- பாஜா
- ஆதமுகுஹ்
- புதுச்சேரி
- தில்லி
- மிராட்டி
- ராஜ்யசபா இருக்கை
- சட்டமன்ற உறுப்பினர்
- கெஞ்ஜம்
- ரங்கசாமி
- ஆர் காங்கிரஸ்
- ஆதிமுகா
- காரைக்கால்
- மகே
- எனாம்
* ராஜ்யசபா சீட், நியமன எம்எல்ஏ கேட்டும் கெஞ்சும் முதல்வர் ரங்கசாமி,
* மோடி, அமித்ஷாவை சந்திக்க விரைவில் தலைநகர் பயணம்
புதுச்சேரி என்.ஆர் காங்கிரஸ், பாஜ, அதிமுக, லட்சிய ஜனநாயக கூட்டணி உறுதியாகியுள்ளது. புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் என நான்கு பிராந்தியங்களில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில், முதல் கட்டமாக என். ஆர் காங்கிரஸ்-16, பாஜ-10, அதிமுக-2, லஜக-2 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளில் ஒரு சில தொகுதிகளை தவிர்த்து மீதமுள்ள தொகுதிகளை அப்படியே என்ஆர் காங்கிரஸ் கோரியுள்ளது.
அதன்படி ஏனாம், லாஸ்பேட்டை, காரைக்கால் வடக்கு, நெடுங்காடு, தட்டாஞ்சாவடி, கதிர்காமம், இந்திராநகர், ராஜ்பவன், அரியாங்குப்பம், ஏம்பலம், நெட்டப்பாக்கம், பாகூர், திருபுவனை, வில்லியனூர், உழவர்கரை, மங்கலம் ஆகிய 16 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரசும், மண்ணாடிப்பட்டு, ஊசுடு, காலாப்பட்டு, காமராஜ்நகர், நெல்லித்தோப்பு, முதலியார்பேட்டை, மணவெளி, நிரவி-டிஆர்பட்டினம், திருநள்ளாறு, காரைக்கால் தெற்கு, உருளையன்பேட்டை, மாகே ஆகிய 12 தொகுதிகளில் பாஜவும் (இதில் 2 தொகுதி லட்சிய ஜனநாயக கட்சிக்கு),
முத்தியால்பேட்டை, உப்பளம் ஆகிய 2 தொகுதிகளில் அதிமுகவும் போட்டியிட முதற்கட்டமாக சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ராஜ்பவன், ஏனாம், நெடுங்காடு, திருபுவனை ஆகிய தொகுதிகளுக்கு பாஜ மற்றும் என்.ஆர் காங்கிரஸ் இருவரும் உரிமை கோருவதால் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை தொடரும் என கூறப்படுகிறது. சமீபத்தில் லாட்டரி அதிபர் மகன் ஜோஸ் சார்லஸ் தொடங்கிய லட்சிய ஜனநாயக கட்சிக்கு, பாஜ உள்ஒதுக்கீடாக காமராஜ் நகர், காரைக்காலில் நிரவி-டிஆர் பட்டினம் தொகுதிகளை ஒதுக்கும் என கூறப்படுகிறது.
லட்சிய ஜனநாயக கட்சியை ஆதரித்து வந்த அமைச்சர் ஜான்குமார், மீண்டும் பாஜ கட்சியிலே களம் இறங்குவார் எனக்கூறப்படுகிறது. இதனை வெளிப்படுத்தும் விதமாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கையில் தாமரை சின்னம் பொறித்த துண்டை அணிவிக்குமாறு கூறி ஜான்குமார் அணிந்து கொண்டார். இந்த தேர்தலில் முதலியார்பேட்டை தொகுதியில் களமிறங்க திட்டமிட்டிருந்த அவர், அந்த தொகுதி பாஜ தொகுதி பங்கீட்டில் பெற்றுள்ளதை வரவேற்கும் விதமாகவும், தனக்கு முதலியார்பேட்டை தொகுதியில் சீட் வழங்கக்கோரியும் ஜான்குமார் பாஜ தலைமையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையே தொகுதி பங்கீடு ஓரளவுக்கு முடிவுக்கு வந்துள்ள நிலையில், தொகுதி உடன்பாடு கையெழுத்திடுவதற்கு முன்பாக ரங்கசாமி, பாஜ தலைமையிடம் சில நிபந்தனைகளை விதித்துள்ளார். ராஜ்யசபா சீட்டும், ஒரு நியமன எம்எல்ஏவும் தங்கள் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என கோரியுள்ளார். இன்னும் சில தினங்களில் டெல்லி சென்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முதல்வர் ரங்கசாமி நேரில் சந்திக்கவுள்ளார்.
அப்போது பிரதமர் புதுச்சேரி வரும் போது, புதுச்சேரிக்கான அறிவிப்புகளை வெளியிடும் வகையில், பல்வேறு கோரிக்கைகளை தெரிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ராஜ்சபா சீட் மற்றும் ஒரு நியமன எம்எல்ஏவை என்.ஆர் காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தவுள்ளதாக கூறப்படுகிறது. தொகுதி பங்கீடு என்ற பெயரில் கடைசிவரை பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்காமல், முன்கூட்டியே வேட்பாளர்களை இறுதி செய்து தேர்தல் பணிகளை முடுக்கி விட தேஜ கூட்டணி திட்டமிட்டுள்ளது.
2021 சட்டசபை தேர்தலின்போது ரங்கசாமியின் என்ஆர் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க பாஜ நெருக்கடி கொடுத்தது. ஆனால் வேட்புமனு தாக்கலுக்கு முந்தைய நாள் வரை இழுத்தடித்தபிறகே கூட்டணியை ரங்கசாமி உறுதி செய்து தொகுதி பங்கீடுகளை முடித்தார். அப்போது, என்.ஆர்.காங்கிரஸ் 16, பாஜ 9, அதிமுக 5 இடங்களில் போட்டியிட்டன. ஆனால் முந்தைய தேர்தலில் 30 தொகுதியில் போட்டியிட்டு 4 இடங்களை பெற்றிருந்த அதிமுகவுக்கு, தேஜ கூட்டணியில் வெறும் 5 இடங்கள் மட்டுமே கிடைத்தது மிகுந்த பின்னடைவாக பார்க்கப்பட்டது. இத்தேர்தலில் என்ஆர் காங்கிரஸ்-10, பாஜ-6 வெற்றி பெற்றது. அதிமுக ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை.
கடந்த பொதுத்தேர்தலில் அதிமுக போட்டியிட்ட 5 தொகுதிகளில் ரங்கசாமி பிரசாரம் செய்யவில்லை. இப்படியாக அதிமுகவை கண்டுகொள்ளாத ரங்கசாமி, 2011ல் ஆட்சி கட்டிலில் அமர அதிமுக துணை நின்றது. ரங்கசாமியை ஆதரித்து ஜெயலலிதா பிரசாரம் செய்தார். இத்தேர்தலில் 15 தொகுதியில் வெற்றிபெற்ற ரங்கசாமி, சுயேச்சை ஆதரவுடன் அதிமுகவை அப்போதே கழற்றிவிட்டு தன்னிச்சையாக ஆட்சி அமைத்தார். இதனால் கோபமடைந்த ஜெயலலிதா, ரங்கசாமியை துரோகி என கடுமையாக சாடியிருந்தார்.
அதன்பிறகு 2016ல் தனித்து போட்டியிட்ட ரங்கசாமி ஆட்சியை இழந்த நிலையில் கடந்த 2021ல் பாஜவுடன் மட்டுமே நேரடி கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது. தற்போது, அதிமுகவுக்கு வெறும் 2 சீட் மட்டுமே ஒதுக்க பாஜ-என்.ஆர்.காங்கிரஸ் முடிவு செய்து உள்ளது. இதுகுறித்து அதிமுக மூத்த தலைவர்கள் கூறுகையில், ‘கட்சி தொடங்கிய 2 மாசம் கூட ஆகல… அந்த கட்சிக்கும் (லட்சிய ஜனநாயக கட்சி) 2 சீட், பாரம்பரிய திராவிட கொள்கை கொண்ட 53 ஆண்டு கட்சியான அதிமுகவுக்கும் 2 சீட்டா?.
இருக்க வேண்டிய தலைவர்கள் இருந்திருந்தால் இதெல்லாம் நடந்து இருக்குமா? எடப்பாடி, பாஜவின் தலையாட்டி பொம்மையாக மாறி உள்ளதால் புதுச்சேரியில் அதிமுகவுக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் எப்படி அதிமுகவின் கதையை கொஞ்சம் கொஞ்சமாக பாஜ முடித்து வருகிறதோ, அதுபோல் புதுச்சேரியில் அதிமுகவின் கதையை இந்த தேர்தலுடன் முடிக்க திட்டமிட்டு வெறும் 2 தொகுதிகள் ஒதுக்கி உள்ளது. எங்களுடன் கூட்டணி வைத்து வந்த பாஜ, முதல்வர் ரங்கசாமியையும் மிரட்டி கூட்டணிக்கு பணிய வைத்துவிட்டு, 10 தொகுதிகளை பெற்று உள்ளது. இதை கேட்க வேண்டிய எடப்பாடி புதுச்சேரியை கண்டுகொள்ளவே இல்லை’ என்று கொந்தளிக்கின்றனர்.
