாம் தொலைநோக்கு பார்வையுடன் சிந்திக்க வேண்டும். நமது பொறுப்பை சம அளவில் நிறைவேற்ற வேண்டும். தற்போதைய தலைமுறையுடன் சேர்ந்து, வரும் தலைமுறையினருக்கு எந்த வகையான ஏஐயை தரப்போகிறோம் என்பது குறித்தும் கவலைப்பட வேண்டும். ஏஐ குறித்த தொலைநோக்கு பார்வையாக மானவ் (MANAV) என்பதை இந்தியா முன்வைக்கிறது. இதில், எம் என்பது நீதி மற்றும் நெறிமுறைகளையும், ஏ என்பது பொறுப்புள்ள நிர்வாகத்தையும் என் என்பது தேசத்தின் இறையாண்மையையும், ஏ என்பது எளிதில் அணுக்கூடிய அனைவரையும் உள்ளடக்கியதையும், வி என்பது சரிபார்க்கக் கூடிய, சட்டப்பூர்வமானதையும் குறிக்கும்.

இந்தியா ஏஐ புரட்சியின் ஒரு பகுதி மட்டுமல்ல, அதை வழிநடத்தி வடிவமைத்து வருகிறது. இந்தியா தொழில்நுட்பத்தை உருவாக்கு மட்டுமல்லாமல், முன்னோடியில்லாத வேகத்தை அதை ஏற்றுக் கொள்கிறது. எங்களிடம் திறமை உள்ளது. ஆற்றல் திறன் மற்றும் கொள்கை தெளிவும் உள்ளது. இந்த உச்சிமாநாட்டில், 3 இந்திய நிறுவனங்கள் தங்கள் செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் மற்றும் பயன்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளன என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த மாதிரிகள் நமது இளைஞர்களின் திறமையை வெளிப்படுத்துகின்றன. அவை இந்தியா உலகிற்கு வழங்கும் தீர்வுகளையும் பிரதிபலிக்கின்றன. ஏஐ பற்றிய இந்தியாவின் பார்வை, அனைவருக்கும் நலன் மற்றும் மகிழ்ச்சி என்ற இந்த உச்சிமாநாட்டின் கருப்பொருளில் பிரதிபலிக்கிறது. ஏஐ அனைவருக்குமான தொழில்நுட்பமாக இருக்க வேண்டும் என்பதே எங்களின் எதிர்கால இலக்கு. இது ஜனநாயகப்படுத்தப்பட வேண்டும். அதிகாரமளிப்பதற்கான ஒரு கருவியாக மாற்றப்பட வேண்டும்.

மனிதர்கள் வெறும் தரவுப் புள்ளியாகவோ அல்லது மூலப்பொருளாகவோ மாறாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு, ஏஐ-க்கான நமது அளவுகோல் அனைவரின் நலனும் மகிழ்ச்சியும் ஆகும். ஏஐக்கு நாம் தடையற்ற பரந்த வானத்தை கொடுக்க வேண்டும், அதே நேரத்தில் அதன் கடிவாளம் நம் கைகளில் வைத்திருக்க வேண்டும். சரியான நேரத்தில், சரியான நோக்கத்துடன் சரியான முடிவுகளை எடுக்கும்போதுதான் சரியான தாக்கம் வரும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இந்த மாநாட்டில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக, பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே, மொரிஷியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம், குரோஷியா பிரதமர் ஆண்ட்ரேஜ் பிளென்கோவிக், செர்பியா அதிபர் அலெக்சாண்டர் வுசிக், எஸ்டோனியா அதிபர் அலார் காரிஸ் மற்றும் பின்லாந்து பிரதமர் பெட்டேரி ஓர்போ உள்ளிட்ட உலக தலைவர்கள் பங்கேற்றனர்.

* கைகளை பிடிக்காத ஆல்ட்மேன்-அமோடி
உலக அளவில் ஏஐ தொழில்நுட்பத்தில் போட்டி நிறுவனங்களாக ஓபன்ஏஐயும், ஆந்த்ரோபிக்கும் உள்ளன. இதில், ஆந்த்ரோபிக்கின் சிஇஓ டாரியோ அமோடி முன்னதாக நிறுவனர் சாம் ஆல்ட்மேனின் ஓபன்ஏஐ நிறுவனத்தில் பணியாற்றியவர். பின்னர் ஓபன்ஏஐயில் இருந்து விலகி ஆந்த்ரோபிக் நிறுவனத்தை தொடங்கி ஆல்ட்மேனுக்கு போட்டியாளராகி விட்டார்.

இந்நிலையில், ஆல்ட்மேனும், அமோடியும் நேற்று ஏஐ தாக்க உச்சி மாநாட்டில் பங்கேற்றனர். பிரதமர் மோடியுடன் அனைத்து தொழில்நுட்ப நிறுவன தலைவர்களும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அப்போது, பிரதமர் மோடியின் வலது புறத்தில் சுந்தர் பிச்சையும், இடது புறத்தில் சாம் ஆல்ட்மேனும் இருந்தனர். ஆல்ட்மேனுக்கு அருகில் அமோடி நிறுத்தப்பட்டார்.

புகைப்படம் எடுக்கப்பட்ட போது அனைவரும் ஒருவருக்கொருவர் கைகோர்த்து கையை உயர்த்திப் பிடித்த நிலையில், ஆல்ட்மேனும், அமோடியும் செய்வதறியாமல் திகைத்தனர். இருவரும் தர்மசங்கடத்துடன் தயக்கத்துடன் ஒருவருக்கொருவர் கையை பிடிக்காமலேயே வெறுமனே கையை உயர்த்தியபடி போஸ் கொடுத்தனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இது குறித்து பேட்டி அளித்த ஆல்ட்மேன், ‘‘அந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என தெரியாமல் குழம்பி விட்டேன்’’ என கூறி உள்ளார்.

* பில்கேட்ஸ் பங்கேற்கவில்லை
ஏஐ தாக்க உச்சி மாநாட்டில், ஆல்பாபெட் மற்றும் கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை, மெட்டா நிறுவனத்தின் ஏஐ தலைமை அதிகாரி அலெக்சாண்டர் வாங்க், சர்வம் இணை நிறுவனர் பிரதியுஷ் குமார், கூகுள் டீப்மைண்ட் சிஇஓ டெமிஸ் ஹஸ்ஸாபிஸ் உள்ளிட்ட பல்வேறு முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்றனர். ஆனால், மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் பங்கேற்கவில்லை.

ஏஐ தாக்க மாநாட்டிற்கு முன்பாக அவர் இந்தியா வந்தாலும் மாநாட்டில் கலந்து கொள்வதை தவிர்த்தார். அமெரிக்காவில் சிறார் பாலியல் குற்றவாளி எப்ஸ்டீனின் கோப்புகளில் பில்கேட்ஸ் குறித்த சில சர்ச்சை தகவல்கள் சமீபத்தில் வெளியாகின. இதன் காரணமாக தர்மசங்கடம் ஏற்படுவதை தவிர்க்க பில்கேட்ஸ் ஏஐ மாநாட்டில் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது. ஆனால் இதுதொடர்பாக பில்கேட்சின் அறக்கட்டளை எந்த காரணத்தையும் தெரிவிக்கவில்லை.

* இந்தியா மிகப்பெரிய ஏஐ முதலீட்டு இலக்கு
உச்சி மாநாட்டில் கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை பேசுகையில், ‘‘ஏஐயை விட பெரிய தொழில்நுட்பத்தை நான் கனவு கண்டதில்லை. இது எங்கள் வாழ்நாளின் மிகப்பெரிய மாற்றமாகும். இந்த தொழில்நுட்பம் அனைவருக்கும் பயனளிப்பதை உறுதி செய்வதற்காக, அரசாங்கங்களும் தொழில்துறையும் தைரியமாகவும் பொறுப்புடனும் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.

மைக்ரோசாப்ட் துணை தலைவர் பிராட் ஸ்மித் பேசுகையில், ‘‘உலகின் தெற்கில் ஏஐயை விரிவுபடுத்த வரும் 2030ம் ஆண்டுக்குள் 50 பில்லியன் டாலர் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம். இதில் இந்தியா எங்களின் மிகப்பெரிய முதலீட்டு இலக்குகளில் ஒன்றாகும்’’ என்றார்.

* மலிவு விலையில் ஏஐக்காக ரூ.10 லட்சம் கோடி முதலீடு
உச்சி மாநாட்டில், இந்திய தொழிலதிபர் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி பேசுகையில், ‘‘மொபைல் மற்றும் இன்டர்நெட் டேட்டாவை மலிவு விலையில் ஒட்டுமொத்த இந்தியாவும் அணுகக் கூடியதாக மாற்றி நாங்கள் சாதித்ததைப் போல ஏஐ தொழில்நுட்பத்தையும் மாற்றப் போகிறோம். இதற்காக அடுத்த 7 ஆண்டுகளில் ஏஐ தொழில்நுட்பத்தில் ரூ.10 லட்சம் கோடியை ஜி முதலீடு செய்வோம். இது பொறுப்பான, ஒழுக்கமான, தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான மூலதனம்’’ என்றார்.

* தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நேரடி மொழிபெயர்ப்பு
பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி உரையாற்றிய போது, அவருக்கு பின்னால் இருந்த பெரிய திரையில் ஏஐ மூலம் இயக்கப்பட்ட சைகை மொழி விளக்கம் காட்சிப்படுத்தப்பட்டது. இதுமட்டுமின்றி, பிரதமரின் உரை தமிழ், அசாமி, பெங்காலி, ஆங்கிலம், குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தெலுங்கு ஆகிய 11 மொழிகளில் நேரடி மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. இந்த வீடியோக்களை பிரதமர் மோடி தனது சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

* இந்தியாவுடன் இணைந்து செயல்படுவோம்: மேக்ரான்
உச்சி மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பேசுகையில், ‘‘புவிசார் அரசியல் பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், நமது அனைத்து டிஜிட்டல் கருவிகளையும் அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறையை நோக்கி வழிநடத்த வேண்டிய அவசர உணர்வு அதிகரித்துள்ளது. புதுமைகளை பொறுப்புடனும், தொழில்நுட்பத்தை மனித நேயத்துடனும் இணைக்கும் செயற்கை நுண்ணறிவுக்கான கட்டமைப்பை உருவாக்க இந்தியாவும், பிரான்சும் கூட்டாக செயல்படும்’’ என்றார்.

Tags : India ,PM Modi ,AI Impact Summit ,New Delhi ,Narendra Modi ,Delhi ,
× RELATED 24 மணி நேரத்தில் 2.5 லட்சம் பேர் உறுதிமொழி: ஏஐ மாநாடு கின்னஸ் சாதனை படைத்தது