×

உண்மையான காங்கிரசுக்கும் பழைய காங்கிரசுக்கும் போட்டி: அசாமில் நடக்கும் குஸ்தி

அசாம் மாநிலத்தில் தொடர்ந்து 2 முறை ஆட்சியில் இருக்கும் பாஜ, ஹாட்ரிக் அடிக்க ஆசைப்படுகிறது. அதனால் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மூலம் எதிர்க்கட்சியான காங்கிரசை பலவீனப்படுத்தும் வேலைகள் தொடங்கப்பட்டு விட்டன. முதல்வர் ஹிமந்தாவும் அங்கிருந்து வந்தவர்தானே?. நேற்று வரை அசாம் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த பூபன்போராவை முதல் பந்திலேயே வீழ்த்தி விட்டார் முதல்வர் ஹிமந்தா. அதிர்ந்து போய் இருக்கிறது அசாம் காங்கிரஸ். கட்சியில் இருந்து அவர் ராஜினாமா என்றபோதே மேலிட பார்வையாளர்கள் உள்பட அனைவரும் சென்று சமரசப்படுத்தினர். ராகுல்காந்தியும் போனில் பேசினார். ஆனால் அவர் முடிவு எடுத்துவிட்டு அறிவித்ததால் எதையும் செய்ய முடியவில்லை. பிப்.22ல் பாஜவில் இணைய உள்ளார் பூபன்போரா. இப்போதுதான் காங்கிரசுக்கு நிம்மதி என்கிறார் அசாம் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் முகமான கவுரவ் கோகாய்.

இதனால் கொந்தளித்த போன பூபன்போரா, ‘காங்கிரஸ் தலைவரான கோகாய் இப்போது கட்சியின் வெறும் முகம் மட்டுமே. துப்ரி மக்களவை தொகுதியில் 10 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ரகிபுல் உசேன்தான் இப்போது கட்சியில் எல்லாம். பிப்ரவரி 9ம் தேதி காங்கிரஸ் மாநில பொறுப்பாளர் ஜிதேந்திர சிங் எதிர்க்கட்சி கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து செல்லும் பொறுப்பை என்னிடம் வழங்கினார். மறுநாள் கோகாயிடம் இருந்து ஒரு அழைப்பு வந்தது. நீங்கள் தனியாக கூட்டணி பேச்சு நடத்த வேண்டாம். உங்களுக்கு ரகிபுல் உதவுவார் என்றார். இந்த முடிவை நாகான் காங்கிரஸ் எம்பி பிரத்யுத் போர்டோலோய் எதிர்த்தார். இது எனக்கு பெரிய அவமானம்’ என்றார்.

காங்கிரஸ் மாநில தலைவர் கவுரவ் கோகாய் கூறுகையில், ‘ஆளும் பாஜவில் உள்ள பழைய தலைவர்கள் தற்போது முக்கியமற்றவர்களாக மாறிவிட்டனர். இதற்கு சர்பானந்தா சோனோவால் மற்றும் பலரின் உதாரணத்தை நாம் காணலாம். பூபன் போரா பாஜவில் சேர்ந்தது பற்றி நான் பேசத் தேவையில்லை என்று நினைக்கிறேன். நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் உண்மையான காங்கிரசுக்கும் பழைய காங்கிரசுக்கும் இடையேதான் போட்டி இருக்கும். அசாமில் 15 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் மிகவும் ஊழல் செய்த பழைய காங்கிரஸ் தலைவர்களால் தான் தற்போது பாஜ நிறைந்துள்ளது. அடிப்படையில் இந்த தேர்தலில் நமக்குள் தான் சண்டையிடப்போகிறோம். அசாமின் ஜின்னா தான் முதல்வர் ஹிமந்தா. அவர் அரசியல்வாதிகளுக்கு இந்து சான்றிதழ்களை வழங்குவதை நிறுத்த வேண்டும். பசு வதை கும்பலை ஊக்குவித்து அனுமதிப்பவர் உண்மையான இந்துவாக இருக்க முடியாது’ என்றார்.

* புதுச்சேரியை சூடாக்கும் தேசிய கட்சிகள்
புதுச்சேரியில் ஆளும் என்ஆர் காங்கிரஸ்-பாஜ கூட்டணி வரும் தேர்தலிலும் தொடரும் என்பது உறுதியாகி உள்ளது. வாரந்தோறும் அரசியல் கட்சிகளின் விஐபிக்கள் வருகையால் 2026 பொதுத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் அறிக்கை தயாரிப்புக்கான ஏற்பாடுகளில் பாஜ தீவிரமாக இறங்கி விட்டது. ஆனால் ரங்கசாமியோ இவ்விவகாரத்தில் வாய் திறக்காமல் உள்ளார். கடந்த வாரம் காரைக்காலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்து சென்ற நிலையில் பிரதமர் மோடி மார்ச் 1ம்தேதி புதுச்சேரி வர உள்ளதை புதுச்சேரி பாஜ மாநில தலைமை உறுதி செய்துள்ளது.

இதுஒருபுறமிருக்க எதிர்கட்சியாக உள்ள இந்திய கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரசும் ஆளும் தேஜ கூட்டணி அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளை சுட்டிக்காட்டி தொகுதி வாரியாக பாதயாத்திரை முடித்தது. இந்த பாதயாத்திரையில் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் பங்கேற்றது காங்கிரசாரை உற்சாகமடைய செய்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் வென்றாலும் சமீபகாலமாக சோர்வில் இருந்த காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் மீண்டும் தேர்தல் வேலைகளில் தீவிரம் காட்டத் தொடங்கி உள்ளனர். அடுத்த கட்டமாக ராகுல்காந்தி மற்றும் மல்லிகார்ஜூனா கார்கேவையும் புதுச்சேரிக்கு வரவழைக்க ஏற்பாடுகள் நடக்கிறது. இதேபோல் இடதுசாரிகளும் தங்களது தேசிய கட்சி பிரபலங்களை புதுச்சேரிக்கு வரவழைக்க திட்டம் வகுத்து வருகிறது.

* மேற்குவங்கத்தில் தேர்தல் கமிஷன் தில்லுமுல்லு: திரிணாமுல் காட்டம்
மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர் பயிற்சியின் போது, ​​தேர்தல் அதிகாரிகள் உச்ச நீதிமன்ற உத்தரவுகளை தொடர்ந்து மீறி வருவதாகவும், வாட்ஸ்அப் மூலம் தங்கள் துணை அதிகாரிகளுக்கு உத்தரவுகளை பிறப்பிப்பதாகவும் தேர்தல் ஆணையத்தை திரிணாமுல் மூத்த தலைவர் அபிஷேக் பானர்ஜி கடுமையாக குற்றம்சாட்டி உள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் வாட்ஸ்அப் குழுவின் விவரங்களை வெளியிட்டுள்ள அபிஷேக் பானர்ஜி கூறுகையில், ‘உச்ச நீதிமன்றம் என்ன சொன்னாலும் வெளிப்படைத்தன்மை, உரிய செயல்முறை, அதிகாரப்பூர்வ தகவல் தொடர்புகளைப் பின்பற்றாமல் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. மேற்குவங்க சிறப்பு பார்வையாளர் முருகன் பிறப்பு சான்றிதழ்களை நேரடியாக ஒரு வாட்ஸ்அப் குழுவில் உள்ள மைக்ரோ பார்வையாளர்களுக்கு அனுப்பி ஏற்றுக்கொள்வது குறித்து உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இதனால் மேற்குவங்கத்தில் அதிக எண்ணிக்கை வாக்காளர்களை நீக்க திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது,’ என்றார்.

Tags : Congress ,Assam ,BJP ,Chief Minister ,Himanta Biswa Sarma ,Himanta ,Assam… ,
× RELATED கூட்டணி குறித்து கவலை வேண்டாம்- பிரேமலதா விஜயகாந்த் பேச்சு