×

குற்றப்புகார் மீது டிஜிபி, சேலம் போலீஸ் கமிஷனர் அறிக்கை தருமாறு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை

சென்னை, பிப்.19: ஜெயசீலன் கோபால் கிருஷ்ணன் என்பவர், ரோட்டரி கிளப்புக்கு எதிராக அளித்த புகாரின் அடிப்படையில், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி, சேலம் கன்னங்குறிச்சி காவல் ஆய்வாளர் மற்றும் சேலம் மாநகர காவல் துறை ஆணையர் ஆகியோருக்கு எதிராக, குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று சேலம் 4வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சேலம் 4வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பூவராகவன், தமிழக டிஜிபி, சேலம் மாநகர காவல் ஆணையர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்யுமாறு கடந்த மாதம் 6ம் தேதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து, அப்போது சேலம் மாநகர காவல் ஆணையராக இருந்த பிரவின் குமார் அபினபு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, காவல்துறை தரப்பில் அரசு குற்றவியல் வழக்கறிஞர் எஸ்.சந்தோஷ் ஆஜராகி, ஒரு புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யவில்லை என்பதற்காக மட்டுமே, காவல் அதிகாரிகளுக்கு எதிராக குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கோர முடியாது. அவ்வாறு வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்றால், உரிய நீதிமன்றத்தை அணுகி வழக்கு பதிவு செய்யுமாறு உத்தரவிடக் கோரலாம். ஆனால், காவல்துறையினர் மீது நேரடியாக குற்றவழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட முடியாது. உயர் நீதிமன்றத்துக்கு உள்ள அதிகாரங்களை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பயன்படுத்த முடியாது. சட்ட வரம்புகளுக்குள் மட்டுமே உத்தரவு பிறப்பிக்க முடியும் என்று வாதிட்டார். இந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சேலம் 4வது மாஜிஸ்திரேட் நீதிபதி பூவராகவன், தமிழக டிஜிபி மற்றும் சேலம் மாநகர காவல் ஆணையரிடம் அறிக்கை கோரி பிறப்பித்த உத்தரவுக்கு, இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

Tags : Court ,DGP ,Salem Police Commissioner ,Chennai ,Salem Kannankurichi Police ,Salem Municipal Police Commissioner ,Jayaseelan Gopal Krishnan ,Rotary Club ,
× RELATED 5 வயது மகளுடன் இளம்பெண் மாயம்