புதுடெல்லி: தமிழ்நாடு உள்பட 10 மாநிலங்களில் 37 எம்பிக்களின் பதவி காலம் முடிவதால், காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்தல் அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகத்தில் 6 எம்பி பதவிகளுக்கு மார்ச் 16ல் தேர்தல் நடக்கிறது. அதனால் தமிழக சட்டப் பேரவை தேர்தல் அட்டவணை தள்ளிப் போக வாய்ப்புள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில், அதிமுக கூட்டணியில் பாமக, தேமுதிக, அமமுக எம்பி சீட் கேட்பதால் யாருக்கு கொடுப்பது, எப்படி கொடுப்பது என்பதில் சிக்கல் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் 2021ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி அன்று 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து மார்ச் 12ம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கி மார்ச் 19ம் தேதி வரை நடைபெற்றது. மார்ச் 20ம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, மார்ச் 22ம் தேதி மனுக்களை திரும்பப் பெற கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டது. இந்தத் தேர்தலுடன் சேர்த்து கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
தமிழகம் முழுவதும் ஏப்ரல் 6ம் தேதி அன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 73.63 சதவீதம் வாக்குகள் பதிவான நிலையில், மே 2ம் தேதி அன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்தத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 159 இடங்களில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மே 7ம் தேதி அன்று தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார்.
இந்த நிலையில் வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் எப்போது வெளியிடும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஏப்ரல் மாதத்துடன் 10 மாநிலங்களை சேர்ந்த 37 உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இதில் தமிழ்நாட்டில் 6, மகாராஷ்டிராவில் 7, ஒடிசா 4, மேற்கு வங்கம் 5, பீகார் 5, அசாமில் 3 உறுப்பினர்களின் பதவி காலம் முடிகிறது.
மேலும் சட்டீஸ்கர், அரியானா, தெலங்கானா மாநிலங்களில் தலா 2 இடங்களும், இமாச்சல பிரதேசத்தில் 1 இடமும் காலியாகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை திமுகவின் என்.ஆர். இளங்கோ, அந்தியூர் பி.செல்வராசு, திருச்சி சிவா, டாக்டர் கனிமொழி என்.வி.என்.சோமு மற்றும் அதிமுகவின் எம்.தம்பிதுரை, தமாகாவின் ஜி.கே.வாசன் ஆகிய 6 எம்பிக்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2ம் தேதியுடன் முடிகிறது. இவர்களின் இடங்களை நிரப்ப விரிவான தேர்தல் அட்டவணையை நேற்று தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி வரும் 26ம் தேதி வேட்பு மனுக்கள் தொடங்கி, வரும் மார்ச் 5ம் தேதி வரை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படும். மார்ச் 6ம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, வேட்பாளர்கள் பட்டியல் உறுதி செய்யப்படும். வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 9ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டி இருந்தால், மார்ச் 16ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தல் மார்ச் 16ம் தேதி நடைபெறுகிறது. எனவே மார்ச் 16ம் தேதிக்கு பின்னர் தான் தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் அட்டவணை வெளியாக வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் மாதத்தில் இரண்டாவது அல்லது கடைசி வாரத்தில் வாக்குப்பதிவு நடைபெற வாய்ப்புள்ளது. திமுகவில் காலியாகும் 4 மாநிலங்களவை எம்பி பதவியைப் பொறுத்தவரை பிரச்னை ஏற்படவில்லை. ஆனால் அதிமுக கூட்டணியில் உள்ள அமமுக, பாமக ஆகிய கட்சிகள் தங்களுக்கு மாநிலங்களவை சீட் வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
தேமுதிகவும் ஒரு சீட் வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது. ஆனால் காலியிடமோ 2 தான். அதில் 3 பேர் கேட்கின்றனர். இதனால் அமமுகவுக்கு பாஜவில் வாங்கிக் கொள்ளுங்கள் என்ற சொன்னதாக கூறப்படுகிறது. தேமுதிகவுக்கு மட்டும் ஒரு சீட் வழங்க அதிமுக முன் வந்துள்ளதாக கூறப்படுகிறது. பாமகவுக்கு அடுத்த முறை எம்பி பதவி காலியாகும்போது வாய்ப்பு வழங்குவதாக பேச்சுவார்த்தை நடக்கிறது. ஆனால் யாருக்கு கொடுத்தாலும் அதிருப்தி ஏற்படும் என்பதால் அதிமுகவுக்கு தொடர்ந்து சிக்கல் எழுந்துள்ளது.
* பிப்.26 முதல் வேட்புமனு தாக்கல்
தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் பிப்ரவரி 26ம் தேதி தொடங்கும். மார்ச் 16ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். மார்ச் 20ம் தேதி தேர்தல் நடவடிக்கைகள் முடிவுறும். இந்திய தேர்தல் ஆணையம், தமிழ்நாடு மன்ற பேரவை செயலகத்தின் கூடுதல் செயலாளரை தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும், தமிழ்நாடு சட்டமன்ற பேரவைச் செயலகத்தின் இணை செயலாளரை உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும் நியமனம் செய்துள்ளது.
வேட்பு மனுக்களை பிற ஆவணங்களுடன் தேர்தல் நடத்தும் அதிகாரி முன்போ அல்லது உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி முன்போ தலைமைச் செயலகத்தில் உள்ள அவர்களது அலுவலகத்தில் பிப்ரவரி 26ம் தேதி முதல் மார்ச் 5ம் தேதி வரை காலை 11 மணிமுதல் பிற்பகல் 3 மணி வரை 1881ம் வருட செலாவணி முறிச் சட்டத்தின் கீழ் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள பிப்ரவரி 28ம் தேதி மற்றும் மார்ச் 1ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) தவிர பிற நாட்களில் தாக்கல் செய்யலாம். வாக்குப்பதிவு தேவைப்படின் சட்டமன்ற குழுக்கள் அறையில் மார்ச் 16ம் தேதி நடைபெறும்’’ என்று கூறப்பட்டுள்ளது.
* முக்கிய தலைவர்கள்
ஓய்வு பெறும் உறுப்பினர்களில் சரத்பவார்(தேசியவாத காங்கிரஸ்-சரத்சந்திர பவார்), ஒன்றிய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே (குடியரசு கட்சி-ஏ), மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங்(ஐக்கிய ஜனதா தளம்), மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி (காங்கிரஸ்), கே.டி.எஸ்.துளசி (காங்கிரஸ்), பாஜவை சேர்ந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் பகவத் காரட், ராமேஸ்வர் டெலி மற்றும் பிரியங்கா சதுர்வேதி(சிவசேனா-யுபிடி) உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் அடங்குவர்.
* மாநிலம் வாரியாக காலியாகும் இடங்கள்
மகாராஷ்டிரா 7
தமிழ்நாடு 6
மேற்கு வங்கம் 5
பீகார் 5
ஒடிசா 4
அசாம் 3
தெலங்கானா 2
சட்டீஸ்கர் 2
அரியானா 2
இமாச்சல பிரதேசம் 1
* திமுக, அதிமுக கூட்டணிக்கு எத்தனை எம்பிக்கள்?
தமிழக சட்டப் பேரவையின் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் நடைபெறும் மாநிலங்களவை தேர்தலில், ஒரு வேட்பாளர் வெற்றி பெற சுமார் 34 முதல் விருப்ப வாக்குகள் தேவைப்படும். தற்போதுள்ள 234 உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 158 இடங்களுடன் வலுவாக உள்ளன. இதனால் திமுக கூட்டணி 4 இடங்களில் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது.
அதிமுகவில் 66 எம்எல்ஏக்கள் இருந்தனர். அதில் ஓ.பன்னீர்செல்வம், ஐயப்பன் ஆகியோர் தனியாக உள்ளனர். அதிமுகவில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வைத்திலிங்கம், பால் மனோஜ்பாண்டியன் ஆகியோர் திமுகவில் இணைந்து விட்டனர். வால்பாறை எம்எல்ஏ அமுல் கந்தசாமி மரணமடைந்து விட்டார். இதனால் தற்போது அதிமுகவின் பலம் 62 ஆக உள்ளது. பாஜ 4, அன்புமணி பாமக 3 ஆகியோர் ஆதரவு தெரிவிப்பதால், அதிமுக கூட்டணியின் பலம் 69 ஆக உள்ளது.
இதனால், அதிமுக கூட்டணிக்கு 2 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. அவர்கள் யார் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது. இந்த தேர்தல் நடைமுறைகள் மார்ச் 20ம் தேதிக்குள் நிறைவு பெற்று, தேர்ந்தெடுக்கப்படும் புதிய உறுப்பினர்கள் ஏப்ரல் 2ம் தேதிக்கு பிறகு தங்களது பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
