- அண்ணாமலையும் சங்க பரிவாரமும்
- சண்முகம்
- சென்னை
- சிபிஎம்
- மாநில செயலாளர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தஞ்சாவூர்
சென்னை: தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில் அண்ணாமலையும், சங்கபரிவார அமைப்புகளும் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல் பட்டியில் உள்ள ஒரு கிறிஸ்தவ அமைப்பால் நடத்தப்படுகிற பள்ளியில் பயின்று வந்த லாவண்யா என்ற மாணவி, 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் தற்கொலை செய்து கொண்டார். அப்போது பாஜ மாநில தலைவராக இருந்த அண்ணாமலையும், விசுவ இந்து பரிசத், இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகளும் அது ஒரு மதமாற்ற நிர்பந்தத்தினால் ஏற்பட்ட தற்கொலை என்று பேசியதோடு, கிறிஸ்தவ சேவை அமைப்புகளின் மீது வன்மத்தை கக்கிக் கொண்டிருந்தனர். பாஜ தலைவர் நட்டா உத்தரவின் பெயரில் பாஜ தேசிய விசாரணை குழுவும் வந்து சென்றது.
இதையொட்டி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் சிபிஐ விசாரிக்கட்டும் என்று உத்தரவிட்டார். இப்போது இந்த வழக்கில் சிபிஐ தனது முடிவுகளை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறது. அதில், லாவண்யாவின் மரணத்திற்கு மதமாற்ற முயற்சி காரணம் இல்லை. மாணவி பேசிய எந்த ஒரு வீடியோவிலும் மத மாற்றம் பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை, 2010ம் ஆண்டு முதல் பள்ளியில் படித்து வெளியேறிய மாணவர்களின் சான்றிதழை ஆய்வு செய்ததில் ஒருவர் கூட மதம் மாறவில்லை, லாவண்யாவின் சித்தி, தந்தை ஆகியோர் பாஜ தலைவர்களின் நிர்ப்பந்தத்தால் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர் என்று தனது முடிவுகளை சமர்ப்பித்துள்ளது. எனவே, இந்த பிரச்னையை மத மோதல் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு பிரசாரம் செய்து கொண்டிருந்த பாஜவின் அப்போதைய மாநில தலைவர் அண்ணாமலையும், சங்பரிவார அமைப்புகளும் தமிழ்நாட்டு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
